கழுகார்: மிரட்டி சீட் வாங்கிய பாஜக புள்ளி டு ஐடியா சொன்ன மாஜி; கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்!
மதுரையில் பா.ஜ.க-வின் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது. அப்போது, மேடையில் 18 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தனவாம். ஆனால், பா.ஜ.க மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ‘லிங்க’ புள்ளிக்கு இருக்கை போடப்படவில்லையாம்.
டென்ஷனான ‘லிங்க’ புள்ளி, ‘எனக்கு மேடையில் இடம் கொடுக்கவில்லை என்றால் நடப்பதே வேறு...’ என நிர்வாகிகளிடம் மிரட்டும் தொனியில் கத்தினாராம். அதையடுத்து, அமித் ஷாவின் பாதுகாப்பு டீமிடம் அனுமதி பெற்று கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, 19-வது இருக்கை போடப்பட்டதாம். ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு, இப்படி பகிரங்கமாக மிரட்டுகிறாரே... கட்சிக்காரர்களும் மீடியாக்காரர்களும் என்ன நினைப்பார்கள்..?’ என நொந்துகொள்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் சிலர், தங்களின் போட்டோவைப் பின்னணி இசையுடன் பதிவிட்டு விளம்பரம் செய்துவருகிறார்கள். காவல்துறைக்குள் ஒழுங்கீனம் அதிகரித்துவிட்டதாகச் சர்ச்சைகள் வெடித்ததைத் தொடர்ந்து, தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்டக் காவல்துறையினருக்கும் சமீபத்தில் ஓர் சுற்றறிக்கை அனுப்பட்டது.
அதில், ‘சமூக வலைதளப் பக்கங்களில் காவல்துறை சீருடையுடன் யாரும் எந்தப் பதிவும் செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது காக்கி மேலிடம். ‘ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டாலும், மத்திய மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளைக் குறிவைத்துதான் இந்தச் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று கிசுகிசுக்கிறார்கள் டி.ஜி.பி அலுவலக விவரப் புள்ளிகள்!
சூரியக் கட்சியில், இளைஞரணி நிர்வாகிகள் செய்யும் அட்ராசிட்டியை, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ரசிப்பதில்லை. ஏற்கெனவே அவர்களுடன் ஒரு ஈகோ மோதல் இருந்துவரும் நிலையில், சமீபத்தில் காணொளிக் காட்சி வழியாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கொங்கு மாஜி, ‘ஒவ்வொரு பி.எல்.சி உறுப்பினர்களுடன் கூடுதலாக இளைஞரணி நிர்வாகி ஒருவரையும் இணைத்தால், அந்த பூத்தில் பணி செய்ய எளிமையாக இருக்கும். எனது மாவட்டத்தில் அதனைச் செய்திருக்கிறேன்’ என்றிருக்கிறார்.
இதைக் கேட்ட தலைமை, ‘எல்லா மாவட்ட அமைப்புகளிலும் அதையே பின்பற்றுங்கள்’ என்று உத்தரவுபோட்டுவிட்டது. ‘ஏற்கெனவே, கட்சிக்குள் இளைஞரணி நிர்வாகிகளின் அட்ராசிட்டி தாங்கமுடியவில்லை. இப்போது தலைமைக்கு ஐஸ் வைப்பதற்காக, பூத் கமிட்டியில் இளைஞரணி நிர்வாகிகளைச் சேர்த்திருக்கிறேன் என்கிறார் அந்த மாஜி. அவரால் எல்லோருக்கும் இடைஞ்சல் வந்துவிட்டதே!’ என ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம் சீனியர்கள் பலரும்!
மஞ்சள் மாவட்டத்தில், பட்டியல் சமூகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி, ஜூனியர் மாண்புமிகு தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதற்கு, அந்த மாவட்டத்தின் ஆளுங்கட்சி ‘தோப்பு’ புள்ளிக்கு அழைப்பு கொடுத்தும் அவர் பங்கேற்கவில்லையாம். அரசு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும், அங்கு முதல் ஆளாக நிற்கும் ‘தோப்பு’ புள்ளி, இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கான பின்னணியில், சாதிய மனோபாவம்தான் காரணம் எனப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்கள் குற்றசாட்டுகளை எழுப்பின. தொடர்ந்து, அதை எதிர்த்துப் போராட்டங்களை அறிவித்தன. இதனால் பதறிப்போன ‘தோப்பு’ புள்ளி, மாவட்டத்தின் முத்தான அமைச்சரின் உதவியை நாடியிருக்கிறார். அவர், சம்பந்தப்பட்ட பட்டியலின இயக்கங்களை அழைத்து சமாதானம் பேசி, போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாராம்!
தமிழகக் காவல்துறைக்குள், பெரும் புயலைக் கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம், மீண்டும் வேகமெடுக்கிறதாம். மதுரை க்யூ பிராஞ்ச் விசாரணையிலுள்ள இந்த விவகாரத்தை, தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றுவதற்கு, டெல்லியில் ஆலோசனை நடக்கிறதாம். அதற்கு, சென்னையிலிருந்தே சில காக்கிகள் பாயின்ட்டுகளை எடுத்துக்கொடுக்கிறார்களாம். ‘ஆளும் தரப்போடு மிக நெருக்கமாக இருக்கும், ஒரு சீனியர் அதிகாரியின் உறவினர் பெயரிலுள்ள டிராவல் ஏஜென்சியை விசாரியுங்கள். பல விவகாரங்கள் சிக்கும்’ எனச் சில தரவுகளை டெல்லிக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்களாம். இதனால், கிலியில் இருக்கிறாராம் அந்த சீனியர் அதிகாரி!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


