`தங்க நகைக்காக தங்கையுடன் சேர்ந்து மாமியாரை கொடூரமாகக் கொன்ற மருமகள் - பதற வைக்கும் பின்னணி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வீரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது - மைமூனா தம்பதி. தனியார் பள்ளி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்திருக்கிறார் முகமது.
முகமது வேலை முடிந்து கடந்த 16 -ம் தேதி மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்கம் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
மனைவியைத் தேடி பின்புற கதவு வழியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார். வீட்டின் சமயலறையில் ரத்த வெள்ளத்தில் மனைவி மைமூனா இறந்து கிடப்பதைக் கண்டு அலறித் துடித்திருக்கிறார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். மைமுனாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மைமூனாவின் மருமகள் மற்றும் அவரின் தங்கை மீது சந்தேகம் ஏற்பட இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாமியார் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் செல்லும் நோக்கத்திற்காக சகோதரியுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்த திடுக்கிடும் பின்னணியைக் கண்டறிந்துள்ளனர். இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பதற வைக்கும் இந்த கொலை குறித்து காவல்துறையினர், "கொலை செய்யப்பட்ட மைமூனாவின் (56) மகன் சர்புதீனின் மனைவியான கைருநிஷா (33), மற்றும் அவரின் சகோதரி அஸீனா (30) ஆகிய இருவரும் சேர்ந்து தங்க நகை பறிப்புக்காக மாமியார் மைமூனாவை கொடூரமாக தலையில் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

மைமூனா அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனையும் அபகரித்து தப்பி ஓடிய நிலையில், இருவரையும் கைது செய்துள்ளோம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் உள்ள அஸீனாவின் கணவன் நிஜாமுதீனை ஜாமினில் எடுப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் மைமூனாவின் கழுத்தை நெரித்தும் குக்கர் மூடியால் தலையில் தாக்கியும் கொடூர கொலையை செய்திருக்கிறார்கள்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


