ரயில் கிளம்பிய போது ஓடி வந்து ஏற முயன்ற இளம்பெண்; தவறியதால் கால் துண்டான பரிதாபம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நீலா (வயது: 27). இவர், நேற்று (ஜூன்-8) மதியம் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலில், திருச்சி வரை பயணம் செய்து வந்தார்.

ரயில் மாலை 4.30 மணி அளவில், குளித்தலை ரயில் நிலையம் வந்தபோது குடிநீர் பிடிப்பதற்காக இறங்கி பிளாட்பார்மில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால், பதறிய நீலா ஓடும் ரயிலில் மீண்டும் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து ரயிலின் சக்கரத்தில் அவரது வலது கால் சிக்கி துண்டானது.

neela

வலியில் துடித்த அந்த பெண்ணை அங்கு பணியில் இருந்த ரயில்வே நிலைய அதிகாரிகள் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மேலும், முதலுதவி சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் நீலா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் முன்னர், ரயில்வே நிலைய பணியாளர்கள் முறையாக முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாததே இந்த விபத்துக்கான காரணம் என அங்குள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் கிளம்பிய ரயிலில் எற முயன்று விபத்துக்குள்ளாகி வலது காலை இழந்துள்ள சம்பவம், அவரது உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.