முள்ளங்கி வடை ரெசிபி
உளுந்த வடை, மெது வடை, பருப்பு வடை, ஆம வடை, கீரை வடை என்கிற வரிசையில் வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த முள்ளங்கி வடை, இனி உங்களுடைய பேவரட் வடைகளில் ஒன்றாக போகிறது. ஆரோக்கியத்தை தரும் இந்த ஸ்பெஷல் முள்ளங்கி வடை ரெசிபி சுலபமான முறையில் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த தகவலைத் தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
முள்ளங்கி வடை (Radish Vadai) செய்ய தேவையான பொருட்கள் :
உளுந்தம் பருப்பு – 1 கப்
முள்ளங்கி – 1 (துருவியதும், தண்ணீர் பிழிந்ததும்)
சின்ன வெங்காயம் – 6 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் துண்டு (நறுக்கியது)
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
மிளகு – 1/2 டீஸ்பூன் (optional)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
முள்ளங்கி வடை செய்முறை விளக்கம்:
முள்ளங்கி வடை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் உளுந்தம் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 2 மணி நேரம் ஊற வைத்த பின்னர், அதனை மிக்சியில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து வெண்ணெய் பந்து போல விழுதாக அரைக்கவும். அடுத்து முள்ளங்கியை தயார் செய்யவும். ஒரு முள்ளங்கியை தோலை சீவி விட்டு துருவி, அதில் உள்ள அதிகமான தண்ணீரை கையைப் பயன்படுத்தி பிழியுங்கள். முள்ளங்கிக்கு மணம் அதிகமாக இருந்தால், துருவிய பிறகு சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் விட்டுவிட்டு பிழிந்து எடுப்பது நல்லது.
பின்னர் அரைத்த உளுந்து விழுதில் துருவி பிழிந்த முள்ளங்கியை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்கள், தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள், கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகள், அலசி நறுக்கிய கொத்தமல்லித் தழைகள் அனைத்தையும் சேர்த்து, விரும்பினால் கொஞ்சம் மிளகையும் சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த மாவை வடை போல தட்டிக் கொள்ளுங்கள். பால் கவர் அல்லது வாழை இலை பயன்படுத்தினால் சிறிதளவு தண்ணீர் தொட்டு வடை போல அழகாக தட்டிக் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் ஜல்லி கரண்டியில் பின்புறத்தில் லேசாக எண்ணெயை தடவி அதன் மீது வடை போல தட்டி நடுவில் ஓட்டை போட்டு கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
அதீத கண் திருஷ்டிக்கான 5 அறிகுறிகள்
அதில் வடையை சுடுவதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு வடைகளாக இதே போல கரண்டியில் தயார் செய்து போடுங்கள். பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரே போல சீரான முறையில் வடையை வேகவைத்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து பரிமாறினால் அடடா.. அவ்வளவு ருசியாக இருக்கும். இதற்கு சட்னி, சாம்பார் கூட தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். ஆரோக்கியமும் கூட! ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.
The post முள்ளங்கி வடை ரெசிபி appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

