காரசார மாங்காய் பச்சடி செய்யும் முறை

இயற்கை நமக்கு பலவிதமான காய்கறிகளை தரும். அந்த காய்கறிகளில் பல அதற்குரிய காலத்தில் மட்டுமே தான் கிடைக்கும். அந்த வகையில் கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு கனியாக திகழ்வதுதான் மாங்கனி. மாங்கனி வருவதற்கு முன்பாகவே மாங்காய் வந்துவிடும். மாங்காய் பலரது விருப்ப காயாக திகழ்கிறது. மாங்காயை பல விதங்களில் சமையலில் பயன்படுத்தலாம். அந்த வகையில் காரசாரமாக மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – ஒன்று
கடுகு – 3 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 9 பல்
காய்ந்த மிளகாய் – 3
கருவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு அதை கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மீதம் இருக்கக்கூடிய கடுகு சீரகம் இரண்டையும் போட்டு பொரிய விட வேண்டும். பூண்டின் தோலை நீக்கிவிட்டு ஒன்றிரண்டாக இடித்து அதையும் எண்ணெயில் போட்டு விடுங்கள். பிறகு காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி அதில் போட்டுவிட்டு, கருவேப்பிலையை போட்டு விட வேண்டும். பிறகு பூண்டு நன்றாக சிவந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு அதில் பெருங்காயத்தூளை போட்டு ஒரு முறை கரண்டியால் கிண்டி அப்படியே விட்டுவிடுங்கள். இது நன்றாக ஆரட்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் துருவிய மாங்காயை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றையும் சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த கடுகு வெந்தய பொடி இருக்கும் அல்லவா? அதிலிருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு நாம் எண்ணெயில் பூண்டை போட்டு வேக வைத்திருக்கிறோம் அல்லவா அது நன்றாக ஆறி இருக்கும் அதை எடுத்து அப்படியே மாங்காயில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்தால் சுவையான காரசாரமான மாங்காய் பச்சடி தயாராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எக் மசாலா ரைஸ்

ஒருமுறை இந்த பச்சடியை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் தயிர் சாதம், தோசை, சப்பாத்தி போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாகவும் அருமையாகவும் இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

The post காரசார மாங்காய் பச்சடி செய்யும் முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.