பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்
மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் ரவி முரளிதர் (27) என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியாளராக வேலை செய்து வந்தார்.
அவரிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தீவிரவாத தடுப்புப் படை அதிகாரி கூறுகையில், பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சமூக வலைத்தளம் மூலம் ரவி இந்தியக் கடற்படை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
14 போர்க்கப்பல்கள் குறித்த விபரங்களைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேருடன் வாட்ஸ் ஆப் மூலம் இந்தியப் போர்க்கப்பல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியப் போர்க்கப்பல்கள் நிற்கும் இடம் போன்ற தகவல்களை டிஜிட்டல் முறையில் அனுப்பி இருக்கிறார். அவரிடமிருந்து வீடியோ, ஆடியோ, படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரீத்தி ஜெய்ஸ்வால் என்பவருடன் ரவி தொடர்பிலிருந்துள்ளார். பிரீத்தி ஜெய்ஸ்வால் பெயரை ரவி தனது மொபைல் போனில் அங்கிதா கல்லூரி தோழி என்று பதிவு செய்து வைத்துள்ளார்.
ரவி பாகிஸ்தான் ஏஜெண்டுடன் சாட்டிங் செய்த விபரங்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் அத்தகவல்களைத் திரும்ப எடுத்துவிட்டோம்.
ரவி ஒரு நோட்டு புத்தகத்தில் 14 போர்க்கப்பல்களின் பெயர்கள், அவை எங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற விபரங்களை விரிவாக எழுதி வைத்திருந்தார்.
அதனைப் பாகிஸ்தான் ஏஜெண்ட்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ஏஜெண்டுடன் பேசிய ஆடியோ விபரம் ரவியின் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போர்க்கப்பல்களையும் நேரில் ஆய்வு செய்து முழு விபரங்களை எழுதி வைத்து இருக்கிறார். அவற்றைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரீத்தி ஜெய்ஸ்வால் மற்றும் சர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2024ம் ஆண்டு முதல் பிரீத்தியுடன் தொடர்பு ஏற்பட்டதாக ரவி தெரிவித்துள்ளார். பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் உறவை ஏற்படுத்திக்கொண்டனர்.
ரவியுடன் காதல் தொடர்பு வைத்துக்கொள்வது போல் பிரீத்தி நடித்துள்ளார். அதோடு இந்தியக் கடற்படை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி இருக்கிறார்.
காதலுடன் பேசி போர்க்கப்பல்களின் நடமாட்டம், இருக்கும் இடங்கள், கப்பல்களின் பழுது விபரங்களைத் தனக்குத் தெரிவிக்கும் கூறி முக்கியமான விபரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


