டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?
டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போது, அவரை மறித்த மர்ம கும்பல் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. கத்திக்குத்து காயத்தோடு குனால் கஷ்டப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் ஏற்கனவே அதிகப்படியான ரத்தம் வெளியேறி இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் குனால் இறந்து போனார்.
பெண் தாதா ஜிக்ரா
இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சாஹில், ரேஹன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இக்கொலையில் உள்ளூர் பெண் தாதா ஜிக்ராவிற்கு தொடர்பு இருப்பதாகவும், கொலை நடந்தபோது சம்பவ இடத்தில் ஜிப்ராவும் இருந்ததாக கொலை செய்யப்பட்ட வாலிபரின் தாயார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
பழிவாங்கும் நோக்கில் இக்கொலையை செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இக்கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சாஹிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இத்தாக்குதலில் சாஹில் சாகவில்லை. படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
ஆனால் இக்கொலையில் குனாலுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது செய்தி வெளியானது. உண்மையில் இத்தாக்குதலில் குனாலுக்கு தொடர்பு கிடையாது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருந்தும் பழிவாங்கும் விதமாக தங்களது மகனை கொலை செய்து விட்டதாக குனால் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யார் இந்த ஜிக்ரா?
குனால் கொலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள ஜிக்ரா இதற்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்து வந்த சோயா என்ற பெண்ணிடம் அடியாளாக வேலை செய்து வந்தார். சோயா கைது செய்யப்படும் வரை அவருடன் தான் ஜிக்ரா இருந்தார். அப்படி இருந்தபோது தனக்கென ஒரு கூட்டத்தை ஜிக்ரா உருவாக்கிக்கொண்டார்.
சோயா கைதுக்கு பிறகு ஜிக்ரா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எப்போதும் ஜிக்ரா தெருக்களில் வரும் போது கையில் துப்பாக்கி வைத்திருப்பார் என்றும், 10 முதல் 12 பேர் அவருடன் துணைக்கு வருவார்கள் என்று அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு பயத்தில் அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீட்டையே காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இது குறித்து குனால் தாயார் பர்வீன் கூறுகையில், ஜிக்ரா தெருக்களில் எப்போதும் துப்பாக்கியுடன் தான் சுற்றுவார். ஜிக்ராவும், அவரது சகோதரர்களும் இதற்கு முன்பு எங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜிக்ராவின் உறவினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் எங்களது மகன் குனாலுக்கு தொடர்பு கிடையாது. அப்படி இருந்தும் அவனை கொலை செய்துவிட்டனர்என்றார்.
இதனிடையே, இந்துக்கள் காலி செய்வதாகவும், உதவும்படியும் ஷீலம்பூர் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வி.எச்.பி. இந்து அமைப்பு அங்கு போராட்டம் நடத்தியது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ் படை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜிக்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் ஜிக்ரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போது ஜிக்ரா கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


