`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 23-ம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் வைகை அதிவேக விரைவு ரயிலில் ஏறி விழுப்புரத்திற்கு பயணம் செய்துள்ளார்.

தற்போதைய திருச்சி ரயில் நிலையம்

காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து ஏறிய நிலையில், அவர் பயணித்த ரயில் 9.30-க்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.

அப்பொழுது, முதல் பிளாட்பாரத்தில், வசந்தம் கேட்டரிங் நிறுவனத்தில் இட்லி பார்சல் வாங்கினார். ஒரு இட்லி பார்சல் ரூ.30 என, இரண்டு பார்சல்கள் ரூ 60-க்கு வாங்கினார். ரயில் கூட்ட நெரிசல் இருந்ததால் கீழே இறங்காமல் ரயிலில் இருந்தவாறு இட்லி பார்சலை வாங்கியுள்ளார்.

அப்பொழுது, ரசீது கேட்ட போது கேண்டீன் ஊழியர் கொடுக்க மறுத்துள்ளார். மேலும், பார்சலை வாங்கி பார்த்த போது அதன் மீது எம்.ஆர்.பி விலை ரூ.26 என இருந்தது. இதனால், ஆரோக்கியசாமி விற்பனையாளரை அழைத்து எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக இரண்டு இட்லி பார்சலுக்கு ரூ.8 வாங்கி உள்ளீர்கள் என்று, அதனை திருப்பி கேட்டதற்கு விற்பனையாளர் அலட்சியமாக பேசி விட்டுச் சென்றுள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில்

மேலும் அவர், அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது சாம்பார் மட்டும் இருந்தது, சட்னி இல்லை. அளவும் குறைவாக இருந்தது. வேறு வழியில்லாமல் அதை சாப்பிட்ட ஆரோக்கியசாமி 11.40-க்கு விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர், இரயில்வே போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து, திருச்சி கோட்ட மேலாளர், கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கும் கூடுதலாக வசூலித்த 8 ரூபாய் திருப்பி வழங்க கோரி புகார் மனுவை எழுத்து பூர்வமாக அளித்துள்ளார்.

இதனை விசாரணை செய்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சம்மந்தப்பட்ட கேட்டரிங் உணவகத்திடமிருந்து ரூ.1000 அபராதம் வசூலித்துள்ளார். ஆனால், ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டிய 8 ரூபாய் கொடுக்கவில்லை.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிஷோர்குமார் மூலம் புகார் செய்தார்.

நீதிமன்றம்

எதிர்தரப்பில் வசந்தம் கேட்டரிங் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கே.சுரேஷ்பாபு, இரயில்வே சார்பில் முரளி அவர்களும் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த குறைதீர் ஆணையத் தலைவர் சதிஷ்குமார், "கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியமைக்கு, புகார் தாரருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுக்காக ரூபாய் 10,000 மற்றும் கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயும் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் கேட்டரிங் உரிமையாளர் இந்த பணத்தை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மாதம் 9 சதவிகிதம் வட்டியுடன் செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.