நல்லிரவைக் கொட்டிய தேள் - நிசிம் எசேக்கியல்|கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 9

நவீன இந்திய ஆங்கிலக் கவிதையின் முன்னோடிக் கவிஞராகவும், காலனித்துவத்திற்குப் பிந்தைய இலக்கியத்தின் நவீன சிந்தனையின் முன்னணிக் குரலாகவும் கருதப்பட்ட கவிஞர் நிசிம் எசேக்கியல் இந்திய ஆங்கிலப் படைப்பியக்கத்தின் முக்கியமான குரல். நிசிம் எசேக்கியல் ஆங்கிலத்தைத் தனது கவிதைமொழியாக்கிக் கொண்டார். அது அந்நிய மொழி, தவறாக உள்ளே நுழைந்த மொழியெனக் கருதிய காலத்தில் ஆங்கில மொழி வளம் கைவரப் பெற்ற முதல் தலைமுறை எழுத்தாளர். ஆர். பார்த்தசாரதி, ஏ.கே.ராமானுஜம் சமகாலத்தவர் என்றாலும் அவர்களுக்கு முன்பாகவே எழுதத் தொடங்கியவர்.

காலம் காலமாக மரபார்ந்தும் நவீனமாகவும் எப்படிக் குறுக்கு வெட்டில் உடைத்துப் பார்த்தாலும் அம்மாவெனும் உருவத்திற்கு உயரம் சற்றே அதிகம்தான். அவளது அக மொழிக்குச் சத்தம் அதிகமில்லை என்றாலும் கருணையும், அறிவுக் கதையாடலும், சுய ஒளியுமாக எப்போதும் மின்னிக்கொண்டேயிருக்கிறாள்.  “Night of the Scorpion” எனும் கவிதையில் வரும் அம்மா ஒரு வெண்முத்து,  இக்கவிதையின் நெகிழ்வுக்குக் காரணம் அதன் கடைசி மூன்று வரிகளே.

தேளின் இரவு

அந்த இரவு இன்னும் என் நினைவிலிருக்கிறது

ஒரு தேள் என் அம்மாவைக் கொட்டியது

பத்துமணி நேரமாக மழை விடாது பெய்ததால்

அவனை ஓர் அரிசி மூட்டையின் கீழ்

தவழ்ந்து செல்லவைத்தது

அவன் இருட்டறைக்குள் நுழைந்து

தனது வாலிலிருந்த நஞ்சைக் கொட்டிவிட்டு

பின் மீண்டும் கனத்த மழையில் மறைந்துவிட்டான்

ஊரார் ஈக்கள்போல் மொய்த்தனர்,

கொடூரமாக நஞ்சு ஏறிவிடாமல்

தடுப்பதற்காக நூறு தடவைக்கு மேல்

அவரவர் கடவுளிடம் முணுமுணுத்தனர்

மெழுகுவர்த்தியும் விளக்குகளுமாய்

மண்சுவரில் பெருந்தேள் போன்ற உருவங்கள் நிழலாடின

அவனைத் தேடினர் - கண்டுபிடிக்க முடியவில்லை

அவர்கள் நாவினைச் சொடுக்கிக்கொண்டனர்

நகரும் ஒவ்வொரு முறையும்

நஞ்சு இரத்தத்தில் ஏறிக் கலந்துவிடும், என்றார்கள்

அவன் இன்னுமா அமர்ந்திருப்பான், என்றார்கள்

முந்தைய பிறவியின் பாவங்கள்

இன்றிரவோடு எரிந்துபோகட்டும், என்றார்கள்

உன்னுடைய துன்பங்கள்

அடுத்தப் பிறவியின் துயரங்களைத்

குறைக்கட்டும், என்றார்கள்.

உனது வலி குறையட்டும்,

அடுத்தப் பிறவியின் துரதிஷ்டங்கள்

குறைந்துபோகும், என்றார்கள்

இந்த உண்மையற்ற உலகில் சமநிலைப்படுத்தப்பட்ட

அனைத்துத் தீமைகளின் மொத்த உருவமும்

இந்த வலியால் குறையட்டும்.

இந்த நஞ்சு உனது உடலைச் சுத்தப்படுத்தட்டும்

உனது ஆசைகயும், லட்சியங்களையும்

என்று சொல்லிக் கொண்டே

அவர்கள் தரையில் வட்டமாக அமர்ந்தனர்

அம்மா நடுவில், அமைதியாய்!

மேலும் விளக்குகள், மெழுகுவர்த்திகள்

மேலும் அக்கம்பத்து வீடுகளிருந்து உறவுகள்

மேலும் பூச்சிகள், இடையறா மழை

அம்மா வலியால் சுருண்டு கிடந்தார்

பாயில் படுத்து முனகினார்

அப்பா பகுத்தறிவை நம்பும் அறிவாளர்

சாபத்துடன், ஆசிர்வாதத்துடன்

பொடி, நறுமணப் பொருள், மூலிகைக் கலவையென

ஒவ்வொன்றாக முயற்சி செய்கிறார்.

கடிபட்ட விரலில் சிறிது மெழுகினை ஊற்றி,

அதிலொரு தீக்குச்சியைக் கொளுத்தி வைக்கிறார்

அம்மாவைத் தீச்சுவாலைத் தொடுவதைக் கவனிக்கிறேன்

பூசாரி ஒருவர் வந்து மந்திரங்களைச் சொல்கிறார்

நஞ்சினை அடக்குவதற்காக ஏதேதோ சடங்குகளைச் செய்கிறார்

இருபது மணி நேரத்திற்குப் பிறகு

கொட்டியதை இழந்துவிட்டது.

என் அம்மா மட்டும் சொன்னார்,

கடவுளுக்கு நன்றி! அந்தத் தேள் என்னைத் தேர்ந்தெடுத்தது

என் குழந்தைகளை விட்டுவிட்டது.

முதலில் இதை நான் வாசித்தவுடன் வீட்டிற்குள் வரும் தேள் என்ற படிமம் முதலில் ஈர்த்தது. பின் அம்மாவின் நினைவிற்குப் பதிலாக இடையில் புகுந்து ஒவ்வொன்றையும் புறவயப் பார்வையுடன் பகுத்தறிவு பேசும் எனது அப்பா முந்திக்கொண்டு வந்துநின்றார். அதற்குமுன் யோசிக்க வேண்டியது தேளினை ‘அவன்’ என்று விளிக்கக் காரணம் என்னவாக இருக்கும்? 

சிறுவயதில் இப்படி எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இன்றும் கிராமப்புறங்களில் தேள், பாம்பு, பூராண் என எத்தனையோ பூச்சிகள், வண்டுகளிடம் கடிவாங்கிய அனுபவங்கள் நமக்கும் இருந்திருக்கும். கதிரடித்துக் கொண்டுவரும்  அவிக்காத பச்சை நெல்லைக் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்தைச் சுற்றி மூஞ்சுறுகளும் பெருச்சாலிகளும் மட்டுமே நெல் வாசத்தைக் கண்டு ஓடிக்கொண்டிருப்பதில்லை, அதற்கடியில் தேளும் பூராணும் தெறித்து ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியொரு எளிய குடும்பத்தின் அம்மாவை ஒரு நாள் இரவு தேள் கொட்டிவிடுகிறது.  இக்காட்சியில் மனித மனங்களின் வேறுபாடுகள், மதநம்பிக்கைகள், அறிவியலுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான மோதல்கள் அனைத்தும் தேளின் மீதேறி ஊர்ந்துசெல்கின்றன.

கிராமங்கள் என்பது அழும் உணர்வுகள் பொங்கியெழும் இடமாக இருக்கிறது. ஒரு கருந்தேள், மழையில் வெளியேறி அரிசி மூட்டையின் கீழே புகுந்து, அம்மாவை கொட்டும் அந்தக் கணத்தில் கவிதை தொடங்குகிறது.  இது ஒரு தனிப்பட்ட அனுபவமாகத் தெரிந்தாலும், அதுவே சமூகத்தின் பொறுப்பாக மாறுகிறது. ஊரார் ஈக்களாகக் கூடி விடுகிறார்கள், கடவுளின் பெயரை முணுமுணுக்கும்போது  நம்பிக்கையின் கூட்டு சக்தியும், சமூகத்தின் அக்கறையும் ஒளிந்திருப்பதைக் காணமுடிகிறது. என் தந்தையைப் போன்ற ஓர் அப்பா, அறிவும் அனுபவமும் இடைச்சேரும் குரலாக உள்ளே  நுழைகிறார்.  பகுத்தறிவாளர், அறிவியல் நம்பிக்கையோடு இருக்கின்றவர். ஆனால் அவ்வளவு சிரமத்திலும், மூலிகையும் கை வைத்தியமுமாக  வந்தாலும் அவளின் வலியைக் குறைக்கமுடியவில்லை.  பகுத்தறிவால் மட்டுமே எல்லாவற்றையும் அடைய முடியாது என்பதற்கான நுட்பமான காட்சிப் படிமம் இது.   இதைத்தான் என் தந்தை உயிரோடிருந்த போதும் சொல்லியிருக்கிறேன். இருபது மணி நேரங்கள் கழித்து, எல்லா அலறலுக்கும், வலிக்கும் பின்னால்,

‘என் அம்மா மட்டும் சொன்னார்

கடவுளுக்கு நன்றி! அந்தத் தேள் என்னைத் தேர்ந்தெடுத்தது

என் குழந்தைகளை விட்டுவிட்டது’

"தேளின் இரவு" ஒரு சம்பவம் அல்லது படிமம் அல்லது காட்சி எப்படியான கவிதையென்று சொன்னாலும், அதன் இடுக்குகளில் இந்திய மக்களின் மனநிலையை, குடும்பத்தின் உணர்வுகளை, அறிவு மற்றும் நம்பிக்கை மீதான மோதலைச் சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் அம்மாவின் அக்கறையில் இறுதி வரிகளில் கவிதை எழுந்து நிற்கிறது. அவை முழு அழுத்தத்துடன் நெகிழ வைக்கும் வரிகள். நமது வீடுகளிலும் இப்படியான அக்கறையை அம்மாக்கள் வெளிப்படுத்துவது வழக்கமென்றாலும்  நிகழ்வியலைக் கவிதையாகப் பார்க்கும்போது அட, ச்ச… என நரையும் நிமிர்கிறது.  

1924ஆம் ஆண்டுப் பாம்பேயில் பிறந்த நிசிம் எசேக்கியல் யூதக் குடும்பத்தில் பிறந்தவர். பல தலைமுறைகளுக்கு முன்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பெனே இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கல்லூரிகளில் முதல்வராக இருந்தவர். நாட்டுப்புறக் கலைகளின் ஞானத்தில் அவருக்குள்ள ஆர்வம் எசேக்கியல் மீது தாக்கம் செலுத்தியது. தாயாரும் பள்ளியின் முதல்வரென்பதால் அடிப்படையில் சிறந்த கல்வியைப் பெற்றார். யூதராக இருந்ததால், பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்களால் அவமதிக்கப்பட்டதால் பள்ளி வாழ்க்கை கடினமாகயிருந்தது. மற்ற சிறுவர்களுடன் சுதந்திரமாகப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிறகு மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று சிறந்த மாணவர் என்ற பெருமையைப் பெற்றார். .

திருமணம் என்றொரு கவிதை, தொடக்கத்தில் அது எப்படிப் பரவசமாகத் தோன்றுகிறது, பின்னர் எவ்வாறு அவை முறிவிற்கும் மனச்சோர்விற்கும் இட்டுச் செல்லுகின்றன என்பதை விவரிக்கிறது. காதலென்பது ஆதிமனிதனின் வீழ்ச்சி. திருமணம், அது ஒரு கனவுக் கோட்டை. சொர்க்கத்தில் எழுதப்பட்டதென நம்புகிறோம். ஈர் இதயங்கள் இணையும் தருணம், வானவில் நழுவும் கணம். எனக்கு நீதானென என நம்பும் சுகவாசம். பூத்த மலர்களை அழகாய் இணைக்கும் மாலை போலத் தொடங்கும் உறவு, காலத்தின் கடுமையான காற்றில் கலைந்துவிடுகிறது. ஈருயிர்களின் பயணங்கள் பின்னிப் பிணையப்பட்டு, மறுபிறவியிலும் தொடரும் என நம்பும் பொதுமைப்பாடு.

 ‘வாழ்நாளின் முழுக்கவிதையையும் அவளை வைத்தே எழுத விரும்பினேன். மனமும், உடலும், சொற்களும் ஒரே இசையில் திரிய அந்தி நேரக் கடலின் மேலே பறந்துலாவும் புறாக்கள் போல அதில் நம்பிக்கை இருந்தது, அவள் பார்வையில் மெல்ல பனிக்காற்று நுழைய, இருவருக்கிடையே ஒரு சுவர் எழுகிறது. அது மௌனமாக இருந்தாலும், தண்ணீரில் வீசப்படும் கல் போல எனக்குள் சுழன்ற திருமணம் இப்படித்தான். காற்றைப்போல் இந்தக் காதல் அழியாததென நம்பினேன். ஆனால் புன்னகை விலகிய பின், வெந்த அகழிக்குள் தள்ளுகின்றன உணர்வுகள் என்கிறார்.  

காதலின் இறுதிக் குழி. திருமணம் ஒரு சுதந்திரச் சிறையின் பாடல். அது பயணமல்ல; போராட்டம். சில சமயம் – பொருள் மயக்கத்தால் தீட்டப்படும் கவிதையாகிவிட்டது.  இப்போது, ‘பல திருமணங்களுக்குச் செல்கிறேன், நீளும் நிசப்தத்துடன், மீண்டும் சிதையப் போகும் அழகிய உறவுகளை அமைதியாகப் பார்க்கிறேன்’ என்று நிசிம் சொல்லும்போது நகுலனின் வரிகளுக்கிடையே உலவும் அமைதியைப்போல் இக்கவிதையில் ஊடுறுவும் நிசப்தம் எனக்குப் பிடித்திருக்கிறது.

‘விளக்க முடியாததை, விளக்கவேண்டாம்’ என்ற வரி நிசிமின் தத்துவார்த்தம் எனும் கவிதையில் வருகிறது. புராணக் கதைகளைப் பகுத்தறிந்து இருத்தலியல் சிந்தனைகளின் தேடலைச் சித்திரிக்கிறது. தவிர்க்க முடியாத மாற்றங்கள் துன்பங்களின் வழியாகப் பிரகாசத்தைத் தேடிச் சொல்லும் தெளிவைத் தத்துவார்த்த ரீதியில் நோக்குகிறார். விளக்க முடியாததை ஏன் விளக்கிக்கொண்டிருக்க வேண்டும், அதனை உணர்தலே உத்வேகம் தானே.

The best poets wait for words – ஒரு சிறந்த கவிஞன் சொற்களுக்காகக் சித்தார்த்தனைப்போல் காத்திருக்க வேண்டுமென்பது உண்மை. அவசரமும் வலுக்கட்டாயமும் இல்லாமல், அமைதியும், பொறுமையும் கொண்ட தேடலிலேயே உண்மையான அழகும் உணர்வும் வெளிப்படுவதாகச் சொல்லும் சிறந்த கவிதை Poet Lover Bird-watcher. பொறுமையுடன் காத்திருப்பவர்கள் மட்டுமே உண்மையையும் அழகையும் அறிந்துகொள்கிறார்கள் என்றாலும் பறவைகள், பெண்கள், கவிதை இம்மூன்றும் எப்போதும் காத்திருக்க வேண்டியவை தானோ…

மொட்டைமாடியின் சுவற்றில் அமர்ந்து காக்கை மட்டும் கத்திவிட்டால் வீட்டிற்கு விருந்தினர் வந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை. காகம் தனது சிறகினை உயர்த்தி அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது ஏதோ தீயச்செயலுக்கான அறிகுறியெனப் பதற்றத்துடன் தலையை எட்டிப் பார்க்க வைக்கிறது.

காகம் கவ்வுவது சில விருந்தினர்களின் வருகையை முன்னறிவிக்கிறது என்ற பொதுவான இந்திய மூடநம்பிக்கையைத் தொட்டு இக்கவிதைத் தொடங்குகிறது. காகம் ஒரு முறை மட்டுமல்ல, இக்கவிதையில் மூன்று முறை கத்துகிறது.

அது சாளரத்தில் அமர்ந்து, வெறுப்புடன் கவிஞரின் மீது பார்வையைப் பதித்து, ஏதோ நடக்கப் போவதுபோல் இறக்கைகளை லேசாக உயர்த்துகிறது. அதன் உடல் பதற்றமாக இருந்தது இங்கே காகம் தன்னை உற்றுப் பார்க்கும் விதத்தில் ஏதோவொரு செய்தி இருப்பதாகக் கவிஞர் உணர்கிறார், சிங்கப்பூரில் காகமே இல்லை என்று யாரோ எப்போதோ சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதையே நானும் உண்மை என்றெண்ணி அன்று முதல் காகங்களைப் பார்க்கும்போதெல்லாம் படமெடுப்பது பழகிப்போனது. இப்போதெல்லாம்   காகங்கள் எங்கும் கரைந்துகொண்டேயிருக்கின்றன. ஒரு நாள் தனது எச்சத்தை என் கார் கண்ணாடியின் மீது வெண்புள்ளிகளாக மொழுகிய போது காக்கைக் கூட்டமே, இனி கண் முன் வராதேயெனச் வார்த்தைகளை அள்ளி வீசினேன். ஆனால், காகங்கள் எப்போதுமே வாசலோ, வானமொ, மனதோ - எங்கோ சற்று அருகிலேயே கரைந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் கவனத்தை ஈர்க்க மிதந்து கொண்டிருப்பவை.

“Goodbye Party for Miss Pushpa T.S.”  கவிதை நகைப்பும் நெகிழ்ச்சியும் சேர்த்துப் பேசும் பிரியாவிடை. இந்திய பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் நடப்புகளை நையாண்டி செய்கிறது.  புஷ்பா T.S  வெளிநாடு செல்லவிருக்கிறார். அந்தப் பயணத்திற்கு முன்னதாக நண்பர்கள் கூடி வாழ்த்துகிறார்கள். அங்குப் பேசிக்கொண்டிருப்பவர், புஷ்பாவின் இனிமையை மெல்ல நக்கலாக, ஆனால் மனதார பாசத்துடன் புகழ்கிறார். “அவள் எப்போதும் காரணமின்றிச் சிரிக்கிறாள்’, அதன் அங்கதக் கூர்மையை மட்டும் அல்ல, அந்தச் சிரிப்பின் பின்னுள்ள சிறு வெறுமையையும் சுட்டுகிறது.  ஆனால்  புஷ்பாவிற்குப் பின் வரும் T.S.க்கு ஏதேனும் பொருளுண்டா தெரியவில்லை, அது  தேவையின்றித் தலைப்பிற்குள் வர வாய்ப்பில்லை தானே.

மனிதர்களின் மொழியும், அங்கதமும், இந்திய ஆங்கிலப் பேச்சின் இடைவெளிகள், நினைவுகளின் சிதறல்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சாதாரணப் பிரிதலை   நக்கலடித்து, உதிர்த்துச் செல்லும் கவிதையாகச் சித்திரிக்கிறது. முதலில் ஞானக்கூத்தனின் வசீகரமான அங்கதத்தை நினைவூட்டினாலும் சு. ராவின் அந்த வித்தியாசமான பூனையின் "மியாவ் மியாவ்" சத்தத்தையும் கவ்விக்கொண்டு வந்துவிட்டது. அந்தப் பூனை மற்ற பூனைகளைப் போல

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.