Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, வயிறு சுருங்கிடுச்சு.. என்பது சாத்தியமா?
Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. வயிறு சுருங்கிடுச்சு... என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா....? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்... வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
அடல்ட் எனப்படும் வளர்ந்த ஒருவரின் இரைப்பையின் கொள்ளளவு 1.5 முதல் 2 லிட்டர் வரை இருக்கும். இது அதிகபட்சமாக 4 லிட்டர் வரை விரிவடைய வாய்ப்பு உண்டு.
ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள்.
நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் கிரெலின் (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும் பசி உணர்வு ஏற்படும். நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.

இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும்.
இந்த உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. தவிர, உடல் பருமனைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். எனவே, இதில் வயிறு 1.5 லிட்டரைவிட குறைவாகச் சுருங்கவோ, 4 லிட்டரைவிட அதிகமாக விரியவோ மாற வாய்ப்பில்லை. அவரவர் உடல் எடை, ரத்தச் சர்க்கரை அளவு, ஹார்மோன்கள் சுரக்கும் அளவு போன்றவற்றைப் பொறுத்து இது மாறும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

