Kochi Ship Accident: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கரை ஒதுங்கிய கண்டெய்னர்; கடற்படை சொல்வது என்ன?
கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியது.
கப்பல் கேப்டன் உள்ப்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நல பிரச்னை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான காலநிலை காரணமாக கப்பல் சரிந்து மூழ்கியதாக கேப்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்து மிதந்து வருகின்றன. அதில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான எண்ணெய் மற்றும் கியாஸ் ஆகியவை உள்ளதாகவும், 16 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவை இரண்டும் வெளியானால் ஆபத்தை விளையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும் கால்சியம் கார்பைட் வெடிக்கும் தன்மை கொண்டது என்பதால் ஆபத்து மிகுந்தது.
கப்பல் மூழ்கிய நிலையில் கண்டெய்னர்கள் கடலில் மிதந்து வருகின்றன. இந்த கண்டெய்னர்களில் இருந்து எண்ணெய் வெளியானால், அவற்றைச் சுவாசித்தாலே ஆபத்து என்பதால் அருகில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், கோஸ்ட் காட் கப்பல்கள் மூலம் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரு கண்டெய்னர் நேற்று இரவு கொல்லம் செறியழிக்கல் அருகே கடற்கரையில் ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கப்பல் படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் சுஜாதா கப்பலின் கமாண்டிங் ஆப்பீசர் அர்ஜூன் சேகர் கூறுகையில், "சரிந்த கப்பலை நேராக்க முயன்றோம். முடியாததால் கண்டெய்னர்களை வேறு கப்பலுக்கு மாற்ற முடியுமா எனவும், கப்பலைக் கட்டி இழுத்து கரை சேர்க்க முடியுமா எனவும் பல்வேறு கோணங்களில் முயன்றோம்.
கடல் சீற்றம், மோசமான காலநிலை, கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் ஆகியவை காரணமாக எதுவும் செய்ய இயலவில்லை.
கப்பல் படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் சுஜாதா மூலமாக கப்பலில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்து சல்ஃபர் கலந்த எண்ணெய் வெளியானால் கடலில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்.
அதைத் தடுக்கும் வகையில் எண்ணெய்யை உறிஞ்சி எடுக்கும் வகையில் கோஸ்ட் காட் கப்பல் தயாராக்க உள்ளது.
மூழ்கிய கப்பலுக்குச் சொந்தமான மெடிற்றரேனியல் ஷிப்பிங் கம்பெனி-யின் மற்றொரு கப்பல் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது.

மூழ்கிய கப்பலில் உள்ள எரிபொருள் டேங்கில் 84.44 மெட்ரிக் டன் டீசல் உள்ளது. 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் உள்ளது.
அதேசமயம் கப்பலின் எரிபொருட்கள் உள்ள டேங்க் இன்னும் உடையாவில்லை. கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்களை கையாள்வது மிகவும் சவாலானதாக உள்ளது.
தொடச்சியாக கப்பல்கள் பயணிக்கும் சர்வதேச கடல் பாதையில் கண்டெய்னர்கள் மிதந்துகொண்டிருப்பது ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
அந்தப் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


