ஒரே நாடு, ஒரே தேர்தல்: தந்தை ஆதரித்தார், மகன் எதிர்க்கிறார் ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் கூறும் போது, "ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற புத்தகத்தில், “அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேரம் மற்றும் வளங்களை மீதப்படுத்தும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மீண்டும் அமல்படுத்தப்படுவது அவசியமானது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்திய 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில், நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். இதுவே ஒரே தேர்தலாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் ரூ.12,000 கோடியை சேமித்திருக்கலாம். அதன் மூலம் மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கலாம். உண்மையில், 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

எனவே, நம் நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழி வகை செய்யும் இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கையானது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டியது. இதுகுறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது இனிய வருகையால் நம்மை கௌரவித்ததோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆந்திர மாநிலத்தின் மாண்புமிகு துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களுக்கு மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.