Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என் மாமனாருக்கு இதுவரை ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரியவில்லை. அவர் எந்த அசௌகர்யத்தையும் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் இப்படிச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒருவருக்கு அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மாரடைப்பின் அறிகுறி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு அறிகுறிகள் எதையும் காட்டாமல் வரலாம். சிலருக்கு அது வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டலாம்.

உதாரணத்துக்கு,  நெஞ்செரிச்சல், முதுகுவலி, கைகளில் மட்டும் குடைச்சல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளாகவும் வெளிப்படலாம். அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி என்பதை உணராமலேயே சிலர் அதிலிருந்து மீண்டிருப்பார்கள். இது போன்ற அறிகுறிகள் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரலாம். 

உங்கள் மாமனாருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். மாரடைப்பு என்றதுமே தாங்க முடியாத நெஞ்சுவலி, வலது தோள்பட்டையில் வலி, அது கைகளுக்குப் பரவுதல் போன்ற பிரதான அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. ஆனால், ரத்தக்குழாய் மூடியிருக்கும். வேறொரு சந்தர்ப்பத்தில் இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பகுதி சரியாகச் செயல்படாமலேயோ, இசிஜியில் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாறுதல்கள் இருப்பதோ தெரியவரும்.

இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும்.

எனவே, உங்கள் மாமனாருக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்திருப்பதால் இனி நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். மாமனாருக்கு எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என பரிசோதனை செய்து பார்க்கவும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார்.  அதன்படி தேவையான டெஸ்ட்டுகளை செய்துபார்த்து மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளைப் பின்பற்றச் சொல்லுங்கள். மீண்டும் இதே பாதிப்பு வராமல் தடுப்பதற்கான விஷயங்களைப் பின்பற்ற அறிவுறுத்துங்கள். அதை செகண்டரி ப்ரிவென்ஷன் (Secondary prevention) என்று சொல்வோம். உணவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரை கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.