SRM: மாணவர்களைப் பேச்சாளர்கள் ஆக்கிய தமிழ் பேராயம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராயம் சார்பில், இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக சொல் தமிழா சொல் 2025 என்ற தலைப்பில் மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி பல பேச்சாளர்களை உருவாக்கியுள்ளது. 

 எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர்.பாரிவேந்தர் தமிழ் பேராயம் என்ற அமைப்பை 2011-இல் உருவாக்கி தமிழை வளர்க்கும் விதமாக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். குறிப்பாக துறைதோறும் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தல், அரிய நூல்களையும் புதிய ஆய்வு நூல்களையும் வெளியிடல், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தல், தமிழ்ப் பண்பாடு மற்றும் சமயம் தொடர்பான பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளை நடத்துதல், உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை ஆற்றுதல் என பல பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அதன்படி தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை 9 மண்டலங்களாகப் பிரித்து சொல் தமிழா சொல் 2025 என்ற பெயரில் பிரம்மாண்ட பேச்சு போட்டியை நடத்தியது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு, 40 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதால், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். 9 மண்டலங்களி இருந்து தமிழ்நாடு முழுவதும் 2000 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் இருந்து 72 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாபெரும் இறுதிச்சுற்றுகள் இரண்டு நாட்கள் நடந்த நிலையில், 8 போட்டியாளர்கள் தேர்வாகினர்.

இறுதி போட்டியில் நடுவராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் தலைப்பு தொகுப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

முதல் பரிசை திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவி அ.ரா.லாவண்யா பெற்றார். அவருக்கு பரிசு தொகையாக ரூ.5லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3லட்சம் பரிசு தொகையை திருநெல்வேலி சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரியை சேர்ந்த மாணவர் மா.கா.இராஜவேலுவுக்கும், மூன்றாவதாக ரூ.2லட்சம் பரிசு தொகையை கன்னியாகுமரி, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழக முதுகலை விரிவாக்க மையம் மாணவி மோ.பா.ஆதிராவுக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர், சிறப்பு விருந்தினர்களும் வழங்கி சிறப்பித்தனர்.

பாரிவேந்தரும், தமிழ் பேராயமும்

தொடர்ந்து மாணவர் மத்தியில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், தமிழை வளர்க்க வேண்டும் தமிழை பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ் பேராயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. தமிழ் பேராயம் சார்பில் தமிழ் முனைவோர்கள் உலகம் முழுவதும் இருப்பவர்களுக்கு 8 தலைப்புகளில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது. எனது தம்பிகள் சொல் தமிழா சொல் இறுதி நிகழ்ச்சியில் சேர்ந்து பார்க்க வேண்டும் என மூன்று மாதங்கள் முயற்சியினை மேற்கொண்டோம்.

இந்த சொல் தமிழா சொல் நிகழ்ச்சி 2026ம் ஆண்டு தொடரும் என பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அண்ணாமலை குறிப்புகளுடன் , புள்ளிவிவரத்துடன் பேச கூடியவர். சீமான் நம் மண்ணில் பிறந்தால் 10000 புத்தகங்கள் படிக்க வேண்டும், 10000 பிரயானங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவார். நான் 10000 மைல்களுக்கு மேலும் பிரயானங்களை மேற்கொண்டுள்ளேன். நான் பத்தாயிரம் புத்தகங்கள் படித்ததில்லை. ஆனால் நான் பத்தாயிரம் புத்தகங்கள் படித்ததாக உணருகிறேன். அதற்கு காரணம் அண்ணாமலையின் புள்ளிவிவரம் மற்றும் சீமான் வரலாறு , புரட்சியாளர் , அவர்கள் எப்படி நாட்டை உருவாக்கினார்கள் என்று கூறுவார். அதைக் கேட்கும் பொழுது நாம் பத்தாயிரம் புத்தகங்கள் படித்தது போல எனக்கு உணர்வு வருகிறது. தமிழ்நாடு என்பது இந்தியாவை ஆள வேண்டும் என நாம் எதிர்பார்த்து ஏங்கி காத்துக் கொண்டுள்ளோம். அந்த வகையில் தமிழன் எப்போது வருவான் இந்தியாவை ஆள்வான் என நாம் அனைவரும் ஏங்கிக் கொண்டுள்ள நிலையில், பெயரளவில் சொல்லவில்லை மனதளவில் உணர்ந்து கூறுகிறேன் அண்ணாமலை அவர்கள் நாட்டின் பிரதமர் ஆவதற்கு தகுதி கொண்டவர் என பேசினார்.

அண்ணாமலை பேச்சு

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஐயா பாரிவேந்தர் ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக 400 கோடி ரூபாய் தன்னுடைய தொகுதி மக்களுக்கு செலவு செய்துள்ளார். அண்ணன் சீமான் ஒரு அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட ஒரு போர் தலைவனாக தான் நான் பார்க்கிறேன். தன்னுடைய கொள்கைக்கு எந்த நிலையாக இருந்தாலும் போராடுவேன் என நிற்பவர் சீமான். எனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை நான் தேசியத்தில் தமிழை பார்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தமிழ் பேராயம் சாதாரண ஒரு நிகழ்வு இல்லை. தமிழ் பல்கலைகழங்களே செய்யாத வேலையை எஸ் ஆர் எம் பல்கலைகழகம் செய்து வருகிறது. அற்புதமான இரண்டு நபர்கள் இந்த இறுதி போட்டியில் நடுவராக இருப்பது மிக கடினமான வேலை. அது ஒரு சுமை. சொல் தமிழா சொல் இந்த நாட்டில் நடத்தபட வேண்டிய மிக தேவையான ஒரு நிகழ்வு.

ஆங்கிலத்தை வறுத்தெடுத்த சீமான்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், பாரியை படித்துள்ளேம் பார்த்ததில்லை ஆனால் தற்போது ஐயா பாரிவேந்தர் உருவில் பார்க்கிறோம். என் மூலமாகவே படிக்க வசதி இல்லாத பல்வேறு நபர்களை இந்த பல்கலைகழகத்தில் பலர் படிக்கிறார்கள் படித்து வருகிறார்கள். அப்படி பட்ட பெருமகன் சொல் தமிழா சொல் என்ற போட்டியினை தொடங்கி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார் . பேச்சு என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.

இயேசு பிறந்த பிறகு உருவான மொழி ஆங்கிலம். ஏசு பிறக்கும் போது தொகுக்கப்பட்ட நூல் தொல்காப்பியம் , உலகின் முதல் மொழி தமிழ் இருப்பது இந்தியாவிற்கு பெருமை , உலகின் பல்வேறு மக்கள் தமிழை கற்றுக்கொள்ள பேரார்வம் கொண்டுள்ளனர் , பெத்த தாயை பட்டினி போட்டு ஆயிரம் அன்னதானம் போட்டாலும் சரி தாய் மொழியை கற்றுகொள்ளாமல் எத்தனை மொழியினை கற்றுக்கொண்டால் நீ அறிவில்லாதவன் , எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தாய்மொழியை மறந்த இனம் சுடுகாட்டில் இறந்த பினம், தாய்மொழியை பாதுகாத்த இனங்கள் கடுகளவில் இருந்தாலும் மலையலவில் பெருகும். என்ன, ஆங்கிலத்தில் நீ சிறப்பு வச்சிருக்கே? என் மொழியை எடுத்திட்டா உனக்கு சொல் இல்லை. 500க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள், உயிர்ச்சொற்கள் நான் போட்டது உனக்கு. என் உடன் ஒரு S போட்டால் sudden.

என்னுடைய பேச்சு அதன் உடன் ஒரு S சேர்த்தால் speech. என்னுடைய பஞ்சு, ஒரு S போட்டா ஸ்பான்ஜூ. என்னுடைய கொல், உன் kill. என்னுடைய கட்டுமரம் உன்னுடைய கட்டுமறான். என்னுடைய நாவாய், உன்னுடைய navy. என்னுடைய கலாசாரம், உன்னுடைய culture. உனக்குன்னு என்ன இருக்குது?நான் போட்ட பிச்சையில் உருவாகிட்டு, நான் தான் பெரிய இன்டலிஜென்ட்டுன்னு. தம்பி.. உலகத்தில் எல்லோரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். தமிழர்கள் நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

உங்களுக்கான தலைவர்களை பொழுதுபோக்கு தளத்தில் தேடாதீர்கள். போராட்ட களத்தில் தேடுங்கள். இனி வரும் தலைமுறையினர் அடுத்த முறை வாக்காளர்களாக மட்டுமில்லாமல் நல்ல தலைவர்கள் தேடுங்கள் என மாணவர்களை தனது ஆற்றல் மிகுந்த பேச்சால் உற்சாகப்படுத்தினார்.

SRM தமிழ்பேராயம் நடத்திய சொல் தமிழா சொல் போன்ற நிகழ்வு எங்களை போன்ற மாணவர்களை பேச்சாளர்களை மாற்றும் சிறந்த பயிற்சி கூடம் என வெற்றியாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.