ஏர்போர்ட்டில் ராஜமரியாதை, பதை பதைக்க வைத்த ஒரு காட்சி! - மனதில் நின்ற குவைத் பயணம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

குவைத்தில் TEF (Tamilnadu Engineers Forum) என்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் குவைத்தில் வசித்துவரும் தமிழ் பேசும் பொறியாளர்கள் மற்றும் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற பிற மாநில பொறியாளர்களும்  உறுப்பினர்களாக உள்ளனர். TEF தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக என்னைக் குவைத்திற்கு அழைத்தது.‌ இந்தப் பயண அனுபவம்தான் இந்தக் கட்டுரை.

வெளி நாட்டுப் பயணத்திற்கு தேவை பாஸ்போர்ட், மற்றும் விசா.  

குவைத்தின் வித்தியாசமான விசா நடைமுறை :

விசா என்பது நாம் செல்ல விரும்பும் நாடு மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்த ஒரு பக்கத் தாள். வெளிநாடு செல்ல இந்த இரண்டுடன் பயணச் சீட்டும் அவசியம். இவைகளை விமானநிலையத்தில் காட்டினால் பயணம் அனுமதிக்கப்படும்.

பெரும்பாலான நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் உள்ளன. நாம் விண்ணப்பித்தால் இவை தங்கள் நாட்டு நுழைவு அனுமதியை (விசாவை) நம் பாஸ்போர்ட்டில் பதிவிட்டுத் தருவார்கள். அந்தப் பாஸ்போர்ட்டைக் காட்டி நாம் பிற நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

ஆனால் குவைத் அப்படி அல்ல. குவைத்திற்கு நம்மை அழைப்பவர்கள்தான் நமக்கு விசா எடுத்து அனுப்ப வேண்டும்.

அந்த விசாவின் மென்நகலை நமக்கு மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ அனுப்பி வைக்கின்றனர். விசாவின் அசலை குவைத் விமானநிலையத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்திற்கு (immigration office) அனுப்பி விடுகின்றனர்.‌

நமக்கு வந்த விசாவை வண்ணப் படமாகப் பதிவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.‌

குவைத்தில் இறங்கியதும் விசாவின் வண்ண நகலை அந்த நாட்டுக் குடியுரிமை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் உள்ள அசல் விசாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தால் குவைத் மண்ணில் கால் வைக்கலாம். இல்லை என்றால் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விடுவார்கள்.

பெண் குழந்தைகளுக்கான நடைமுறை : 

நான் என் மகளையும் குவைத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டேன். ஆனால் முடியவில்லை. காரணம் 22 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் தங்கள் அம்மாவுடனே குவைத் செல்ல முடியும்.

என் மகளுக்கு வயது 16 தான் ஆகிறது. மேலும் என் மனைவி என்னுடன் குவைத் வரமுடியாததால் என் மகளைக் குவைத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டு என அனைத்தும் இருந்தும் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காரணம் கேட்டேன். “காவல் துறை ஆய்வறிக்கை வேண்டும்” என்றார்கள்.

“மூன்று நாட்கள் பயணத்திற்குக் காவல் துறை ஆய்வறிக்கை தேவை இல்லை” என்றேன் நான். என் பாஸ்போர்ட் மற்றும் விசாவைச் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். அடுத்தடுத்து எனப் பத்துபேர்கள் சூழ்ந்து என் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திருப்பித் திருப்பிப் பார்த்தனர். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர்.

“சரி…

நீங்க ஒரு முடிவுக்கு வாங்க” என நான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

குவைத்தில் வேலை பார்க்கப் போகும் போதுதான் காவல் துறை ஆய்வறிக்கை அவசியம் வேண்டும். “நான் குவைத்திலேயே தங்கிவிடுவேன்” என விமானநிலைய அதிகாரிகள் பயந்து விட்டார்கள் போலும்.

சில நிமிடங்கள் கழித்து என் உடைமைகளை எல்லாம் வாங்கிக் கொண்டனர். ஏதோ சோதனை செய்யப் போகிறார்கள் என நினைத்தேன்.

மாறாக “சார், வாங்க” எனக் கூறி குடியுரிமை சோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

விமான பயணச்சீட்டை என்னிடம் கொடுத்தார்கள். குடியுரிமை சோதனை சாவடியில்,

“எதற்காகக் குவைத் செல்கிறீர்கள்?”

“எங்கு வேலை பார்க்கின்றீர்கள்?”

“எப்போது திரும்புவீர்கள்?” என்ற வழக்கமான கேள்விகளைக் கேட்டு

“உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்” என கூறி அனுப்பி வைத்தனர்.


அடுத்த சில நிமிடங்கள் மஸ்கட் விமான நுழைவாயில் பகுதியில் காத்திருந்தேன். பின்னர் பயணச் சீட்டை சரிபார்த்து விமானத்திற்குள் ஏற்றிக் கொண்டனர்.

விமானம் திருவனந்தபுரத்திலிருந்து காலை 4.55க்கு புறப்பட்டது. மஸ்கட்டிற்கு காலை 8.30 மணிக்குச் சென்றது. திருவனந்தபுரத்திற்கும் மஸ்கட்டிற்கும் இடையே 2500 கிலோமீட்டராகும். மும்பையிலிருந்து மேற்கு நோக்கி ஒரு கோடு போட்டால் அது மஸ்கட்டைத் தொடும்.

இரண்டே நிமிடத்தில் முடிந்த நடைமுறைகள்! 


இந்த விமானம் இந்திய நேரப்படி காலை 9.40 மணிக்கு மஸ்கட்டிலிருந்து குவைத்திற்கு பயணிக்கத் தொடங்கியது. இது நம் நேரப்படி சுமார் மதியம் 12.00க்கு குவைத் சென்றடைந்தது. குவைத்தில் அப்போது காலை 9.30 மணி. குவைத்திலிருந்து ஒரு நேர் கோட்டை கிழக்கு நோக்கி வரைந்தால் அது பாகிஸ்தான் நகரான கராச்சி மற்றும் இந்திய எல்லையில் உள்ள வாகா என்ற இடத்தை இணைக்கும்.

விமான வாசலில் சுதாகர் சிவசுப்பிரமணியம் என்ற பெயர் தாங்கிய பலகையுடன் ஒரு மிடுக்கான வாலிபன் நின்று கொண்டிருந்தான். இந்த வரவேற்பு நான் எதிர் பார்க்காதது. காரணம் விமான நிலையத்திற்கு வெளியேதான் இப்படி வரவேற்பது வழக்கம்.

“திருவனந்தபுரத்தில் எவ்வளவு சோதனைகள் செய்தார்களோ அதே மாதிரி அடுத்த நாட்டிற்குள் நுழையும் போதும் சோதனைகள் அதிகமாக இருக்கும்” என எதிர்பார்த்தேன்.


நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.


அவர்களை உரத்த குரலில் குவைத்திய விமானநிலைய அதிகாரிகள்  வழிநடத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால். “என்னிடம் யாரும் என் பெயர் என்ன?” என்று கூட கேட்கவில்லை.


அந்த வாலிபன் என் பாஸ்போர்ட்டை கொண்டு போய் குவைத் நாட்டு நுழைவு முத்திரை பெற்றுவிட்டு என் பெட்டியை எடுத்துக் கொண்டுவந்தான். மொத்தத்தில் இரண்டே நிமிடத்தில் என்னை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துவந்துவிட்டான் !


“எனக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?” எனக் கேட்டேன்.


"நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளர்" என அந்த இளைஞன் புன்முறுவலிட்டான். மனம் குதூகலித்தது.‌

மேலும் குவைத்தில் உள்ள தமிழ் பொறியாளர் குழுமத்தின் மேல் அந்த நாடு வைத்திருந்த நம்பிக்கையும் இதற்கு காரணம்  எனப் புரிந்து கொண்டேன். பெருமையாகவே இருந்தது.

நான் பல நாட்டிற்கு பயணித்து அனுபவப்பட்டவன். இப்படியொரு ராஜ மரியாதை வேறு எந்த நாட்டிலும் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை !

விமான நிலையத்திற்கு வெளியே என்ஜினியர் அசோக் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர் திருச்சிக்கு அருகே உள்ள லால்குடியைப் சேர்ந்தவர். அவருடன் தென்காசியைச் சேர்ந்த என்ஜினியர் பாலசுப்ரமணியமும் வந்திருந்தார்.

மஸ்கட் மற்றும் குவைத்தின் விமானநிலையங்களுக்கும் நம் ஊர் விமானநிலையத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. .

அமெரிக்காவை ஞாபகப்படுத்திய குவைத்: 

குவைத்தின் பெரிய சாலையின் தரம் சிறப்பாக இருந்தது. ஆனால் சிறிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை பார்க்க முடிந்தது.

குவைத் சில இடங்களில் அமெரிக்க நகரமான லாஸ் வோகாஸ் மாதிரியும்; குடியிருப்பு பகுதிகள் அமெரிக்க டெக்சாஸ் மாநிலம் போலவும் தெரிந்தது. சாலை ஓரங்களில் நிழலுக்காக ஆங்காங்கே நம் சீமக்கருவேல மரத்தைத் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவதைப் பார்க்க வியப்பாக இருந்தது.

நாம் பணத்தை ரூபாய் என அழைக்கிறோம். குவைத்தில் இதனை தினார் என அழைக்கின்றனர். நூறு பைசா சேர்ந்தால் ஒரு ரூபாய்.

ஆனால் குவைத் தினார் 1000 பில்ஸ் கொண்டது. .

“ஏன் அப்படி என எண்ணத் தோன்றுகிறதா? “ காரணம் குவைத்தின் பணம் அதிக மதிப்பு மிக்கது. நம் ஊர் பணத்தில் 280 ரூபாய் கொடுத்தால் பதிலுக்கு ஒரு குவைத் தினார் கிடைக்கும் !

“அதனால் அவர்கள் நூறு பில்ஸ் ஒரு தினார் என வைத்துக் கொண்டு பல கோடிக்கணக்கான பண பரிமாற்றம் செய்யும் போது அவர்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறதாம்.

உதாரணமாக 100 பில்ஸ் ஒரு தினார் என வைத்திருந்தால் ஒரு பில்ஸ் 2.8 ரூபாயாகயிருக்கும். . இதனால் நம் ஊர் 50 பைசா மற்றும் ஒரு ரூபாயை எப்படி கணக்கிடுவது?

அதனால்தான் 1000 பில்ஸ் ஒரு தினார் என வைத்துள்ளனர். இதன்படி ஒரு பில்ஸ் 28 பைசா மதிப்பைப் பெறுகிறது ! இதனால் ஆயிரக்கணக்கான அந்நிய பண பரிமாற்றத்தின் போது குவைத் தேவையில்லாத வருவாய் இழப்பில் இருந்து தப்பித்துக் கொள்கிறது. உள்நாட்டு சில்லரை வர்த்தகத்திற்கும் இந்த ஏற்பாடு உதவியாக உள்ளது.

குவைத்தில் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் 26 ரூபாய்தான். சாதாரணப் பெட்ரோலின் விலை இன்னும் குறைவு !

இதனால் இங்கு மாருதி ஆல்டோ மாதிரியான சிறிய ரக கார்களைப் பார்க்க முடியவில்லை. நான் சாலையில் உருவத்தில் பெரிய அளவிலான கார்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஒரு பைக் கூட தென்படவில்லை! 

மேலும் ஆச்சரியம் என்னவென்றால் குவைத்தில் நான் ஒரு பைக்கைக்கூட பார்க்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் இரண்டு : ஒன்று இங்கு கடுமையாக வெயில் அடிக்கிறது. வெப்பம் அதிகம். அடுத்து இங்கு பெட்ரோல் விலை மலிவோ மலிவு. இதுதான் இரண்டாவது காரணமாகும். இதனால்தான் இங்கு இருசக்கர வாகனங்களை பார்க்க முடியவில்லை.

மேலும் விநோதம் என்னவென்றால் பெட்ரோல் விலையை விட குடிதண்ணீர் விலை சற்று உயர்ந்து லிட்டருக்கு 30 ரூபாயாக இருந்தது !!

நமது ஊரில் தண்ணீருக்காக நிறையக் கிணறுகள் உள்ளது போல் அங்கே நிறைய எண்ணைக் கிணறுகள் உள்ளன. இவை சில இடங்களில் தரையின் மேற் பரப்பிற்கு அருகிலேயே கிடைக்கிறன. சில இடங்களில் சுமார் 35,000 அடிவரை துளையிட்டு எடுக்கின்றனர்.

உலகத்தரத்தில் அருங்காட்சியகம்

உலகத்தரத்தில் இங்கு ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை குவைத் ஆயில் நிறுவனம் நடத்துகிறது. இங்கு வேலை பார்க்கும் குவைத் பெண்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டுப் பெண்களைப் போலவே உடையணிந்திருந்தனர்.

இந்த அருங்காட்சியகத்தில் பூமி மற்றும் பல்வேறு உயிரினங்கள் தோன்றிய காலத்தையும் அழகாகக் சித்தரித்து இருந்தனர்.

மேலும் கச்சா எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் பூமிக்கு அடியில் உருவாகிய விதத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது… சிக்கலான இந்த அறிவியல் உண்மைகளை இங்குச் சிறந்த நுட்பங்களால் எளிதில் புரியும் படி விளக்கிய விதங்கள் என்னை வியக்க வைத்தது.

பூமிக்கடியில் கச்சா‌ எண்ணை இருக்கும் இடத்தைக் கண்டறியும் நுட்பம்; கண்டறிந்த எண்ணெய்யை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் கருவிகள்; இவ்வாறு கிடைத்த கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாகத் தேக்கி வைக்கும் அமைப்புக்கள்; பின்னர் இந்தக் கச்சா எண்ணெயைக் கப்பலில் ஏற்றும் விதங்கள், கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் முறைகள்; அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என அனைத்தையும் எளிமையாக விளக்கியது இந்த அருங்காட்சியகம்.

கடைசி மாடியில் நிறையத் தொலைநோக்கிகளை நிலை நிறுத்தி இருந்தனர். இவை பார்க்க அழகாக இருந்தது.

இதன் மூலம் தூரத்தில் ஆங்காங்கே இருக்கும் கச்சா எண்ணெய் எடுக்கும் இடங்களையும்; அதனைத் தேக்கி வைக்கும் கலன்களையும்; சுத்திகரிக்கும் தொழிற் சாலைகளையும் பார்க்க முடிந்தது.

கச்சா எண்ணெயை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். முதல் தரக் கச்சா எண்ணெயின் நிறமும் அடர்த்தியும் எனக்குத் தேங்காய் எண்ணெயையே நினைவுபடுத்தியது. இதனிலிலிருந்து நிறைய பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம். அதனால் இதன் விலை அதிகம்.

இரண்டாம் தரக் கச்சா எண்ணெய் அடர்த்தி மற்றும் நிறம் சற்று அதிகமாக இருந்தது. பார்க்க நம் விளக்கெண்ணெய் மாதிரியே  இருந்தது. இதன் விலை சற்று குறைவாம்.

மூன்றாம் தர எண்ணெய்யின் அடர்த்தி இன்னும் அதிகரித்து பிசு பிசு என இருந்தது. இது அடர் கருப்பு நிற தார் மாதிரி கையில் ஒட்டிக்கொள்ளும் பக்குவத்தில் இருந்தது. இதிலிருந்து குறைவான அளவே பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது. அதனால் இதன் விலை மலிவு.

இறுதியாகப் பத்து நிமிட படம் ஒன்றைத் திரையிட்டுக் காட்டினார்கள். அந்தப் படம் ஈராக் குவைத் போரைத் தெளிவாகப் புரியவைத்தது.

அடுத்து ஒரு வினாடிக்கு எவ்வளவு கச்சா எண்ணெய் குவைத்தில் கிடைக்கிறது என்பதனை ஒரு பெரிய கண்ணாடி கலனில் ஒரு 10 லட்சம் லிட்டர் எண்ணெயை ஊற்றிக் காட்டினார்கள்.

இதனைப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. .

“இந்த அருங்காட்சியகத்தை அமைக்க எப்படியும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பார்கள்” என நம்புகிறேன்.‌ அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது.‌

நெஞ்சத்தை பதைபதைக்க வைத்த குவைத் வரலாற்று நிகழ்வு

குவைத் மாதிரி வளம் மிகுந்த நாட்டிற்கு ஆபத்து வருவது இயற்கைதான். அண்டைய நாடான, ஈரா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.