Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம் ஆகும். ஆர்.மாதவனின் தந்தை ரங்கநாதன் ஷாம்ஜெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் கம்பெனியில் பணியாற்றிய போது மாதவன் பிறந்தார். மாதவன் 12-ம் வகுப்பை முடித்தபோது மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ரோட்டரி கிளப் சார்பாக கனடாவிற்கு ஒரு ஆண்டு செல்ல மாதவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஒரு ஆண்டு கனடாவிற்கு சென்றுவிட்டு வந்து கோலாப்பூர் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படிக்கும்போது என்.சி.சி.யில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றார். மாதவனின் 22வது வயதில் மகாராஷ்டிராவில் சிறந்த என்.சி.சி வீரராக விளங்கினார். இதனால் அவருக்கு பிரிட்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டன் சென்று அங்குள்ள ராணுவம், ராயல் நேவி, விமானப்படைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார். இதையடுத்து ராணுவத்தில் சேர மாதவன் முடிவு செய்தார். ஆனால் ராணுவத்தில் சேர வயதில் 6 மாதம் அதிகமாகிவிட்டது. இதனால் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற மாதவனின் கனவு நனவாகாமால் போய்விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் தான் படித்த கோலாப்பூரில் ஆசிரியராக வேலையில் சேர்ந்தார். அதன் பிறகு மும்பையில் வந்து முதுகலைப்பட்டம் படித்தார். அதனை தொடர்ந்து 1992ம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோவில் இளம் பிஸ்னஸ்மென் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மாடலிங் தொழிலை தொடங்கினார்.

திரைப்படத்தில் நுழைந்தது எப்படி?

மாதவன் மும்பையில் மாடலிங் தொழிலை தொடங்கி நடத்தி வந்தபோது மும்பை லோகண்ட்வாலாவில் தங்கி இருந்தார். அவர் ஒரு முறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்தி டிவி சீரியல் தயாரிப்பவரின் கண்ணில் மாதவன் பட்டார். அன்றுதான் மாதவனின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த டிவி சீரியல் தயாரிப்பு நிர்வாகி மாதவனிடம் பேசி தங்களது இந்தி சீரியலில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு இந்தி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு தனது முதல் இந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2000ம் ஆண்டு அலைபாயுதே படத்தில் நடித்தார். இந்த படம்தான் மாதவனை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தது.

ஒரே ஆண்டில் என்னவளே, மின்னலே, டும் டும் டும் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மாதவன் நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். தமிழில் எவனோ ஒருவன் படத்தை தயாரித்து அதற்கான வசனத்தையும் தானே எழுதினார். ராக்கெட்டரி; நம்பி எஃபெக்ட் என்ற படத்தை மாதவன் இயக்கி தயாரித்தார். இப்படத்திற்கான கதையையும் மாதவனே எழுதி இருந்தார். மாதவன் அதிகப்படியான வெப்சீரிஸ்கள், டிவி தொடர்களில் நடித்து இருக்கிறார். நடப்பு ஆண்டில் இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மூன்றாவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்ட மாதவன் இப்போது திரைத்துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் பிரிவில் பல விருதுகளை பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.