கேபேஜ் வடை செய்முறை
விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகள் பகல் முழுவதும் ஓடியாடி விளையாடிவிட்டு மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். அந்த சமயத்தில் கடையிலிருந்து வாங்கி தருவதை விட நம்முடைய வீட்டிலேயே அதே சமயம் ஆரோக்கியமான சத்து மிகுந்த காய்கறிகளை வைத்து எளிமையான முறையில் ஸ்நாக்ஸ் செய்து தர முடியும். அந்த வகையில் கோஸை வைத்து வடை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – ஒரு மூடி
தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – 15 கிராம்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – ஒன்று
கோஸ் – 1/4 கிலோ
பூண்டு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
ரவை – ஒரு கப் அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் தனியா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு, புளி, சிறிதளவு கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக மசாலா போல தயார் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த மசாலாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கோஸ் இவை அனைத்தையும் சேர்த்து, இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து வடைக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக பிணைந்து பத்து நிமிடம் மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள்.
10 நிமிடம் கழித்து இந்த மாவை திரும்பவும் பிணைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் நன்றாக காயட்டும். அதற்குள் ஒரு தட்டில் ரவையைக் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் உருண்டையாக பிடித்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை எடுத்து ரவையில் நன்றாக அனைத்து இடங்களிலும் படும் படி உருட்டி எடுத்து வடை போல் உள்ளங்கையில் வைத்து அமுக்கி எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் போட்டு வேக விட வேண்டும். குறைந்த தீயில் வைத்து தான் இந்த வடையை சுட வேண்டும். குறைந்தபட்சம் மூன்றில் இருந்து நான்கு நிமிடம் எண்ணெயில் நன்றாக வடை வேக வேண்டும். அப்பொழுதுதான் இதற்குள் இருக்கக்கூடிய கோஸ், வெங்காயம், பூண்டு அனைத்தும் நன்றாக வேகும். மிகவும் சுவையான அதேசமயம் ஆரோக்கியம் மிகுந்த கேபேஜ் வடை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: முள்ளங்கி வடை ரெசிபி
அதிக நேரம் செலவு செய்யாமல் மிகவும் எளிதில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே இப்படி ஆரோக்கியமான வடையை தயார் செய்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக தரலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
The post கேபேஜ் வடை செய்முறை appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

