கோழிக்கோடு கப்பல் விபத்து: தானாகத் தீப்பிடிக்கும் ரசாயனங்கள்; அதிகாரிகள் சொல்வது என்ன?
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற வாங் ஹை 506 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு பேப்பூர் துறைமுகத்திலிருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் இன்று காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. சிங்கப்பூர் நாட்டுக் கொடியுடன் கூடிய அந்த கப்பல் விபத்தில் சிக்கியது குறித்து மும்பை துறைமுகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றன. முதல் தளத்தில் உள்ள டெக்கில் இருந்த கண்டெய்னரில் வெடி விபத்து ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்துக்குள்ளான சரக்கு கப்பலிலிருந்து 22 ஊழியர்களும் கடலில் குதித்தனர். அவர்களில் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 20 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன.
கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் ரசாயனப் பொருட்கள், திரவங்களும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் சீனா, தைவான், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
உரசினால் தீப்பிடிக்கும் ரசாயனங்களும், காற்றில் கலந்தால் தீப்பிடிக்கும் ரசாயனங்களும் கப்பலில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
சுவாசித்தாலே மரணம் ஏற்படும் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் கப்பலில் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அருகில் சென்று தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்ணூர் அழிக்கல் துறைமுக அதிகாரி அருண்குமார் கூறுகையில், "கொழும்பிலிருந்து மும்பைக்கு அருகே உள்ள நவாசேவா துறைமுகத்துக்குச் செல்லும் சரக்கு கப்பல் விபத்தில் சிக்கி உள்ளது. கப்பலிலிருந்த 22 பேரில் இந்தியர்கள் யாரும் இல்லை.

கண்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் உள்ளன. கிளாஸ்-3 என்ற எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள திரவங்களும், கிளாஸ் 4.1 என்ற தீப்பிடிக்க வாய்ப்புள்ள திடப்பொருட்களும், தாமாகவே தீப்பிடிக்க வாய்ப்பு உள்ள கிளாஸ் 4.2 வகை பொருட்களும், கிளாஸ் 6 என்ற விஷம் பரப்பும் ரசாயனங்களும் அந்த கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் உள்ளதாக விபரம் தெரியவந்துள்ளது.
கண்ணூர் லைட் ஹவுஸ் பகுதியிலிருந்து சுமார் 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான கப்பல் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. கோழிக்கோடு பேப்பூர் துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படையினர் மீட்புப்பணிக்காகச் சென்றுள்ளனர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


