அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239

டாக்டர், நான் ரொம்ப வருஷமா சுய இன்பம் செஞ்சுக்கிட்டே இருக்கேன். இப்போ எனக்கு வயசு 35 ஆகிடுச்சு. கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. ஸ்பெர்ம் எல்லாம் தீர்ந்துப் போயிட்டிருக்குமா டாக்டர்?

டாக்டர், கல்யாணத்துக்கு முன்னாடி அடிக்கடி சுய இன்பம் செய்வேன். இப்போ, கல்யாணத்துக்கப்புறம் விந்து வெளியேத்தவே முடியல. ஒருவேளை சுய இன்பம் செஞ்சி செஞ்சி விந்துவெல்லாம் தீர்ந்துப் போயிருக்குமோ?

Marriage

இந்த இரண்டு கேள்வியையும் கேட்டது உயர் படிப்பு படித்த ஆண்கள். மேலே இருக்கிற கேள்விகளை பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவர்களில் இருந்து பி.ஜி., டாக்டரேட் செய்த ஆண்கள் வரைக்கும் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு ஒரே காரணம், சின்ன வயதில் அவர்களுக்கு போதுமான செக்ஸ் கல்வி கிடைக்காததுதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

விந்து தீர்ந்துபோதல் மற்றும் திருமணத்துக்குப் பிறகு விந்து வெளியேற்ற முடியாதவர்களுக்கான தீர்வுகள் குறித்து செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் கூறுகையில்,

சுய இன்பம் செய்வதால் எப்படி ஆண்மைக்குறைபாடு வராதோ, அதேபோல விந்தணுக்கள் தீர்ந்துபோய்விடும் என்பதிலும் உண்மை கிடையாது. அதனால், கல்யாணம் நிச்சயமான ஆணுக்கு சுய இன்பம் பற்றிய விளக்கங்களை அளித்து, வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தேன்.

விந்தணுக்கள்
விந்தணுக்கள்

இனி, கல்யாணத்துக்கப்புறம் விந்து வெளியேத்தவே முடியல என்றவருடைய பிரச்னையைப் பார்ப்போம். விந்து வெளியேற்ற முடியாததில் இரண்டு வகைகள் இருக்கின்றன. வாழ்நாள் முழுவதுமே விந்து வெளியேற்ற முடியாதவர்கள். சிலருக்கு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விந்து வராது. அதாவது, அவர்கள் சுய இன்பம் செய்யும்போது விந்து வெளிவந்திருக்கும். ஆனால், திருமணமான பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.

இவர்கள், இது வெளியே தெரிந்தால் தனக்கு ஆண்மையில்லை என சொல்லி விடுவார்களோ என பயந்துகொண்டு, மனைவியிடம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி உறவைத் தவிர்த்துவிடுவார்கள். டாக்டரை பார்ப்பதையும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். விளைவு, ஒரு காலக்கட்டத்துக்கு மேல் விறைப்புத்தன்மையிலும் சிக்கல் வந்துவிடும். அப்போதுதான் பயந்துகொண்டு எங்களிடம் வருவார்கள்.

என்னை சந்திக்க வந்திருந்த அந்த ஆண், திருமணமான சில வாரங்களிலேயே வந்துவிட்டார். அவரிடம் பேசியதில் வேறொரு சிறிய உடல் பிரச்னைக்காக அவர் சாப்பிட்ட ஒரு மருந்தின் காரணமாகத்தான் விந்து வெளியேறுவதில் சிக்கல் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அந்த மருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு, சில செக்ஸ் பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து அனுப்பினேன். இந்த அளவிலேயே அவருடைய பிரச்னை சரியாகிவிட்டது.

Dr. Kamaraj
Dr. Kamaraj

சிலருக்கு செக்ஸ் பயிற்சிகள் மட்டுமே, விந்து வெளியேற முடியாத பிரச்னைக்கு தீர்வளிக்காது. அவர்களுக்கு விந்து வெளியேற்றுவதற்கான மாத்திரைகளை வழங்குவோம். சிலருக்கு வைப்ரேட்டர் வழியாக வெளியேற்ற வேண்டி வரலாம். மொத்தத்தில் இதுவோர் ஆண்மைக்குறைபாடு பிரச்னை அல்ல; மருத்துவ பிரச்னை மட்டுமே. காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளித்தால் போதும் என்கிறார் டாக்டர் காமராஜ்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.