`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா! - டபிள்யூ.பி.யேட்ஸ்|கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 11
கவிஞராகப் பிறக்க வேண்டுமென்பது ஒரு தேர்வல்ல. அது ஒருவருக்குள் விதைக்கப்படும் விதை. அந்த விதை பருவமழையை நாடித் தானாகவே விழித்துத் துளிர்க்கிறது. உற்றவருக்கே தெரியும் அதன் சிராய்ப்பும், சிதைவும். ஒரு கவிதை பிறக்க வேண்டுமென்றால், அந்த விதை, தானாகவே படைப்பு மாடத்திற்குள் விழ வேண்டும். சில நேரங்களில் தூய்மையான மழையைப்போல இனிமையானதாக இருக்கலாம். பெரும்பாலும் அது இரவின் இருள்போல வேதனையுடனேயே வருகிறது. அந்த இருளுக்குள் பயந்து திகைத்து நிற்காமல், அதைக் கடந்து, நுழையத் துணியும் ஒருவரால் மட்டுமே நிஜத்தில் கவிதையோடு வாழ முடியும். அவை வெறும் சொற்கள் மட்டுமல்ல; வாழ்ந்ததற்கான சாட்சியம்.
கனவுகளுக்குள் தன்னை மறந்து பயணிக்கும்போது மட்டுமே, ஒரு கவிஞனின் உள்ளுணர்வு பேரிலக்கியமாகக் கண்ணீரோடு கலந்து வெளிப்படுகின்றன; அதன் வெளிப்பாடுகள் காலத்தின் குரலாக, சமூகத்தின் உள்மனதைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக நின்றுகொண்டிருக்கின்றன.
அயர்லாந்தைச் சேர்ந்த கவிஞர், நாடக ஆசிரியர், இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியச் சிந்தனையாளர்; கவிநுட்பத்தையும் நுண்ணியக் கட்டமைப்பையும், தத்துவார்த்தம், அரசியல் உணர்வோடு இணைத்துத் தனது மேதைமையைச் சாதித்தவர் யேட்ஸ்.
ஒரு சிராய்ப்பான இரவு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் அமைதியான அரங்கிற்குள் அலமாரிகளைத் துழாவிக் கொண்டிருந்தபோது யேட்ஸின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கையில் கிடைத்தன.. அதுவரை வாசித்த கவிதைகள் போல் அல்லாத, தற்செயலாகக் கண்ணுக்குப் பட்ட வரிகளைத் தொடர்ந்தேன். பட்டு நெசவினைப் போல் பேசுபொருள்களும் அவை உருவாக்கும் சித்திரங்களும் ஒன்றாகப் பின்னும் உணர்வு.
யேட்ஸின் கவிதைகள், கனவுகளின் ஓசைகளாகச் சுற்றுபவை. அவருடைய காதல் அணைத்துவிட முடியாத ஏக்கம், முடிக்க முடியாத உரையாடல். காற்றைப் போலச் சறுக்கிச்செல்லும் உணர்வைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த சொற்கள், உருக்கமான பிம்பங்களாக உருவெடுக்கின்றன. ‘Never give all the heart’ என்னும் கவிதை, உங்கள் முழு மனதையும் ஒருவருக்குக் கொடுக்காதீர்கள் என்கிறது. ஒருவரை ஒருபோதும்

முழுமனதுடன் நேசிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையாக இந்தக் கவிதையைப் படிக்கலாம்.
மௌட் கோன் மீது கொண்ட காதல், ஒருபுறம் நிறைவேறாத ஏக்கத்தில் பிறந்த வரிகள்,
“But I, being poor, have only my dreams;
I have spread my dreams under your feet;
Tread softly because you tread on my dreams."
எதிரில் தென்படுகின்ற யார் யாரோ நமது கனவுகளின் மீதும் ஏறி மிதித்து நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படியான தருணங்களைக் கடந்து, நொறுங்கிய இடங்களை மெல்லிய இசையாக யேட்ஸ் மீட்டுகிறார். அவரின் பணிவும் பொறுமையும் கண்ணீராக வழிகிறது. தங்க, வெள்ளி நூல்களால் நெசவுசெய்யப்பட்ட வானமென்னும் பூவேலைப்பாட்டில் இரவும் பகலும் ஒளிர்கிறது. என் கனவுகளை உங்களது காலடியில் விரித்திருக்கிறேன். நீங்கள் என் கனவுகளை மிதிப்பதாக இருந்தால் அதை மெதுவாக மிதியுங்களென்று சொல்லும் யேட்ஸ் உருகும் இடம் மாண்பு.
எனக்குச் சில நேரங்களில் எழுத முடியாமல் தவிக்கும்போது, என் மனத்தின் ஒரு மூலையில் யேட்ஸ் அமர்ந்திருப்பது போல உணர்ந்ததுண்டு. எப்படி? “எழுது… எதையும் விட்டு விடாதே. உணர்வுகள் கூடிவந்தால் விட்டுவிடாதே.” என்ற குரல். முன்பெல்லாம் தலையணைக்கடியில் ஒரு நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். ஏதேனும் நல்ல வரிகள் தோன்றும்போது ‘விட்டு விடாதே’ எனத் துரத்திப் பிடித்து எழுதிவிடுவதற்காகத்தான். இப்போதெல்லாம் திறன்பேசியிலிருக்கும் ‘நோட்புக்’ செயலியைப் பயன்படுத்திவிடுகிறேன் என்பது வேறு விசயம். சில நேரங்களில் தூங்கி எழுவதற்குள் வந்தது மறைந்து போய்விடுகிறது.

“நீ யாராக இருந்தாலும், உனது நிலமும், நினைவுகளும் உன்னோடு வந்து கூடட்டும், அது தானாக உட்புகுந்துகொள்கிறது” என்று சொல்வதுபோல் நானும் சிறுபான்மையினராக இருந்து கொண்டு ஒரு பெரும்பான்மையின் கனவுகளை எழுத முனைகிறேன். எனது பூர்வீக தேசத்துக்கும் எனக்குமிருக்கும் என் காலடிகளுக்குக் கீழே உணரும் மண்ணையும் நிலத்தையும் சொற்களால் உணர முயல்கிறேன். எது எனக்கென உருவான தேசமோ, அதுவே என் உள்ளத்தில் நம்பிக்கை ஒளியூட்டமுடியும். இருண்ட அறையில் எரியும் உணர்வுகளின் வெளிச்சம், என் சொற்களைத் தேடியலைகிறது. நானும் சிங்கப்பூர் வாழ்க்கையின் மூலைகளில் நுழைந்து செல்லும் போதெல்லாம், என் மனதுக்குள் இந்த நாட்டின் அடையாளங்கள் என்னவாக இருக்கமுடியுமென்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.
யேட்ஸ் 1865-இல் டப்ளினில் பிறந்தார். அவருடைய தந்தையும் சகோதரரும் ஓவியக்கலைஞர்கள்., தாயார் சுசன் மேரி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சகோதரிகள் லில்லி மற்றும் லொல்லி, கலை மற்றும் கைவினைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். அயர்லாந்தைச் சேர்ந்த அழகிய நடிகையைத் திருமணம் செய்துகொண்டார்.
யேட்ஸ் புரொட்டஸ்டண்ட் மதப்பிரிவைச் சேர்ந்தவர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அயர்லாந்து தேசிய இயக்கம், ஹோம் ரூல் போன்ற அரசியல் எழுச்சிகள், கத்தோலிய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய இலக்கியப் பார்வையையும் கவிதைகளின் கருப்பொருளையும் ஆழமாகப் பாதித்தன.

காதலில் தோல்வியைச் சந்தித்தபோது, அந்தத் துக்கத்தை அவர் கலையாக மாற்றியிருக்கிறார். தீ இனிது என்பது போன்றதோ காதல்; அதை அவர் எப்போதும் அணைக்கவில்லை. ஆனால், கவிதையால் கடந்து சென்றிருக்கிறார். அவருடைய காதலி விட்டு விலகிச்சென்றாலும், அவரது ஒவ்வொரு கவிதை வரியிலும் அவள் உயிர்பெற்று வாழ்ந்திருக்கிறாள். ‘நான் வாசிக்கும்போது, அவளது நிழல் என் அருகில் நிற்கிறது’ எனும்போது அந்த நிழலுக்குள் யேட்ஸின் காதல் நிற்கிறது.
அவருடைய The Scholars என்னும் கவிதை, இதனை வெவ்வேறு விதமாகப் பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள், இது ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு.
தம் பாவங்களை மறக்கும் வழுக்கைத் தலையர்கள்
வயதான படித்த, மரியாதைக்குரிய
வழுக்கைத் தலையர்கள்
வரிகளைப் பதிப்பித்து உரை விளக்கி
அந்த இளம் மனிதர்கள் படுக்கையில் புரண்டு
காதலின் மனமுறிவைச் சந்தமாக்குவர்
அழகின் அறிவிலிக் காதுகள் மகிழ்ச்சியுற
எல்லோரும் கூடிக்கலைவாரங்கே;
எல்லோரும் கையில் இருமுவர்;
எல்லோரும் தம் காலணிகளுடன் கார்பெட் அணிவர்;
எல்லோரும் சிந்திப்பர் மற்றவர் சிந்திப்பதையே;
எல்லோரும் தெரிவர் அண்டை வீட்டாருக்குத்
தெரிந்த மனிதனையே.
ஆண்டவரே என்ன சொல்வர் அவர்கள்
அவர்களின் காட்டுலஸ் அவ்வழி நடந்தால்?
இதில் வரும் காட்டுலஸ் என்பவர் ஒன்றாம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசரின் காலத்தில் வாழ்ந்த லத்தீன் கவிஞர். இக்கவிதை அங்கதத் தொனியுடன், படைப்பாற்றல் மங்கிய வெற்றுக் கூடல்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. இதில் பழைய அறிஞர்கள் மீது நேரடியானதும் மறைமுகமானதுமான விமர்சனங்கள் உள்ளன. இது எழுத்தாளுமைகளின் அன்றைய நிலையைப் பிரதிபலித்தாலும் இன்றைக்கும் பெரிதாக மாற்றமில்லை.
‘உங்களுக்கு வயதானபோது’ என்ற கவிதை யேட்ஸின் அழகிய கவிதைகளில் ஒன்று, இது காதல் தொடங்கிய ஆரம்பகாலம் முதல் முதுமை வரை கோடிட்டுக் காட்டி, கடந்து போவது வரை மூன்று பகுதிகளைச் சொல்லும் கவிதையாக இருக்கிறது. இதில் யேட்ஸ் பெண்ணிடம் நேரடியாகப் பேசுகிறார். அவள் வயதான பின்னர்த் தூக்கத்திலிருந்து விழிப்பதிலிருந்து கவிதை தொடங்குகிறது. அவளுடைய இளம் வயதிலிருந்த அழகையும் காதலையும் அவளிடம் உரையாடும் மொழியில் எழுதியிருக்கிறார்.

உங்களுக்கு வயதாகும்போது
நீங்கள் முதுமை அடைந்து
சோர்வுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது,
நெருப்பின் முன் தலையசைத்து
இந்தப் புத்தகத்தை எடுத்து
மெதுவாகப் படியுங்கள்
ஒரு காலத்தில் உங்களுடைய விழிகளிலிருந்த
மிருதுவான பார்வைகளை
அவற்றின் ஆழமான நிழல்களை உற்றுப் பாருங்கள்
உண்மையாகவோ பொய்யாகவோ
எத்தனை பேர் உங்களுடைய
மகிழ்ச்சியான தருணங்களை நேசித்தார்கள்
ஒருவன் மட்டுமே உங்களுடைய
ஆன்மாவைக் காதலித்தான்
உங்கள் முகம் காட்டும் துக்கங்களையும்
அவன் நேசித்தான்
ஒளிரும் கம்பிகளுக்கருக்கில் குனிந்து
முணுமுணுத்துக்கொண்டே
கொஞ்சம் சோகத்துடன்
காதல் பறந்து சென்றது
மலைகளின் மேல் வேகமாக ஏறி
நட்சத்திரக் கூட்டத்திற்கிடையே
அவன் தனது முகத்தை மறைத்துக்கொண்டான்
இந்தக் கவிதை ஆகச்சிறந்த காதல் கவிதையாகச் சொல்லப்படுகிறது. முதுமையின் தாக்கம், தொலைந்துப்போன அழகென உண்மையான காதலின் தாக்கம் பற்றிப் பேசுகிறது. யேட்ஸ் காதலை வெறும் புறவய அழகை மீறி, ஆழ்ந்த ஆன்மிகத் தன்மையோடும் தன்னுணர்வோடும் கொண்டு செல்கின்றார்.
இன்னிஸ்ஃப்ரீ ஏரிக்கருகில் ஒரு பண்ணை வீட்டை வாங்கி வீட்டைச் சுற்றிலும் தேனீக்கள் வளர்த்திருக்கிறார். அமைதியான சூழலைப் பற்றிய கவிதையில்,
‘ நான் எழுந்து இன்னிஸ்ஃப்ரீக்குச் செல்வேன்’
‘…தேனீக்களின் ரீங்காரம் உரக்கக் கேட்கும், புல்வெளியில் தனியாக நடந்து செல்வேன்.

எனக்கு அங்கே சிறிது அமைதி கிடைக்கும். சிள்வண்டுகள் பாடுகின்றன. இரவும் பகலும் ஏரி நீர்க்கரையில் குறைந்த சத்தங்களுடன் பறவைகள் சத்தமிடுவதை நான் கேட்கிறேன்; சாம்பல்நிற நடைபாதையில் நிற்கும்போது இதயத்தின் ஆழத்திற்குள் குரல்களைக் கேட்கிறேன்’ என்று ஏரிக்குச் செல்வதைப் பற்றிய அழகிய பாடல் இது. நானும் அடிக்கடி அதிகாலையில் ஏரிகளைச் சுற்றுவதால் மிகவும் நெருக்கமான பாடலாகிவிட்டது.
ஓ மனிதக் குழந்தையே,
நீர்நிலைகளுக்கும் காட்டுயிர்களுக்கும்
தேவதையோடு கைகோர்த்து வா!
உலகம் உங்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு
அழுகையால் நிறைந்துள்ளது.
என்கிறது ‘திருடப்பட்ட குழந்தை’ என்னும் நீளமான கவிதை யதார்த்தமானது.
யேட்ஸ், தாகூரின் கீதாஞ்சலி தொகுப்பிற்குக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொடுத்தவர். அந்த நூலுக்கு யேட்ஸ் வழங்கிய முன்னுரை மூலமாகவே மேற்குக்கு தாகூரின் குரல் அறிமுகமானது.
அந்த முன்னுரையில் “காதலனோ காதலியோ ஒருவருக்காக மற்றவர் காத்திருக்கும் போது இக்கவிதைகளை முணுமுணுத்தால் தங்கள் வேற்றுமைகளை மறந்து, இளமையைப் புதுப்பிக்கும், சுத்திசெய்யும் மந்திரக்குளமாக உணரமுடியும். ஒவ்வொரு கவிதையிலும் கவிஞரின் நெஞ்சம், இக்காதலர்களை நோக்கியே பேசுகிறது. ஆனால் அவர்களைக் கண்டிப்பதுமில்லை, கழிவிறக்கம் கொள்வதுமில்லை. அவர்களின் காதல் சந்தர்ப்பங்களைப் புரிந்துகொண்டதால் வரும் வார்த்தைகள் இவை.......” என்று அழகாகச் சொல்லியிருக்கிறார்.
தாகூருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு யேட்ஸ் பரிந்துரை செய்ததாகச் சொல்லப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்ற பிறகும் கூட சிறந்த படைப்புகளைப் படைத்த ஓரிரு படைப்பாளிகளுள் யேட்ஸும் ஒருவர்; இளமையில் கிரேக்கத் தொன்மவியல் கதைகளையும், நாட்டார்க் கதைகளையும் விரும்பிப் படித்திருக்கிறார். ரொமாண்டிசம் முதல் மாடர்னிசம் வரை தனது நடைமாற்றத்தைக் காட்டிய ஐரிஷ் கலாச்சாரத்தின் குரல் அவர். தொடக்கத்தில் மென்மையான, இசைபூர்வமான கவிதைகளை எழுதிய யேட்ஸ், பின்னர்த் தனது நடையில் ஒரு தீவிரமும் புரட்சிகரமானதுமான மாறுதலைக் கண்டார்.

‘அறுபது வயதின் நிசப்தக் கணத்தில், நான் ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில் நடந்து செல்கிறேன். புன்னகை பூத்த முகங்கள், கண்களில் ஒளிரும் புதுமை, என் உள்ளத்தைச் சற்றும் தயங்காமல் தாக்குகிறது. நான் பயணத்தின் முடிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்க, இவர்களின் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது’ என்பது கனவுகளுடனும் இழைந்த ஒரு சர்ரியல் உணர்வாக ‘Among School Children’ கவிதை.
அந்தச் சிறு முகங்கள் என் முன்னால் புன்னகையுடன் நின்றபோது, என் நினைவுகள் பழைய காதலின் நிழல்களில் இறங்கின. ஒரு குடையின் கீழ் நின்ற அவளின் முகம், அந்த முகத்தில் நான் இப்போது காணும் அமைதி, அந்த மௌன இசை என் இதயத்தை வருடுகிறது, என்கிறார்.
நம் அனைவரது வாழ்வும் ஒரு சுரங்கம். அந்த நிசப்தக் கணங்களின் நடனமே நாம் மனத்துக்குள் நாள்தோறும் ஆடிக்கொண்டிருப்பது. ‘என் வாழ்வு தான் என் கவிதை. என் நடனமே என் வாசல். என் புன்னகையிலே உலகம் மூடியிருக்கிறது. “நாம் நடனமாடுபவனை நடனத்திலிருந்து பிரிக்க முடியுமா?” என்பது அவரது குரல் மட்டும் அல்ல.
அயர்லாந்தின் பிளவு, பிரியங்கள், புராணங்கள், போராட்டங்கள், என அனைத்தையும் வெளிப்படுத்தும் யேட்ஸ், ஒரு கவிஞராக என் வாசலுக்கு வந்தவர்.
அவர் எப்படியோ, அதைப் போல் ஒரு நாட்டின் ஆதங்கங்களையும், ஆசைகளையும், அழகையும் நுட்பமான சொற்களால் சொல்லும்போது நானும் சொற்களுக்குள் வாழ்கிறேன், தேசங்களின் இடைவெளிகளில் பயணிக்கிறேன். அந்த இடைவெளியை நிரப்புகிற பாலமாக யேட்ஸ் இருக்கிறார்.
யேட்ஸ் எழுதிய கவிதைகள், வாழ்க்கையின் பல பரிமாணங்களையும், கலாச்சாரச் சவால்களையும் பிரதிபலிக்கின்றன. ஐரிஷ் மரபுடன் ஆழமான தொடர்பு கொண்டு, நவீன உலகின் அர்த்தத்தைக் தேடும் பயணமாகவும் இருக்கின்றன. ஆரம்பக் கவிதைகளில் இயற்கையின் அமைதி, ஐரிஷ் புராணங்கள் ஆகியவை மேலோங்கி இருந்தன. "The Stolen Child" மற்றும் "The Lake Isle of Innisfree" போன்ற கவிதைகள், நகர்புற அன்றாட வாழ்க்கையின் அழுĪ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


