Ooty : நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை, நிரம்பும் நீர்நிலைகள்!

தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி தற்போதைய புதிய திட்டங்கள் வரை பல்வேறு அணைக்கட்டுகளைத் தொடர்ந்து கட்டி வருகின்றனர். நீலகிரி மட்டுமன்றி சமவெளி பகுதிகளுக்கான குடிநீர், பாசன வசதிகளை இந்த அணைகள் மூலம் மேலாண்மை செய்து வருகின்றனர். நீர்மின் உற்பத்தி ஆதாரமாக பெரும்பாலான அணைக்கட்டுகள் பங்காற்றி வருகின்றன.

எமரால்டு

ஆண்டு முழுவதும் நீர்மின் உற்பத்தி நடைபெற்றாலும் ஏப்ரல், மே மாதங்களில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் பெய்து வந்த கோடை மழை, முன்கூட்டியே தொடங்கிய‌ தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக கேச்மென்ட் எனப்படும் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இது குறித்து தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள், "வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் நீர் இருப்பு சரியும் என்றாலும், ஒருசில ஆண்டுகளில் நீர்மின் உற்பத்தியை பாதிக்கும் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும். நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை எதிர்பார்த்த அளவை விட கோடை மழையும், தென்மேற்கு பருவ மழையும் பெய்திருக்கிறது. குறிப்பாக அவலாஞ்சியில் அதிகபட்ச மழைப்பொழிவு இருந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே அணைகளின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.

அவலாஞ்சி

நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு நிலவரம் அடிகளில்:

1. முக்கூர்த்தி: 18-16

2. பைக்காரா: 100- 90

3. சாண்டி நல்லா: 49- 35

4. கிளன் மார்கன்: 33-26

5. மாயார்: 17-16

6. அப்பர் பவானி: 210-160

7. பார்சன்ஸ்வேலி: 77- 72

8. போர்த்தி மந்து: 130-45

9. அவலாஞ்சி: 171-31

10. எமரால்டு: 184- 44

11. குந்தா: 89-89

12. கெத்தை: 156- 154

13. பில்லூர்: 100- 100 . நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது " என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.