Travel Contest : புண்ணிய பூமியில் என்னை நெகிழ வைத்த மனித முகங்கள்! - மறக்க முடியாத தனுஷ்கோடி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்று 2006-ம் ஆண்டு ஜுலை, 16-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கடும் கோடை முடிந்து மழை பருவத்திற்கு முன்பான காலம்.
என்றென்றும் நினைவில் நிற்கும் பயண அனுபவங்களை தரப்போகும் நாள் அது என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. விடுமுறை தினங்களில் புதிய திசைகளில், புதிய அனுபவங்களைத்தேடி தனியே பயணம் செல்லும் இயல்புடையவன் நான்.
அன்று நான் தேர்ந்தெடுத்த புதிய திசைப்பயணம் இந்திய, தமிழக தென்கிழக்கு முனையில் உள்ள இராமேஸ்வரம் நோக்கி. இது இந்துக்களின் புண்ணிய பூமி என்கிற சிறப்புடன், பலவகைகளில் உலகின் கவனம்பெற்ற ஒரு தீவுப்பகுதி. எவ்வித பயணத்திட்டமிடலோ, முன் அனுபவங்களோயின்றி, அதிகாலையிலேயே விடுதியிலிருந்து கிளம்பினேன்.
அப்போது, நான் ஒரு ஆராய்ச்சி மாணவன், விருதுநகருக்கருகே உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
இராமேஸ்வரம் நோக்கிய பயணத்தில் எனது பிரதான நோக்கம், இராமேஸ்வரத்தீவின் கடற்கரை சார்ந்த பகுதிகளை நேரில் காண்பது... மற்றொன்று இந்தியாவின் தென்கிழக்கு முனையிலுள்ள தனுஷ்கோடியின் எல்லைவரை செல்வது. மதுரை சென்று அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் திட்டத்தில், காலை 6 மணியளவில் விருதுநகரை அடைந்தேன்.
ஆனால், எனக்கு வியப்பூட்டும் வகையில், எதிரே இராமேஸ்வரம் செல்லும் பேருந்து வந்து எனக்காகவே காத்திருப்பது போல் நின்றது. தாமதிக்காமல் பேருந்தில் ஏறிய நான், மிகக்குறைவான பயணிகளே இருந்த பேருந்தில் விருப்பத்திற்கேற்ற சன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டு கைப்பையில் வைத்திருந்த பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை உண்பதற்காக பிரித்தேன்.

பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஓட்டுனரின் விருப்பப்படிதான் தொலைதூரப் பேருந்தில் பாடல்கள் ஒலிக்கும் என்கிற விதிக்கேற்ப, அப்பேருந்தில் ஓட்டுநரின் விருப்பம் எனது விருப்பத்தை ஒத்திருந்தது.
80 -களின் மத்தியில் வெளிவந்த இளையராஜாவின் இசைராஜாங்க பாடல் வரிசை மனதை மயக்கும் ஒலிஅளவில் ஒலித்தது. மற்றொன்று, நடத்துநர் என்னிடம் அது மதுரை வழியாக செல்லாது எனவும், அருப்புக்கோட்டை, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம் செல்லும் எனவும் கூறியது. இந்த ஊர்கள் அனைத்தும் நான் அதுவரை பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டது என்பதால் புதிய அனுபவங்களுக்காக காத்திருந்தேன்.
கடந்து சென்ற நிலப்பகுதிகள் எனக்கு அறிமுகமற்றது என்பதால், கூடுதல் ஆர்வம் பொங்க சன்னலோர காட்சிகளை கண்கொட்டாமல் கண்டு களித்தேன். ஒரு சில மணிநேர பயணத்திலேயே நான் முற்றிலும் புதிய அனுபவங்களைப்பெறுவதை உணர்ந்தேன். சக பயணிகளில் பெரும்பாலானோரின் பழக்க வழக்கங்கள், வட்டார மொழி வழக்கு ஆகியவை, சற்று வித்தியாசமாக, எனக்கு முன்னர் அறிமுகமில்லாத, வகையில் இருந்தது.

அதுவரை குறைவான மக்களை சுமந்து வந்த பேருந்தில் முந்தியடித்துக்கொண்டு ஏற மக்கள் கூட்டம் கமுதி பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. பேருந்தில் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே ஏக அமளி.
சில வாய்ச்சண்டைகள் வேறு. சண்டையிட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் வார்த்தை பிரயோகங்கள் அவ்வளவு ஜனசந்தடியிலும் மிகத்துள்ளியமாக கேட்டது. ஆனால், அவர்களை காண வழியின்றி கூட்டம் மறைத்தது. என் அருகில் வாரப்படாத நரைமுடிதலையுடைய ஒரு மத்திய வயதுக்காரமனிதர் போட்டிகளுக்கிடையே இருக்கையை வென்றெடுத்து அமர்ந்தார்.
வெளிறிய பழுப்பு நிறத்தில் வெள்ளை வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்து ”விருமாண்டி” கமலின் ஸ்டைலில் மீசை வளர்த்திருந்தார் அவர்.
பின்னர் நடந்த மெல்லிய உரையாடலில் அவர் பெயர் பெரியமூக்கன் எனவும் உத்திரகோசமங்கை செல்வதாகவும் அறிந்தேன். கமுதி பேருந்து நிலையத்திலேயே, சிரமப்பட்டு வெளியேறி, அங்கிருந்த ஒரு சிறிய உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்தேன்.

மீண்டும் பயணம் தொடங்கி மேலும் தொடர, தொடர, அதுவரை ஆர்வமாக கவனித்த மனித முகங்கள், நகை ஆபரண வகைகள், தமிழ் வார்த்தை பிரயோகங்கள் ஆகியவை சற்று பரிச்சயமாகி வேறு பல புதிய தேடல்களை மனம் நாடத்துவங்கியது.
வழியில் ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் ஊர்களுக்கு தக்கவாறு, சீரான இடைவெளியில் ஐந்து, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேருந்து நின்று சென்றது.
நண்பகல் நெருங்கும் வேளையில் இராமநாதபுரம் கடந்தது, பிறகு சிறிது நேரத்தில், சாலையோரத்தில் பெரிய கட்டடங்களற்ற, சிறிய வீடுகள் மட்டும் தென்படும் நிலப்பரப்பில் பேருந்து சென்றபோது வீசிய வெப்பங்கலந்த ஈரக்காற்று அது கடற்கரைப்பகுதி என்பதை உணரச்செய்தது.
அதுவரை, நீண்ட இடைவெளிகளுக்கிடையேயுள்ள ஊர்களில் நின்று சென்ற பேருந்து தற்போது, டவுன் பஸ்ஸை போன்று குறுகிய இடைவெளிகளிலேயே பயணிகளை இறக்கியும், ஏற்றியும் சென்றது.
தற்போது ஏறும் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என எவருமே பேருந்து பயணத்திற்கான எந்த ஒரு ஒப்பனைகளுமின்றி, குறைந்த பட்சம் தலைகூட வாராமல் கையில் பைகள், முடைந்த கூடைகள், பெரிய, பெரிய வட்ட வடிவிலான அலுமினிய பாத்திரங்கள், உணவு தூக்கு வாளிகள் என பலவகை பொருட்களுடன் ஏறி இறங்கினர்.
இவர்கள் அனைவருமே, அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு நிறுத்தங்களுக்கிடையில் இறங்கும் நோக்கிலேயே பேருந்தில் பயணித்தனர். மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலான நடுவழிப்பயணிகள் இறங்கினர். சிறிது தொலைவில், நான் வாழ்நாளில் நிச்சயம் காணவேண்டிய பகுதிகளில் ஒன்றாக எண்ணியிருந்த பாம்பன் கடல் பாலம் வந்தது. சற்றேறக்குறைய, இரண்டு கிலோமீட்டர் தூரம், பேருந்தை கடலுக்குள் தள்ளிவிடுமோ என அஞ்சும் அளவிற்கான, கடல் காற்று பேருந்தினுள் வீசியது. ஒருவழியாக, நண்பகல் பனிரெண்டு மணியளவில் நான் இராமேஸ்வரம் அடைந்தேன்.

இறங்கியவுடன் இராமநாதசுவாமி திருக்கோயிலை அடைந்தேன். மிகப்பிரமாண்டமாக பக்தர்களை வரவேற்றது வெண்ணிற கோவில் கோபுரம். கூட்டம் அதிகமிருந்ததாலும், சுவாமி தரிசனத்திற்கு நீண்ட நேரமாகும் என்பதாலும், காலத்தின் அருமை கருதி, தாமதிக்காமல் ஒவ்வொரு பிரகாரத்தையும் சம்பிரதாயமாக கடந்தேன்.
கோவிலினுள், அழகிய கற்சிலை வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் தாங்கி நின்ற சுற்று மண்டபங்களை இரசித்தபடியே வெளியேறி அங்கிருந்து நேராக கடற்கரையை அடைந்தேன்.
செல்லும் வழியில் இருபுறங்களிலும், சிறியதும், பெரியதுமாக உணவகங்கள், தேனீர் கடைகள், தங்கும் விடுதிகள், மடங்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள் விற்கும் கடைகள் என பலவிதமான கட்டடங்கள். அவற்றில் பெரும்பாலானவை, காவி, மஞ்சள் மற்றும் செங்கல் நிற வர்ணம்பூசப்பட்டதாகவே இருந்தன.
புண்ணிய தலத்தை தரிசிக்கும் நோக்கில் இந்திய தேசத்தின் பலபகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கும், கடலுக்குமிடையே நடந்தவண்ணம் இருந்தனர். வழிநெடுக ஒரு வாடை, எனது நாசியை விடாமல் சுற்றி வந்தது.
அது பாதி காய்ந்த மீன்வற்றல், உலரும் கடல்நீர், கால்நடைகளின் சாணம் என அனைத்தையும் ஒத்திருந்தது. திருநீரும், ருத்ராட்சமும் அணிந்த காவி உடுத்திய மனிதர்கள் நிறையபேரை எதிர்கொள்ள நேர்ந்தது.

சிலர், யாசகம் கேட்டார்கள். சாலைகளில் அநாயசமாக உலாவந்த பசுக்களுக்கு, ஆண், பெண் என பக்தர்கள் பலரும் உணவூட்டினார்கள். பக்தர்கள் குளுமியிருந்த கடற்கரையில், சில இடங்களில் தர்ப்பணம் கொடுத்தல், மந்திரமுழக்கங்கள் என மதச்சடங்குகள் நடந்தது. கலங்கிய நிலையிலிருந்த கடலின் சில அடிதூர வெளியில், ஏராளமான மனிதர்கள் தங்களின் வாழ்நாள் பாவம் கழிக்கும் நோக்கில் நீருக்குள் அமிழ்ந்து எழுந்தவண்ணமிருந்தனர். ஒரு புறம், பாவம் போக்கியபின்னர் கழற்றி வீசப்பட்ட துணிகள் மலைபோல் குவிந்திருந்தன. இந்த சூழ்நிலையில் மேலும் கண்டு களிக்க ஏதுமின்றி, அடுத்த இலக்கு நோக்கி விரைந்தேன்.
எனது அடுத்த இலக்கு, தனுஷ்கோடி
எவ்வாறு செல்வது? ஒரு பழச்சாறு கடையில், எலுமிச்சை சாறு ஒரு கோப்பை வாங்கி அருந்திக்கொண்டே அந்த கடைக்காரரிடம் விசாரித்தேன். அது ஏறத்தாழ பதினைந்து கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டும் எனவும், இங்கேயே 3-ம் நம்பர் டவுன் பஸ் வரும் எனவும் அவர் கூறியதை நம்பி காத்திருந்தேன்.
சில நிமிட இடைவெளியில் எதிர்பார்த்திருந்த அந்த டவுன் பேருந்து அதிக பயணிகளின்றி வந்து நின்றது. பேருந்தில் ஏறியவுடன், வெயில் விழாத பக்கவாட்டில், சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். ஆஹா, மனதில் என்னவொரு திருப்தி, திட்டமிடாத பயணம் திட்டமிட்டதைப்போல செல்கிறது. நகரப்பேருந்தின் நகர்வில், ஓரிரு கிலோமீட்டர் தொலைவிலேயே நகரப்பகுதி முற்றிலும் விடைபெற்றது.

வழியில், இடையிடையே சிலபகுதிகளில் ஓட்டுவீடுகள், கூரை வேயப்பட்ட வீடுகள் சொற்பமாக இருந்தன, அதைத்தாண்டி வெற்று கடற்கரை, ஆள் அரவமின்றி தென்பட்டது.
பின் மீண்டும் சில வீடுகள், அதைத்தாண்டி தூய்மையான கடற்பரப்பு என தொடர்ந்தது. செல்லும் வழியில் ஒருசில சுற்றுலா கார்கள் கடந்து சென்றன. இவ்வாறு சென்ற பேருந்து முக்கால் மணிநேர பயணத்தில் தனுஷ்கோடியை அடைந்தது. ஆர்வம் பொங்க இறங்கினேன்.
சின்ன, சின்ன கட்டடங்கள், சில கார்கள், ஒன்றிரண்டு வேன்கள் மற்றும், பேருந்தில் வந்து இறங்கிய சில மனிதர்களையும் தவிர அங்கு வேறு எதுவும் தென்படவில்லை.
ஆனால், பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே சுற்றிலும் காம்பௌண்ட் சுவர் கொண்ட ஒரு சிறிய பள்ளிக்கூடம் போன்றதொரு கட்டடம். அந்த கட்டிடத்தை சுற்றி மட்டும் அசாதாரணமான ஒரு கூட்டம் இருந்தது.
அந்த வளாகம் முழுமைக்கும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் நிரம்பியிருந்தனர். ஆண்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர், மற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் தரைகளில் பெரும்பாலும் குத்துகாலிட்டு அமர்ந்திருந்தனர்.
அவர்களை ஏதோ ஒருவிதத்தில் அந்நியமாக உணர்ந்தேன். அந்த மனித கூட்டத்தின் ஓரங்களில், அதிகாரிகள் என உணரும் வகையில், நன்கு உடையணிந்த ஆண்கள் மற்றும் பெண்கள், அங்கு சோர்வாக இருந்த மக்களிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தனர். என்ன கூறுகிறார்கள் என நான் இருந்த தொலைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த கூட்டத்தில் நின்றிருந்த மிடுக்காக உடையணிந்திருந்த சில ஆண்களும், பெண்களும், கூட்டம், கூட்டமாக சோர்வாக வரும் அந்த மக்களை, ஏதோ ஒரு திருமண வைபவத்திற்கு வரவேற்பது போல், ”வாருங்கள், வாருங்கள்” என வரவேற்று, அவர்கள் உள்நுழைந்த சில நிமிடங்களில் அவர்களுக்கு குடிக்க குடிநீர், அருந்த தேனீர், உண்ண பிஸ்கட் என வழங்கினார்கள்.
அந்த இடத்தில், குடிதண்ணீரோ, தேனீரோ, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களோ கிடைக்க எந்த ஒரு வழியும் இல்லை. அது இந்திய தேசத்தின் கடைக்கோடி எல்லை.
இருபுறங்களிலும் கடல் மட்டுமே உள்ளது. அந்த இடத்திலும், பசித்த மக்களை மிகுந்த அக்கரையுடன் உபசரிக்கிறார்களே, யார் இந்த உபசரிக்கும் மனிதர்கள்? அது சரி, யார் இந்த பசித்த மனிதர்கள்? அங்கு நின்றிருந்த ஒரு வெள்ளை நிற வாகனம் உபசரிப்பாளர்கள் அனைவரும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியது.
உன்னதமான மானுட சேவையை மனதார பாராட்டிக்கொண்டே அருகில் செல்ல முற்பட்டேன், ஆனால் வளாக நுழைவாயிலிலேயே திடகாத்திரமான காவலர்களால் நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டேன்.
என்ன நடக்கிறது என அறிந்துகொள்ள முடியாமல் குழம்பி நின்ற வேளையில், சிறிது தொலைவிலிருந்த ஒரு பழைய 407 வேனை ஒட்டி நின்ற ஒன்றிரண்டு ஆண்கள், ”அரிச்சல்முனை”, ”அரிச்சல்முனை” என கூவி அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்று இந்த வண்டி எங்கு செல்கிறது, அதற்கான கட்டணம் என்ன என்பதையெல்லாம் விசாரித்தேன்.
அரிச்சல்முனை என்பது ஒன்பது கிலோமீட்டர் தூர சாலைகளற்ற, கடற்கரைப்பயணத்தில் உள்ள இந்திய நிலப்பரப்பின் எல்லைப்பகுதி எனவும், அதைத்தாண்டி கடல் தான் உள்ளது எனவும் கூறினார்.
போகும் வழியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை சீற்றத்தால் அழிந்துபோன தனுஷ்கோடி நகரத்தின் சிதிலமடைந்த ஒரு தேவாலயம், ஒரு அனுமார் கோவில், மற்றும் சில கட்டிடங்களைக்காணலாம் எனவும் கூறினார். கட்டணம் ஒருவருக்கு ஐம்பது ரூபாய் எனவும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


