சென்னை: திருமண ஆசை; தாலி; மெட்டி - 63 வயது சித்த வைத்தியரை ஏமாற்றிய 57 வயது பெண்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (63). இவர். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கடந்த 10.4.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் சித்த வைத்தியம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். என்னுடைய மனைவி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துச் சென்றுவிட்டார். என்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். எனக்கு பேச்சுதுணைக்கு ஆள் இல்லாத காரணத்தினால் நான் கடந்த 25.12.2024-ல் எனக்கு ஆதரவற்ற விதவை மணமகள் தேவை என செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்தேன். அதன்பிறகு சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர் என்னை போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எனக்கு யாரும் இல்லை, நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதன்பின்பு கடந்த ஒரு மாதமாக நானும் கீதாவும் போனில் பேசி வந்தோம். அதன்பிறகு இருவரும் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

Wedding - திருமணம்

இதையடுத்து கடந்த 4.4.2025ம் தேதி என்னுடைய ஊரிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தேன். அப்போது கீதா என்னை தி.நகருக்கு வரச் சொன்னார். நானும் கீதாவும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து தி.நகரில் உள்ள துணிக்கடைக்குச் சென்று புடவை எடுத்தோம். அதன்பிறகு நகைக்கடைக்கு சென்று 2 கிராமில் தாலி, அரை கிராமில் மூக்குத்தி, இரண்டு ஜோடி மெட்டி ஆகியவற்றை வாங்கி கீதா கையில் கொடுத்தேன். அப்போது கீதா என்னிடம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தன்னுடைய உறவினர் ஒருவர் வேலை செய்கிறார். அவரைப் பார்த்து விட்டு செல்லலாம் எனக் கூறினார். அதனால் நானும் கீதாவும் அங்குச் சென்றோம். மருத்துவமனையில் என்னை அமர வைத்துவிட்டு பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கீதா சென்றார். அதன்பிறகு அவர் வரவில்லை. நான் கீதாவுக்கு பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடியும் அவரைக் காணவில்லை. அதன்பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்ததோடு, நான் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்ற கீதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதையடுத்து சித்த வைத்தியர் ராமநாதனை ஏமாற்றியதாக அரும்பாக்கம் 1-வது தெருவைச் சேர்ந்த கீதாவை (57) போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க தாலி, மூக்குத்தி, ஒரு ஜோடி மெட்டி, புடவை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கீதா, ஆதரவற்ற பலரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு கீதாவை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.