“அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்...’’ - “நாங்கள், பிள்ளைபெறும் எந்திரங்களா?’’

சில மாதங்களுக்கு முன், ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தால் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு வெளியிட்ட கருத்துகள், சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பின.

‘குழந்தையைப் பெற்று வளர்க்க சமூகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்யாமல், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வது என்ன நியாயம்?’ என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், “இரண்டுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும்; அரசுப் பணியில் இருக்கும் பெண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்; ஒவ்வொரு மகப்பேறுக்கும் குழந்தையின் தாய்க்கு ரூ15,000 சன்மானம் கொடுக்கப்படும்; இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு நிதி சலுகைகள் வழங்கப்படும்“ என்றெல்லாம் திட்டங்களை விரைவில் செயல்படுத்தப் போவதாக அறிவித்து மீண்டும் பரபரப்புக் கிளப்பியுள்ளார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு.

‘இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியைத் தொட்டு விட்டது’ என்கிற தகவல் நேற்று முன்தினம்தான் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் பெண் முன்னேற்றம் குறித்த ஆக்கபூர்வ விஷயங்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள், மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யும் மெஷின்களாக பெண்களைப் பாவித்து இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது.. சமூக அவலமே. இத்தகைய பிற்போக்குத்தனமான பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவது பன்னெடுங்காலமாகப் போராடி படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் பெண்களைக் கீழ்நோக்கி இழுப்பதாகவே உள்ளது.

சந்திரபாபு போன்றவர்களின் கருத்துகளைக் கண்டித்து மார்ச், 11- தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளியான சிறப்புக் கட்டுரை, உங்கள் பார்வைக்கு....

உயர் பதவிகளிலும் தலைமைப் பொறுப்புகளிலும் இருப்பவர்களுக்கு சமுதாய பிரச்னைகள் குறித்த விஷயங்களில் சமத்துவ பார்வை இருக்க வேண்டியது அடிப்படை தகுதி. பாலின பேத பார்வையோடு எந்தக் கருத்தையும் முன்வைக்கக்கூடாது என்பது அமெரிக்க அதிபர் முதல் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்வரை பலருக்கும் தெரியாதது சமூகத்தின் சாபக்கேடு. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அத்தகைய கருத்தொன்று பலராலும் அபத்தத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்கப்படுத்த, இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கும் நபர்கள், உள்ளாட்சி (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) தேர்தலில் போட்டியிட தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தால் மக்கள் தொகை அதிகரிக்கும்” என்ற சந்திரபாபு நாயுடுவின் கருத்து, சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ‘குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், சமுதாயம் அழியாமலிருக்க, பெண்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

குழந்தைப்பேறு என்பது ஆண்-பெண் இருவர் சம்பந்தப்பட்டது என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்வது தொடங்கி, குழந்தையை வளர்ப்பது, குழந்தைக்காக தியாகங்களை மேற்கொள்வது, குழந்தை பெற்றால்தான் வாழ்க்கையே முழுமையடைவதாக நம்பவைப்பது என எல்லா அழுத்தங்களும் காலங்காலமாக பெண்கள் மீதே வைக்கப்படுகின்றன. பெண் கல்வி, பெண் முன்னேற்றம் குறித்த ஆக்கபூர்வ விஷயங்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்களின் இத்தகைய பிற்போக்குத்தனமான பேச்சு, பன்னெடுங்காலமாகப் போராடி படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் பெண்களின் கால்களைக் கீழ்நோக்கி இழுப்பதாகவே உள்ளது.

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் மெஷின்களா... குழந்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பெண்களின் நிலைப்பாடு என்ன, சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை... பல விஷயங்களையும் அலசுகிறது இந்தக் கட்டுரை.

‘`குழந்தையில்லாத வாழ்க்கை ஒருவகை சுதந்திரம்!’’ - கீதா இளங்கோவன், சமூக செயற்பாட்டாளர்

“23 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் இணையரும் இணைந்து வாழ முடிவெடுத்த போதே, குழந்தை வேண்டாம் என்ற முடிவையும் எடுத்துவிட்டோம். அப்போது நான் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பணி நிமித்தம் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க நேரிடும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காகவும் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். குழந்தை இல்லாதது ஒரு பெண்ணுக்கு நிறைய சுதந்திரத்தைக் கொடுக்கும். ‘வயதான காலத்தில் தனிமைப்பட்டுப் போயிடு வீங்க’, ‘இந்த டாக்டரை பாருங்க’, ‘அந்த ஹாஸ்பிட்டலுக்கு போங்க’, ‘ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கோங்க’ என்றெல்லாம் அறிவுரை சொன்னார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பார்வை மாறவில்லை. குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பவர்களை சுய நலம் பிடித்தவர்கள் என்கிறார்கள்.

குழந்தை விஷயத்தில் பெண்களுக்கு சமூக ரீதியான அழுத்தம் தொடர்கிறது. ஒரு பெண் கல்யாணம் செய்ய சம்மதிக்கிறாள். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று சொன்னால், ‘அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிற’ என்பார்கள். திருமண உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும் தானா? நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் அனைவரும் சமூகத்துக்குப் பங்களித்துக்கொண்டுதான் இருக்கிறோம். குழந்தை பெற்றுக்கொண்டுதான் அந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றில்லையே என்கிறார் கீதா இளங்கோவன்.

“என் உடல்நலன்தான் முக்கியம்” - ஷோபா, அரசு ஊழியர்

“கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் வரைதான் எல்லாரும் அமைதியாக இருந்தார்கள். அதற்குப் பிறகு ‘அந்தக் கோயிலுக்குப் போங்க’, ‘மாற்று மருத்துவம் பாருங்க’, ‘துரியன் பழம் சாப்பிடுங்க’ என அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள். சுகா தாரத் துறையில் வேலை பார்ப்பதால் மகப்பேறு பற்றிய விவரங்கள் எனக்கே தெரியும். இருந் தாலும் அழுத்தம் தாங்காமல் மற்றவர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்தேன். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகன் பிறந்தான்.

கர்ப்பகாலம் முழுவதும் சிக்கலாகவே இருந்தது. அதனால் மருத்துவச் செலவுகளும் அதிகமாயின. குழந்தை பிறந்த பிறகும் ஆறு மாத காலத்துக்கு எடுக்க வேண்டிய இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை நான் எடுக்கவில்லை. எனவே, அடுத்த கர்ப்பத்தில் இன்னும் பலவீன மாக இருப்பேன் என்று தெரிந்தது. என்னுடைய உடல்நலனின் முக்கியத்துவம் புரிந்தது. முதல் கர்ப்பகாலத்தைப் போன்ற சிக்கல்களையும் சிரமங்களையும் மீண்டும் அனுபவிக்க விரும்ப வில்லை. ஆறு மாதங்கள் மட்டுமே பிரசவ கால விடுப்பு கிடைத்தது. அதன்பிறகு குழந்தையை வளர்க்க யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் யோசித்து தான் ஒரு குழந்தையே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்’’ என்கிறார் அரசு ஊழியர் ஷோபா.

“மகப்பேறு விடுமுறை... சலுகையல்ல, உரிமை!” யாமினி, மனிதவள ஆலோசகர்

“திருமணத்தின்போது வேலையை விடும் பெண்களின் எண்ணிக்கையை விட, மகப்பேறு காலத்தில் வேலையை விடும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மகப்பேறும், குழந்தை வளர்ப்பும் பெண்களைச் சார்ந்த விஷயங்களாக நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு நிறுவனம் என்று வரும்போது, மகப்பேறு விடுப்பு, அதன் பின் பெண்கள் எடுக்கும் விடுப்புகள், குழந்தையின் உடல்நலனை காரணம் காட்டி தாமதமாக வருதல் போன்றவற்றை எல்லாம் நேர இழப்பாகவே பார்ப்பார்கள். மகப்பேறு காலத்தில் பெண்கள் எடுக்கும் விடுமுறையை சலுகைகள் என்று தானே சொல் கிறோம்... உரிமையென்று சொல்ல முடிவ தில்லையே. அதனால்தான் பெரும்பாலான நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின்போதே, ‘நீங்கள் சமீபத்தில் திருமணமானவரா?’, `குழந்தைக்கு எப்போது திட்டமிடுகிறீர்கள்?’, முதல் குழந்தை இருந்தால், ‘இரண்டாவது குழந்தைக்கான திட்டமிடல் இருக்கிறதா?’ என்பன போன்ற கேள்விகள் ஹெச்.ஆர் தரப்பில் இருந்து கேட்கப்படுகின்றன. வேலையில் சேர்வதிலேயே ஆண் - பெண் சமத்துவம் இல்லை. பதவி உயர்வு என்று வரும்போது முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றுவிட்டால் நிறுவனம் என்ன செய்யும், பதவி உயர்வு கொடுத்தபின் மகப்பேறு விடுப்பில் சென்றால் அதிக ஊதியத்துடன் விடுமுறை கொடுக்க வேண்டியிருக்கிறதே என்றெல்லாம் பல நிறுவனங்கள் சிந்திக்கின்றன.

பாலூட்டும் அறை என்பதோ, வேலை நேரத்தில் குழந்தைகளை அலுவலகங்களிலேயே பராமரிக்க டே-கேர் செட்டப் என்பதோ பல நிறுவனங்களில் இருப்பதில்லை. அரசாங்க அலுவலகங்களிலேயேகூட இந்த வசதிகள் எல்லாம் இல்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும், இரண்டாவது குழந்தை அவசியமா என்றும் யோசிக்கும் நிலைக்கும் பெண்கள் வந்துள்ளனர். குழந்தை வளர்ப்பு என்பது பெண் களின் கடமையாக மட்டும் பார்க்கப்படுவதே எல்லாவற்றுக்கும் காரணம்... பெண்களுக்கும் கரியர் குறித்த கனவு இருக்கும் என்பதை குடும்பமும், சமூகம் உணர வேண்டும். குழந்தை வளர்ப்பில் துணையாக நிற்பதும், பெண்ணை கேள்வி கேட்பதை நிறுத்துவதும்தான் தீர்வாக இருக்கும்’’ என்கிறார் யாமினி.

“பொறுப்பை ஆண்கள் கையில் எடுக்கலாம்!” வடிவழகன், ஹோம் மேக்கர்

“நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்தவர்கள். அதனால் குடும்பத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. என் மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆராக இருக்கிறார். நான் போட்டோகிராபர். எங்களுக்கு குழந்தை பிறந்திருந்த நேரத்தில் மகப்பேறு விடுமுறை இருந்தவரை என் மனைவி குழந்தையைப் பார்த்துக் கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுமுறை முடிந்து அவர் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. அதனால் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். என் மனைவி வீட்டுக்கு வந்த பிறகு குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு பகுதி நேரமாக போட்டோகிராபி செய்ய ஆரம்பித்தேன்.

இப்போது என் மகனுக்கு பத்து வயது. மகளுக்கு ஆறு வயது. குழந்தைகளை பள்ளிக்குத் தயார் செய்வது, பாடங்கள் சொல்லிக் கொடுப்பது, சமைப்பதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். என் மனைவியின் ஊதியமே எங்கள் வீட்டில் பிரதானம். நான் கிடைக்கும் நேரத்தில் என் வேலையைச் செய்கிறேன். இதை வெளியில் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், சமூக அழுத்தங்கள், கேலி, கிண்டல்கள் இல்லாமலில்லை. நாங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. பல பெண்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக கரியரை விட்டு ஒதுங்கும் சூழலில், என் மனைவி பல ஆண்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பதை நான் பெருமையாகத்தான் பார்க்கிறேன். குடும்பத்துக்காக ஆண் தான் சம்பாதிக்க வேண்டும், பெண் வீட்டில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. குடும்பத்திற்காக யார் வேண்டுமானாலும் உழைக்கலாம். இந்த நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும்” என்கிறார் வடிவழகன்.

“மருத்துவக் கட்டமைப்பை சீர் செய்யுங்கள்!” - ஏ.ஆர்.சாந்தி, மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய செயலாளர்

“இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது. வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்த முடிவை எடுப்பதற்கும் காரணங்கள் வேறு. நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மத்தியில் வேலை யில்லாத் திண்டாட்டம், ஒப்பந்தப் பணி, நிலையில்லாத வேலை, குறைந்த ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இதனால் திருமணம் செய்வதையே தள்ளிப்போடுகிறார்கள். பொருளாதார சிக்கலோடு திருமணத்துக்குள் நுழையும்போது, குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுகிறார்கள், அதிக குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ‘திருமண கடனையே இன்னும் அடைக்கவில்லை. இப்போது குழந்தை வேண்டாம்’ என்று கருக்கலைப்பு செய்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

குழந்தையின்மை பிரச்னையும் அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை சிகிச்சை என்பது தனியார்மயமாகவும், மிகவும் செலவு வாய்ந்ததாகவும் உள்ளது. ஒரு சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றால், அதைத் தயார் செய்யும்வரை சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். குழந்தையின்மை சிகிச்சைக்குப் பிறகு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கும் அதிகம் செலவாகிறது. இரண்டாவது குழந்தைக்கும் அதே நிலை ஏற்படும் என்பதால் இன்னொரு குழந்தையைத் தவிர்க்க நினைக்கிறார்கள்.

கூட்டுக்குடும்ப முறை குறைந்துவிட்டது. இதனால் குழந்தையை வளர்க்க ஆள் இல்லை. வேலைக்கு ஆட்கள் வைத்து பார்த்துக் கொள்வதற்கான பொருளாதார நிī

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.