Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்கிறாள் என் தோழி. வெளிநாட்டில் வசிக்கிற அவள், கருத்தரிப்பதைத் தவிர்க்க, அங்கெல்லாம் இந்த முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள்  குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும்.

21 நாள்கள் சுழற்சியில்  ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள், இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில்,  அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம்.  முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.  

6வது, 7வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம்.

கருமுட்டையானது ரிலீஸ் ஆனதும், ஒரே ஒரு நாள் மட்டுமே அது இனப்பெருக்க மண்டலத்தில் உயிருடன் இருக்கும். அதுவே, உயிரணுவானது, 3 நாள்கள்வரை உயிருடன் இருக்கும். எனவே,  அண்டவிடுப்புக்குப் பிறகு உடனடியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டாலோ அல்லது  3 நாள்களுக்கு முன்னரே தாம்பத்திய உறவில் ஈடுபட்டாலோ, அந்தப் பெண்ணின் உடலில் உயிரணு உயிர்ப்புடன் இருக்கும்வரை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருப்பது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.