Doctor Vikatan: 25 வயதில் பலூன் போல வீங்கியிருக்கும் தொப்புள்.. அறுவை சிகிச்சை தான் தீர்வா?

Doctor Vikatan:  `பிறந்ததும் தொப்புள் சரியாக மூடப்படவில்லை அல்லது தானாக மூடவில்லை என்றால், பின்னாளில் பிரச்னையாகி அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும் என்கிறார்கள்.

25 வயதில்கூட பிரச்னை வரலாம் என்கிறார்கள். அதேபோல, சிலருக்கு தொப்புள் பலூன் போல வீங்கியிருக்கும்.  இந்தப் பிரச்னை பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்...

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி 

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

சில குழந்தைகள் பிறக்கும்போது, அழும்போதும், முக்கும்போதும் தொப்புளைச் சுற்றி சிறியது முதல் பெரிய அளவு வரையிலான வீக்கத்தைப் பார்க்க முடியும்.  இதற்கு அம்பிலிகல் ஹெர்னியா (umbilical hernia ) என்று பெயர்.

குழந்தையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையின் தளர்ச்சி காரணமாக அல்லது தசைப்பகுதி சிறிது வளர்ச்சியடையாமல் இருப்பதாலோ வயிற்றின் உட்பகுதியில் உள்ள  திசு மற்றும் குடல் போன்ற உறுப்புகள், தொப்புளைச் சுற்றி வீக்கம்போன்று சற்று பிதுங்கி வெளிப்படுவதே அம்பிலிகல் ஹெர்னியா  எனப்படுகிற பாதிப்பு. இது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே பொதுவாக வருகிறது.

அதாவது, 30 முதல் 40 சதவிகிதம் என் அளவுக்கு.. அதே சமயத்தில், நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 10 சதவிகிதம் பேருக்கும் இந்தப் பிரச்னை வருகிறது.

சிறிய அளவிலான பாதிப்பு என்றால், குழந்தை அழும்போதும், முக்கும் போதும் மட்டும் வீக்கம் போல வெளியே தெரியும். குழந்தை படுத்திருக்கும்போது தானாக மறைந்துவிடும். இந்த வகை ஹெர்னியா, குழந்தை வளர, வளர சிறியதாகி, வயிற்றுத்தசை வலுவடைந்த உடன் மறைந்து தானே சரியாகிவிடும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு, அவர்கள் ஒன்று முதல் ஒன்றரை வயதாகும்போது, இந்தப் பிரச்னை முழுமையாக குணமாகிவிடும்.

10 சதவிகிதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு வீக்கம் பெரிதாக இருப்பதோடு, படுத்தாலும் மறையாமலிருக்கும்.  இருமுதல், முக்குதல் இல்லாமலும் வெளியே தெரியும்படி இருக்கும். 

இவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மிக அரிதாக குடல் அடைப்பு, குடல் சுற்றிக்கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

தொடர்ந்து வலியால் குழந்தை அழுவது, வயிறு வீங்குவது, தொப்புள் வீக்கத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போவது, வாந்தி, மலம் கழிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தையின் தொப்புளில் ரப்பர் பேண்ட், நூல் போன்றவற்றைக் கட்டிவிடுவது, வீக்கமுள்ள பகுதியில் காசை வைத்து அழுத்தி ஒட்டிவிடுவது போன்ற பாட்டி வைத்தியங்கள் எந்தப் பலனையும் தராது. மாறாக, அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். 

அம்பிலிகல் ஹெர்னியா பாதிப்பானது, குழந்தைகளை மட்டுமன்றி, பெரியவர்களையும் பாதிக்கலாம். இதை அக்வயர்டு அம்பிலிகல் ஹெர்னியா (acquired umbilical hernia ) என்று சொல்வார்கள். உடல் பருமன், அடுத்தடுத்து கர்ப்பம் தரிப்பது, ஒன்றுக்கு மேலான குழந்தைகளை கருவில் சுமப்பது, கர்ப்பத்தின் போது உள்ளே அதிக நீர் கோத்திருப்பது, வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தொடர் இருமல் போன்றவற்றின் காரணமாக அழுத்தம் ஏற்பட்டும் அம்பிலிகல் ஹெர்னியா பாதிக்கலாம். பெரியவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு. ஏனென்றால், குறைபாடுள்ள பகுதியின் வழியே குடலானது வெளியே வர வாய்ப்புகள் உண்டு. 

அம்பிலிகல் ஹெர்னியா பாதிப்பு

வெளியே வந்த குடல் பகுதி தானாக உள்ளே போய்விட்டால் பிரச்னை இல்லை. அப்படிப் போகாமல் மாட்டிக் கொண்டால்  அதை ஸ்டாங்குலேட்டடு ஹெர்னியா (strangulated hernia ) என்று சொல்வோம். இதன் காரணமாக  கடுமையான வலி வரும்.  திசுக்கள் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். இதை உடனடியாக குணப்படுத்த வேண்டியிருப்பதால், எமர்ஜென்சியாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

சிறிய அளவிலான ஹெர்னியா, எந்தப் பிரச்னையும் கொடுக்கவில்லை என்றால் காத்திருந்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு வரும் ஹெர்னியாவில் வலி இருக்காது, வீக்கம் மட்டுமே இருக்கும். காலப்போக்கில் தானாகச் சரியாகிவிடும். 4 வயதுக்கு மேலாகியும் சரியாகாவிட்டால்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். பெரியவர்களுக்கு வருவது அப்படியானதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.