பச்சைப்பயிறு கடையல் செய்முறை

கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இந்த கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பலவிதமான பொருட்களை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தை தவிர்க்க முடியும். மேலும் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய நோய்களின் பாதிப்பில் இருந்தும் விடுபட முடியும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் பச்சைப்பயிறு. இது குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு பலவிதமான ஆரோக்கியமான நன்மைகளையும் தருகிறது. அப்படிப்பட்ட பச்சைப் பயிரை வைத்து கடையல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு – ஒரு கப்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10
தக்காளி – ஒன்று
காய்ந்த மிளகாய் – 3
வரமல்லி – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கரில் ஒரு கப் அளவிற்கு பச்சை பயிரை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் சேர்த்து குக்கர் மூடியை மூடி அடுப்பில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.

இப்பொழுது வரமல்லியை இடிக்கல்லில் போட்டு நன்றாக ஒன்று இரண்டாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம், நாம் இடித்து வைத்திருக்கும் வரமல்லி இரண்டையும் சேர்க்க வேண்டும். இரண்டும் நன்றாக பொரிந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும், காய்ந்த மிளகாய் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம், பூண்டு நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து இதனுடன் பெருங்காயத் துளையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வதக்கிய இந்த பொருட்கள் அனைத்தையும் நாம் வேக வைத்திருக்கும் பச்சை பயிரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்து விட வேண்டும். குறைந்தது மூன்று நிமிடமாவது இது கொதிக்க வேண்டும். அவ்வாறு கொதிக்கும் பொழுது தேவையான அளவு உப்பையும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு இறக்கி விடுங்கள்.

இது நன்றாக ஆறிய பிறகு பருப்பு கடையும் மத்தை பயன்படுத்தி நன்றாக கடைந்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பச்சைப்பயிறு கடையில் தயாராகிவிட்டது. மத்தை வைத்து தான் கடைய வேண்டும் மிக்ஸியில் போட்டு அடிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் சாமை முறுக்கு செய்முறை

பலவிதமான சத்துக்கள் நிறைந்த பயறு வகைகளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதோடு வெயில் காலத்திற்கு ஏற்றார் போல் குளிர்ச்சி மிகுந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post பச்சைப்பயிறு கடையல் செய்முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.