குழந்தைகள் உடலில் சாத்தான் - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).
இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்.
கிறிஸ்தவ பாஸ்டரான கிங்ஸ்லி மனைவி சஜினியுடன் யோகோவா ஊழியத்திற்குச் செல்லும் போது 6-வயது மற்றும் 3-வயதுடைய இரு மகன்களை வீட்டில் அடைத்து விட்டு, 8-மாத பெண் கைக்குழந்தையுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
வழக்கம்போல் வியாழக்கிழமை இரு மகன்களையும் வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியே சென்றார். மனைவியுடன் மாலை வீடு திரும்புகையில் இரு மகன்களும் வெளியே வந்து அடுக்குமாடிக்குடியிருப்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பாதிரியார் கிங்ஸ்லி குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேன் என்பவர் அங்குச் சென்று, என்ன பிரச்னை எனக் கேட்டுள்ளார்.
அவரை பாஸ்டர் கிங்ஸ்லி ஒருமையில் திட்டி அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுரேன் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள் கிங்ஸ்லி வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். சுரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கிங்ஸ்லியின் 8-மாத கைக்குழந்தை, 6-வயது மற்றும் 3-வயதான இரு மகன்கள் என மூன்று பேரும் உடல் முழுக்க இரத்த காயங்களுடன் அலறி துடித்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் மூன்று குழந்தைகளையும் கருங்கல் போலீசார் மீட்டனர். கருங்கல் போலீசார் நடத்திய விசாரணையில், தனது குழந்தைகள் அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள பிற குழந்தைகளுடன் விளையாடியதால் பாஸ்டர் கிங்சிலிக்குக் கோபம் ஏற்பட்டது.

சாத்தான்களுடன் ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டதுடன், பிற குழந்தைகளுடன் விளையாடியதால் தனது குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாகக் கூறி, அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துள்ளார்.
இனி சாத்தான்களுடன் விளையாடச் சென்றால் கொன்று விடுவேன் எனவும் பாஸ்டர் கிங்சிலி மிரட்டியதாகத் தெரிய வந்தது.
மூன்று குழந்தைகளையும் தாயுடன் சேர்த்து சிகிச்சைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்டர் கிங்ஸ்லி மீது சிறார் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


