தீ விபத்தில் தப்பிய மகன்; திருப்பதியில் முடிக்காணிக்கை செலுத்திய பவன் கல்யாண் மனைவி!

சமீபத்தில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் விடுமுறைக்காக சிங்கப்பூர் சென்று இருந்தார். அங்கு பள்ளி ஒன்றில் நடந்த விடுமுறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் பவன் கல்யான் மகன் மார்க் சங்கர் சிக்கிக்கொண்டார். இதில் மார்க் சங்கரின் கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டது. இத்தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும், இதிலிருந்து தனது மகனை காப்பாற்றிக்கொடுத்தால் திருப்பதி பத்மாவதி அம்மனுக்கு மொட்டையடித்து கொள்வதாக பவன் கல்யாண் மனைவி அன்னா கோனிடேலா வேண்டிக்கொண்டார். ஏப்ரல் 8ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக மார்க் சங்கர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதையடுத்து அன்னா கோனிடேலா பத்மாவதி அம்மனுக்கு வேண்டிக்கொண்டபடி கோயிலுக்கு சென்று மொட்டையடித்துக்கொண்டார். அன்னா உண்மையில் இந்து கிடையாது. ரஷ்யாவை சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார்.

அவர் திருப்பதி பத்மாவதி கோயிலுக்கு சென்று மொட்டையடிக்கப்போவதாக சொன்னவுடன் அங்குள்ள காயத்ரி சதனில் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் திருப்பதி ஏழுமலையானை தனது கடவுளாக ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அங்கு மொட்டையடித்து முடியை பத்மாவதி தாயாருக்கு காணிக்கையாக்கினர். அன்னா மொட்டையடித்துக்கொண்ட பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. துணை முதல்வரின் மனைவி மகனுக்காக தனது முடியை காணிக்கையாக்கி இருப்பதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.