`அரிய வகை உடும்புகள்; ஹைட்ரோபோனிக் கஞ்சா.. - விமானத்தில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பயணிகள் இருவர் தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், பேங்க்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, அதில் வந்த ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா இருந்துள்ளது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக 9.82 கிலோ அளவில் அந்த கஞ்சா இருந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.
கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி, வெளிநாடுகளில் இருந்து உயிர்கள், கஞ்சா, வெளிநாட்டு பணம், தங்கம், சிகரெட்டுகள் உள்ளிட்டப் பொருள்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து உடும்புகள், கஞ்சா ஆகியவை கடத்தி வரப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


