சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை

திருப்பத்தூர் அருகேயுள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சகோதர்களான மணிகண்டன், (வயது 30) சிவசங்கரன் (எ)விக்னேஷ் (வயது 27) இருவரும் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மதகுபட்டி வட்டாரத்தில் சமீபகாலமாக ஆடுகள், கோழிகள் காணாமல் போய் வந்ததால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் புதிதாக யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்று கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், அழகமாநகரியில் உள்ள ஒரு தோப்புக்குள் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது மணிகண்டன் மற்றும் விக்னேஷ் தோப்பிற்குள் இருப்பதை பார்த்ததும் அவர்களை கட்டையாலும் கைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

அதன் பின்பு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், அவர்கள் ஆடு, கோழி திருட வந்தபோது தாக்குதல் நடந்ததாக ஊர்காரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே திருட வந்தார்களா அல்லது முன்பகை காரணமா என்ற கோணத்தில் மதகுபட்டி காவல்துறையினர் ஊர்காரர்கள் சிலரைப்பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சகோதர இளைஞர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம், மதகுபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.