Travel Contest : `சுற்றுLaw - விடுதி டு உணவு... சுற்றுலாப் பயணிகளின் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒருவர் சுற்றுலா செல்லுவது, பிறிதொரு உலகை அனுபவிப்பது போன்றது. நாம் புதிய இடங்களை பார்வையிடும்போதும், பல்வேறு கலாசாரங்களை அனுபவிக்கும்போதும், உலகில் உள்ள இயற்கை அழகை ரசிக்கும்போதும், சுற்றுலாப் பயணிகளாக மாறுகிறோம்.
தற்போது சுற்றுலா என்பது உலகை தாண்டி வேறு கிரகங்கள் வரை சென்றுகொண்டிருக்கையில், நம் சுற்றுலா தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒரு சுற்றுலா பயணிக்கான உரிமைகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
அனுபவம் இன்னும் மேம்படும்
இந்தியாவின் பிரமாண்டமும் பல்வகைமையும் உலகம் அறிந்ததே. சுற்றுலா கொடுக்கும் அனுபவங்கள் நாம் எதிர்பார்ப்பதைவிட அழகும் அற்புதமும் ஆகும். ஆனால், ஒரு சுற்றுலாப் பயணி தனது உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்தால் அந்த அனுபவம் இன்னும் மேம்படும்.
சுற்றுலாத் துறை இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் உரிமைகளை அறிந்து செயல்படும்போது, அவர்கள் தரமான சேவைகளை எதிர்பார்க்க முடியும்.
தரமான சேவைகள் வழங்கப்படும்போது, அது நமது நாட்டின் நற்பெயரை உலக அளவில் உயர்த்தும் மற்றும் உலக பயணிகளை ஈர்க்கும். ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தனது உரிமையை நிலைநாட்டும்போது, தங்கும் இடங்கள், உணவு விடுதிகள், போக்குவரத்து சேவைகள் போன்ற சுற்றுலாத் துறை சார்ந்த அனைவரும் மேம்பட்ட சேவைகளை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள்.
சுற்றுலாத் துறையின் தரம் உயரும்போது, அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
தங்கும் இடத்திற்கான உங்கள் உரிமைகள்:
சுற்றுலாப் பயணத்தின்போது நாம் எதிர்கொள்ளும் முக்கியமான விஷயங்களில் ஒன்று தங்கும் இடம். தங்கும் இடத்தைப் முன்பதிவு செய்வது முதல், அறையின் தரம் மற்றும் செக்-அவுட் வரை நமக்கு சில உரிமைகள் உள்ளன.
முன்பதிவு செய்வதற்கு முன் ஹோட்டலின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிப்பது அவசியம். உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு என்பது ஹோட்டல் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி அறையை வழங்க வேண்டிய சட்டப்பூர்வ கடமையைக் குறிக்கிறது.

ஒருவேளை உங்கள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட விருந்தினர்களுக்கு சமமான அல்லது உயர்ந்த தரத்தில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டியது ஹோட்டலின் பொறுப்பு. அவ்வாறு மாற்று ஏற்பாடு செய்ய முடியாவிட்டால், நீங்கள் செலுத்திய முழு பணத்தையும் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. அதனால் ஏற்படும் சிரமத்திற்கும் நீங்கள் இழப்பீடு கோரலாம்.
ஹோட்டல் அறைகள் சுத்தமாகவும், நல்ல நிலையிலும் இருக்க வேண்டும். அறையின் அளவு மற்றும் அதில் வழங்கப்படும் வசதிகள் ஹோட்டலின் நட்சத்திர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திர மதிப்பீட்டிற்கும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன.
உதாரணமாக, 1 மற்றும் 2 நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்தபட்ச அறை அளவு 120 சதுர அடி இருக்க வேண்டும், அதே நேரத்தில் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு அது 200 சதுர அடியாக இருக்க வேண்டும் (இது குளியலறை தவிர்த்த அளவு). 4, 5 மற்றும் 5 நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டல்களில் ஒரு படுக்கையறை தொகுப்பு (suite), அறைக்குள் பாதுகாப்பு பெட்டகம், மதுக்கூடம் (லைசென்ஸ் இருந்தால்), தேநீர்/காபி தயாரிக்கும் வசதி போன்ற கூடுதல் வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். அனைத்து தங்கும் இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்.

ஹோட்டலில் செக்-இன் செய்யும்போது, முக்கிய விருந்தினர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். செக்-இன் நேரத்தில் சரியான புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இருக்க வேண்டும், பான் கார்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாது) காண்பிப்பது கட்டாயமாகும்.
பொதுவாக, ஹோட்டல்களின் செக்-இன் நேரம் நண்பகல் 12 மணியாகவும், செக்-அவுட் நேரம் காலை 11 மணியாகவும் இருக்கும். இருப்பினும், சில ஹோட்டல்களில் இந்த நேரங்கள் மாறுபடலாம்.
தாமதமாக செக்-அவுட் செய்ய விரும்பினால், ஹோட்டலின் கொள்கையைப் பொறுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான செக்-அவுட் நேரத்தை நிர்ணயிப்பதற்கான முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அறை முன்பதிவின் போது காட்டப்படும் புகைப்படங்களின்படி மற்றும் வாக்குறுதிகளை அறை தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் புகார் அளிக்கலாம். உரிமைகள் இருக்கின்றன என்பதைக் கேட்டவுடன், எல்லாரும் உடனே சட்ட புகார் கொடுக்கத் தொடங்க வேண்டியதில்லை. முதலில், ஹோட்டல் மேலாளருடன் குறைகளை பண்பாக கூறுங்கள். பெரும்பாலான பிரச்னைகள் அங்கேயே தீர்ந்து விடும், சேவை வழங்குநரும் உடனடி ஆதரவுடன் நடந்து கொள்வார்.

சமீபத்தில் பெங்களூருவில் ஒருவருக்கு ஹோட்டல் அறை மறுக்கப்பட்டபோது, அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், நீதிமன்றம் அவருக்கு ₹45,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
எனவே, முன்பதிவு செய்வதற்கு முன் ஹோட்டலின் ரத்து கொள்கையை கவனமாக சரிபார்க்கவும். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், முன்பெல்லாம் நுகர்வோர் குறைபாடுகளைத் தீர்க்க நீதிமன்றங்களை அணுகுவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது இப்போது உங்கள் கைக்குள் வந்துவிட்டது, அதுவும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உங்கள் மொபைல் போனிலேயே சாத்தியமாகியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ், இ-ஜாக்ரிதி (e-Jagriti) - https://e-jagriti.gov.in/ என்னும் தலத்தில் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்து, ஆவணங்களை சமர்ப்பிப்பது, நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பது என அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை, வழக்கறிஞர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், வீட்டில் இருந்தபடியே உங்கள் உரிமைகளுக்காகப் போராடலாம். இந்த டிஜிட்டல் புரட்சி, நுகர்வோர்களுக்கு அதிகாரமளித்துள்ளது மட்டுமல்லாமல், நீதி கிடைப்பதையும் முன்பை விட எளிதாக்கியுள்ளது. நீதிமன்றம் விசாரணையின் அடிப்படையில் ஹோட்டலுக்கு குறைபாடுகளை சரிசெய்ய, சேவையை மேம்படுத்த, கட்டணத்தை திரும்ப வழங்க அல்லது சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும்.
தள முகவரி: https://e-jagriti.gov.in
e-JAGRITI செயலி: Play Store / App Store இல் கிடைக்கும்
SMS மூலம்: 8800001915 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள் – அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்!
தொலைபேசி : 1800-11-4000 (அல்லது) 1915
ஒருவேளை தாங்கள் நீதிமன்றம் செல்ல விரும்பாத நிலையில், ஆன்லைன் நுகர்வோர் புகார் போர்ட்டல்களில் புகார் அளிப்பதன் மூலம், ஹோட்டல் நிர்வாகத்துடன் சமரசம் நடத்தி குறைபாடுகளை சரிசெய்ய கோரலாம், உதாரணமாக, பழுதடைந்த வசதிகளை சரிசெய்யவோ, சேவையை மேம்படுத்தவோ அல்லது அதற்கான இழப்பீடாக கட்டணத்தில் சலுகை பெறவோ முயற்சிக்கலாம். ஆன்லைன் நுகர்வோர் புகார் போர்ட்டல்கள் பெரும்பாலும் சமரசத்தை இலக்காகக் கொண்டிருக்கையில், நுகர்வோர் நீதிமன்றம் சட்டப்பூர்வமான அதிகாரத்துடன் கட்டாயப்படுத்தும் தீர்வுகளை வழங்குகிறது.
நுகர்வோர் மைய உதவி சேவைகள் (National Consumer Helpline):
தள முகவரி: https://consumerhelpline.gov.in
SMS மூலம்: 8800001915 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள் – அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்!
தொலைபேசி : 1800-11-4000 (அல்லது) 1915

சுற்றுலாவிற்கு மட்டுமின்றி ஒரு நுகர்வோராக உங்கள் உரிமைகள் எப்போது பாதிக்கப்பட்டாலும், அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த சேவைகள் அனைத்து விதமான நுகர்வோர் குறைபாடுகளுக்கும் தீர்வுகளை வழங்குகின்றன.
உணவு மற்றும் அதன் விலை நிர்ணயம் தொடர்பான உங்கள் சட்ட உரிமைகள்
பயணம் என்றாலே புதிய உணவு, புதிய ருசி. உணவு சரி இல்லாமல் போனால், அது ஒட்டுமொத்த சுற்றுலா மற்றும் மகிழ்ச்சி உணர்வையும் சிதைத்துவிடும்.
இந்தியாவில், ஒவ்வொரு உணவகமும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) என்ற மையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உணவகம் ஒன்றில் உணவுத் தரத்தில் சந்தேகம் வந்தால், அல்லது தவறான பொருள் (கெட்டுப் போன உணவு) கண்டால், அதை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை உங்களுக்கு உண்டு. உணவகங்கள் பொதுவாக தங்களின் FSSAI லைசன்ஸ் எண்னை மெனு, வலைத்தளம் அல்லது ரசீதில் காட்ட வேண்டும். அதைப் பார்த்து, அந்த உணவகம் விதிகளைக் பின்பற்றுகிறதா என்றும், தொடர்ந்து உரிமத்தை புதுப்பித்து வருகிறார்களா என்றும் FSSAI இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

ஒரு நல்ல உணவகத்தில், சுத்தமான சமையலறை, தரமான பொருட்கள், சுகாதாரமான சூழல் போன்றவற்றை எதிர்பார்ப்பது உங்கள் அடிப்படை உரிமை.
உணவு பாதுகாப்பு சட்டங்கள் படி, நீங்கள் உணவு உண்டு உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம். உணவகத்தில் உணவுப் பொருளில் எதாவது அயல்பொருள் தென்பட்டாலும், அல்லது சுவையில் ஏதோ தவறாக இருந்தாலும், அதை உடனடியாக மேலாளரிடம் தெரிவியுங்கள்.
தீர்வு தர முனையாவிட்டால், நுகர்வோர் குறைதீர் வழிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். மேலும், உணவக ரசீதியை எப்போதும் பாதுகாத்து வையுங்கள், பின்னர் புகார் அளிக்க வேண்டிய நேரத்தில் அது வலுவான ஆதாரமாகும். உங்கள் ஒரு நடவடிக்கையால் அந்த உணவகம் பிழையை திருத்தி, மற்ற வாடிக்கையாளர்களுக்கும் மேலும் சிறப்பு செய்வதற்கு வழிவகுக்கும்.

அதேபோல், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். கட்டாய சேவை கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது.
சேவை கட்டணம் விதிப்பது ஒரு நியாயமற்ற வணிக நடைமுறை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எந்தவொரு உணவுப் பொருளையும் அதன் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (Maximum Retail Price - MRP) அதிக விலைக்கு விற்கக் கூடாது.
மேலும், உணவகங்களில் குடிநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சாதாரண குடிநீரைக் கேட்டபோது, கட்டாயமாக குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய முயன்றால், அதை நிராகரிக்கும் முழு உரிமை உங்களுக்கு உண்டு. அதேநேரத்தில் இலவச குடிநீரும், குடிக்க தகுந்த சிறந்த தரத்தில் இருக்கவேண்டியது அவசியம்.
அதேபோல், உணவில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதைப் புகாரளிக்க நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது, அது ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாகும், அது நம் மற்றும் நம் சக மனிதர்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
உணவு குறித்த புகார்களுக்கு, மேல்கண்ட நுகர்வோர் தளங்களோடு சேர்த்து, உணவு தரத்தை மேம்படுத்த FSSAI-கும் புகார் தெரிவிக்கலாம்.
FSSAI
தொலைபேசி: 1800-11-2100 (Toll-free)
வேலை நேரம்: காலை 10 மணி – மாலை 6 மணி வரை
தள முகவரி: https://fssai.gov.in
மின்னஞ்சல்: complaint@fssai.gov.in
FSSAI Mobile App: Food Safety Connect – Play Store / App Store-இல் கிடைக்கும்

பயணத்திற்கான உங்கள் உரிமைகள்
இந்திய ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் சில முக்கிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ரயில் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமானால், அதனால் பயணிக்க விரும்பாத பயணிகள் முழுப் பயணக் கட்டணத்தை திரும்ப பெற முடியும்.
இத்தகைய பணத்தீர்ப்பை பெற, e-டிக்கெட் இருந்தால் ரயில் புறப்படும் முன் “TDR” என்ற இணையவழி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்; கவுனட்டரில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு, புறப்படும் முன் ரத்து செய்ய வேண்டும். ரயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், அதற்கான முழு கட்டணத்தையும் ரயில்வே தானாகவே திருப்பிச் செலுத்தும்.
பயணத்தின் போது ஏதேனும் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டால், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை (RPF) உதவி எண் 182-ஐ அழைக்கலாம். பொதுவான ரயில்த் தகவல்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


