Vikatan Nambikkai Awards : `பிரேம் தான் உண்மையான மெய்யழகன் - அன்பால் நெகிழ்ந்த விருது மேடை | Live
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பயணத்தைக் தொடங்கி, `96, `மெய்யழகன் என காதலையும், உறவுகளின் அன்பையும் திகட்டாதத் தேனாக விருந்தளித்த பிரேம் குமாருக்கு, `டாப் மனிதர்கள் பிரிவில் `அன்பின் கலைஞன்’ விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது ஆனந்த விகடன். நடிகர் சிவக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கைகளால் பிரேம்குமார் விருது பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய சிவக்குமார், "நான் கிராமத்த விட்டு சென்னைக்கு வந்து 67 வருஷம் ஆச்சு. ஒருமுறை ஹீரோ ஆனதுக்கு அப்புறம் ஊருக்கு போனேன். போனதும் ஊரே கூடிடுச்சு. ஒரு குரல் மட்டும், `டேய் பழனிசாமி’னு வந்துச்சு. எல்லோரும் அவர அடிக்க போய்ட்டாங்க.

அப்போ சொன்னே அவன் என்னோட ஸ்கூல்ல படிச்சவன்னு. என்ன விட அழகானவன். என் வீட்டுக்கு வருவியானு கேட்டு என்ன கூட்டிட்டு போனான். அன்னைக்கு அவன் கூட பழைய கஞ்சி குடிச்சேன்" என்று தனது நினைவுகளைப் பகிர்ந்தவர், "என் மகன் பிரேம்குமாருக்கு விகடன் விருது துவக்கம். அடுத்து தேசிய விருது" என பிரேம்குமாரை வாழ்த்தினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பி.சி.ஸ்ரீராம், "எனக்கு சொந்த ஊர் ஏதும் கிடையாது. சென்னைதான் எனக்கு ஊர். எங்க பெரிம்மா வீட்லதான் பொறந்தேன். அதை மிகப்பெரிய விஷயமா நான் நினைக்கிறேன். என் அப்பா காதலிக்கிற ஒரே விஷயம் செடி மட்டும்தான். எப்படா படிக்கச் போறான்னு என் அப்பா திட்டுவாரு. அதன் ஆழம் அப்போது எனக்கு தெரியாது. நான் ஸ்கூலுக்கு போனதே கிடையாது. சினிமா என்னை முழுமையான மனிதனாக மாற்றியது" தனது நினைவுகளை பகிர்ந்தவர்,
"யாருனே தெரியாத ஒரு பையன் எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தான். அத படிச்சிட்டு ஆடிட்டேன். அது ரொம்ப அழகாக இருந்தது. அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு ஹாப்பி மென் பேர் வச்சிருக்கலாம். அதுதான் `மெய்யழகன்’. பிரேம் உண்மையான மெய்யழகன். அந்த ஸ்கிரிப்ட் முழுமையா அப்படியே வச்சிருக்கேன். பிரேம் வளரும் கலைஞன்" என்று பிரேம்குமாரை வாழ்த்தி, "96 பாகம் 2 நான் பண்ண போறேன்" என்ற அப்டேட்டும் கொடுத்தார்.

விருதை பெற்ற அன்பின் கலைஞன் பிரேம்குமார், ``என்னோட பிட்னஸ் ஸ்பிர்ட் சிவக்குமார் சார். உடல்நலனுக்கு மட்டுமல்லாது, மனதுக்கும்தான். 2D மெய்யழகன் பண்ணும்போது சார் கூடவே இருந்தாரு. என் வாழ்க்கையின் முக்கியமான உறவு சிவக்குமார் சார்" என்று சிவக்குமார் குறித்தும்,
"சார் படிச்ச இன்ஸ்டிடியூட்லதான் நானும் படிச்சேன். சார்கூட ஒர்க் பண்றதுக்கு எல்லோருக்கும் ஆச இருக்கும். எனக்கு பயமும் கூட இருந்துச்சு. ஆனா, ஒருநாள் நான் டைரக்டர் ஆகிட்டு அவர்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுப்பேன்னு நான் நெனைச்சதே இல்ல." என்று பி.சி.ஸ்ரீராம் குறித்தும் பேசியவர், "96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன். பி.சி.ஸ்ரீராம் சார்கூட ஒர்க் பண்ணப் போறேன்" என அசத்தல் அப்டேட்டும் கொடுத்தார்.
`கொட்டுக்காளி, `வாழை, `மெய்யழகன் என கடந்த ஆண்டு நம் மனதைத் தொட்ட படைப்புகளின் மூலம், தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய ஒலி முகங்களாக உயர்ந்திருக்கும் ஒலி கலைஞர்கள் சுரேன் - அழகியகூத்தன் ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான `டாப் 10 இளைஞர்கள் பிரிவில் ஒலி ஆளுமைகள் விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் மாரி செல்வராஜ் கைகளால் விருது பெற்றிட்டுக்கொண்டு பேசிய அழகிய கூத்தன், "சினிமாவுல நிறைய துறைகள் இருக்கும்போது ஒலியைத் தேர்ந்தெடுத்து கொடுத்தது சந்தோஷம், மாரி சாரின் அடுத்த படத்திலும் ஒர்க் பண்றேன். நானும் சுரேனும் 12 வருஷமா ஒண்ணா ஒர்க் பண்றோம். பட வேலைகளால் இன்றைக்கு அவரால் வர முடியவில்லை" என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், "பரியேறும் பெருமாள் முதல் பைசன் வரைக்கும் ஒர்க் பன்றாரு. நாங்க என்ன ஒர்க் பண்ணாலும் வெளிய வரலன்னு நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கிறார். குட் பேட் அக்லி, வாழைக்கும் சுரேன்தான் வேலை பார்த்திருக்கிறார். பரியேறும் பெருமாள்ல ஜெயிச்சிடலாம் என்று நம்பிக்கை கொடுத்தவர்கள் இவர்கள்தான். இவர்களைக் கண்டுபிடித்து விகடன் நம்பிக்கை விருது அளித்தது சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறினார்.

இந்த விருதை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜ், சில கேள்விகளுக்கும் `நச்’ பதில்களைத் தந்தார். அவை...
உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர் யார்?
இயக்குநர் ராம்.
உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர் யார்?
என் மகன். என் குழந்தைகள் வளர்ந்து, இந்த சமூகத்துக்கான முக்கியமான மனிதர்களாக மாறினால் நான் சரியாக இருந்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் வியந்த நம்பிக்கை மனிதர்கள்?
எனக்கு நம்பிக்கை விதைத்த மனிதர்களை என் வாழ்வில் தினமும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பெயர்கள் எனக்குத் தெரியாது. அவர்கள் அன்பை, நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். நான் செயல்பட உந்து சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கான நம்பிக்கை மனிதர்கள்.
பல இளைஞர்கள் சமூக மாற்றத்துக்காக உரையாட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள்தான் எனக்கான நம்பிக்கை இளைஞர்கள்.
‘பைசன்’, தனுஷ் பட அப்டேட்..?
`பைசன் முடிந்துவிட்டது. நானும் தனுஷ் சாரும் இணைந்து அடுத்து படம் பண்றோம். எளிமையான கதையைப் பெருசா பண்ணப்போறேன். அதற்கான வேலையைத்தான் அடுத்து பார்க்கப்போகிறேன்.

விருது பெற்ற தனராஜ் பேசும்போது, ``தம்பி மாரிசெல்வராஜுக்கும், எங்களுடன் ஆரம்பத்திலிருந்து எப்போதும் துணை நிற்கும் விகடனுக்கும் நன்றி.
2005-ல் இந்தப் பணியை ஆரம்பித்தேன். பழங்குடி மக்களின் பிரச்னையைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து, அதன் மூலம் தீர்வுகள் பல கிடைக்க ‘விகடன்’ துணை நின்றிருக்கிறது.
இன்றைய முக்கியப் பிரச்னையாக, `இந்த மண் இல்லாமல் நாங்கள் இல்லை’ என்று இயற்கையை நேசித்து நிற்கிற மக்கள் ஒரு கூட்டம். `இதையெல்லாம் எப்படி விற்பனை செய்யலாம்?’ என்று நிற்கிறது இன்னொரு கூட்டம். இயற்கையை விற்பதற்குப் பன்னாட்டு சக்திகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக, அந்தப் பன்னாட்டு சக்திகளை எதிர்த்து இயற்கையை நேசித்துப் பாதுகாத்து நிற்கும் பழங்குடி மக்கள் பக்கம் நிற்கிறோம் நாங்கள்.

என் மனைவி லீலாவதி குடகுமலை பழங்குடியைச் சேர்ந்தவர். நாங்கள் இருவரும் பழங்குடியினர் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அன்று `பூர்வகுடி மக்களுக்காக நின்று போராடுவோம்’ என்று உறுதியளித்தோம். இன்றும் அதைச் செய்துகொண்டிருக்கிறோம். அதை என்றும் செய்துகொண்டேயிருப்போம்’’ என்று உறுதிபடப் பேசினார்.
லீலாவதி பேசும்போது, ``இந்த மேடையில் ஒரு பழங்குடிப் பெண்ணாக நிற்பதில் பெருமைப்படுகிறேன். எங்களுக்குத் துணையாக நிற்கும் விகடனுக்கு நன்றி’’ என்றார்.
விருது வழங்கிய மாரிசெல்வராஜ், ``கலையில் நாங்கள் மக்களுக்காகப் போராடுவதைவிட, களத்தில் நின்று போராடுபவர்கள் மேலானவர்கள். அவர்களின் ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளின் நாயகர்கள் அவர்கள்’’ என்றார்.
விகடன் நம்பிக்கை விருதுகள் 2024 விழாவில்...

விகடன் நம்பிக்கை விருதுகள் 2024 விழாவில்...

`நான் முதல்வன்’ திட்டம் - எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை!
`நான் முதல்வன்’ திட்டத்தின் தொடக்க விழாவை நடத்திய இறையன்பு ஐ.ஏ.எஸ் விருது வழங்க, `நான் முதல்வன்’ திட்டத்தை முன்னின்று செயல்படுத்திக்கொண்டிருக்கும் கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

கிராந்தி குமார் பேசும்போது, ``இறையன்பு சார் எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. நம் நாட்டின் பொருளாதாரத்தில், கல்வியில் சிறந்து விளங்க முக்கியப் பங்காற்றிவருகிறது இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவர்கள் இதில் பயனடைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

இறையன்பு தன் உரையில், ``நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரையும் சுயமாகத் தங்களின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் திறன்கொண்டவராக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்’’ என்று அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

UPSC வெற்றியாளர்களில் ஒருவரான சங்கர் பாண்டியராஜன், (தமிழ் வழியல் UPSC தேர்வில் வெற்றிபெற்றவர்) பேசும்போது,
``தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் படித்தவன் நான். பெருநகரமான சென்னைக்கு நான் வந்தபோது, பயிற்சி வகுப்புகள் இல்லை என்பதே பெரும் கவலையாக இருந்தது. `நான் முதல்வன்’ திட்டம் வந்தவுடன் அந்தக் கவலை தகர்ந்துபோனது. எங்களுக்குப் பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் எனத் துணையாக இருந்தது இந்த `நான் முதல்வன்’ திட்டம். என்னைப் போன்ற கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது `நான் முதல்வன்’ திட்டம்தான்’’ என்று பாராட்டினார்.
விகடன் நம்பிக்கை விருதுகள் 2024 விழாவில் நடிகர் சிவகுமார்!


`மரபிசைக் காவலர்கள்!’
விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் ஷேக் மெகபூப் சுபானி - காலிஷா பீ மெகபூப் - `மரபிசைக் காவலர்கள்’ விருதை பெற்றார்கள். விருதை இசைக்கலைஞர் சீர்காழி சிவசிதம்பரம் வழங்கினார்.
ஒன்பது தலைமுறைகளை நாகஸ்வர இசைக்கலைக்கு ஒப்புக்கொடுத்த ஒரு மரபுக் குடும்பத்தில் உதித்து, 47 ஆண்டுகளாக நாகஸ்வரத்தில் தமிழிசைத்து, உலகத்தையே மயக்கிக்கொண்டிருக்கும் இந்த இசை இணையருக்கு ‘மரபிசைக் காவலர்கள்’ என்ற டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது.

சீர்காழி சிவசிதம்பரம் பேசியபோது, ``புரட்சிகரமான இசைத் தம்பதி இவர்கள். 1980 முதல் உயிர்மூச்சாக நாகஸ்வரத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்று முதல் இவர்களை நான் பார்த்து, ரசித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்று பாராட்டினார்.
ஷேக் மெகபூப் சுபானி, ``எங்க வம்சம் பாரம்பர்யமாக நாகஸ்வரம் வாசிக்கும் குடும்பம். நாங்கள் எட்டாவது தலைமுறை. சீர்காழி சிவசிதம்பரம் கையால் இந்த விருது வாங்கியதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்மஶ்ரீ வாங்கும்போதுகூட இவ்வளவு சந்தோஷம் இல்லை. இப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வீட்டில் கணவர் - மனைவி இருவரும் சேர்ந்து விருதுகள் வாங்குவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்’’ என்று நெகிழ்ந்தார்.
விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ்!



விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில்...!




விகடன் நம்பிக்கை விருதுகள் 2024 விழாவில் நாகஸ்வரக் கலைஞர்களான ஷேக் மெகபூப் சுபானி - காலீஷா பீ மெகபூப்!

தொடங்கியது விகடன் நம்பிக்கை விருது வழங்கும் விழா
தருண் சேகரின் யாழிசை இசைக்குழுவின் நிகழ்ச்சியுடன் தொடங்கியது விகடன் நம்பிக்கை விருதுகள் 2024 விழா!






விகடன் நம்பிக்கை விருதுகள் 2024
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் இந்த ஆண்டுக்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
2024-ம் ஆண்டின் `டாப் 10 மனிதர்கள் விருது’, `டாப் 10 இளைஞர்கள் விருது’, நம்பிக்கை விருதுகளில் உச்சமாகக் கருதப்படும் `பெருந்தமிழர் விருது’ ஆகியவற்றை வழங்கும் விழா நடைபெறும் கலைவாணர் அரங்கை நோக்கி வரும் ஆளுமைகளை உச்சி முகர்ந்து வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது விகடன்.

விருதுகள் பட்டியல்:
டாப் 10 நம்பிக்கை மனிதர்கள்
எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை - நான் முதல்வன் திட்டம்
ஆய்வுப்பறவை - ஆ.இரா.வேங்கடாசலபதி
அன்பின் கலைஞன் - ச.பிரேம்குமார்
பூர்வகுடிகளின் நேசர்கள் - தனராஜ் - லீலாவதி
பெருமிதப் பெண்மணி - ஸ்மிதா சதாசிவன்

அக்கறை அதிகாரி - வெங்கடேஷ்
விட்டுக்கொடுக்காத சட்டப் போராளி - வழக்கறிஞர் லோகநாதன்
மரபிசைக் காவலர்கள் - ஷேக் மெகபூப் சுபானி - காலீஷா பீ மெகபூப்
நல்மனத் தொழிலதிபர் - நேப்பாள்ராஜ்
மனிதநேய மீட்பர்கள் - P.C.V.C (இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் க்ரைம் பிரிவென்ஷன் அண்ட் விக்டிம் கேர்)
டாப் 10 நம்பிக்கை இளைஞர்கள்:
நம்ப
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


