ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர் குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீதரின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க பொய்யாகுளம் தியாகுவுக்கும் ஸ்ரீதரின் இன்னொரு கூட்டாளியான தினேஷ்குமாருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த ரௌடி வசூல்ராஜா என்பவர் பட்டபகலில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 13பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் பொய்யாகுளம் தியாகுவை போலீஸார் தேடிவந்தனர்.

தியாகுவின் மனைவி அனுப்பிய புகார்

இந்நிலையில் காஞ்சிபுரத்திலுள்ள பல்வேறு பிரபல துணி கடைகளில் தியாகுவின் பெயரைச் சொல்லி அவரின் டீம் மாமூல் வசூலிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கஞ்சா வியாபாரியான ROBERRY கார்த்திக், யுகேஷ், சௌந்தரராஜன்,விஷ்வா ஆகியோர்தான் மாமூல் வசூலிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பொய்யாகுளம் தியாகு தலைமறைவாக இருக்கும் இடம் குறித்து தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அங்குச் சென்று தியாகுவை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற தியாகுவுக்கு கால், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் தியாகுவை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

தியாகுவை போலீஸார் பிடித்த தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி சுதா என்பவர் டிஜிபி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதில், ``நானும் அவரும் போனில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்தான் போலீஸார் அவரைப் பிடித்து சென்றுவிட்டனர். தற்போது அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அங்கே கை, கால்கள் முறிவு ஏற்பட்டவாறு மாவு கட்டு போடப்பட்டு சிறையில் அடைத்திருக்கின்றனர். என்னுடைய கணவர் பொய்யாகுளம் தியாகுவை போலீஸார் என்கவுன்ட்டர் செய்யப்போவதாக தகவல் வருகிறது. எனவே என் கணவரைக் கண்டுபிடித்து அவரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில்தான் மாவுகட்டுடன் தியாகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் குடும்பத்தினர் அங்குச் சென்றனர். தியாகுவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.