Doctor Vikatan: 8 வயதிலேயே பூப்பெய்திய மகள்.. மருத்துவப் பரிசோதனை அவசியமா?

Doctor Vikatan: என்னுடைய பெண் குழந்தை 8 வயதிலேயே பூப்பெய்திவிட்டாள்.  இவ்வளவு சீக்கிரம் பூப்பெய்துவது இயல்பானதா... அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமா... 8 வயதில் பூப்பெய்தியதால் அவளுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மாலா ராஜ்

இப்போதெல்லாம் 8-9 வயதுகளிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவது சகஜமாகிக் கொண்டு வருகிறது. அவர்களது உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை என இதற்கு பல காரணங்கள்  இருக்கலாம். இது குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. இதற்கு அப்படியே எதிர்துருவமாக 15- 16 வயதாகியும் பூப்பெய்தாமல் இருக்கும் பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம்.

இந்த இரண்டு நிலைகளிலுமே குழந்தைகளை மகளிர் மருத்துவரிடம்  கூட்டிச் சென்று ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.  8 வயது என்பது மிக இள வயது என்பதால் அந்தக் குழந்தைகளுக்கு மாதவிலக்கை உடல்ரீதியாக, மனரீதியாக அணுகத் தெரியாது. அதற்கும் மருத்துவர் ஆலோசனைகள் சொல்வார். தவிர, அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் உடல்ரீதியான பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறதா என்பதையும் மருத்துவர் பரிசோதித்துச் சொல்வார்.

இந்தக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் வேறு எப்படிப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை மருத்துவர் அறிவுறுத்துவார்.

அதேபோல 15-16 வயதாகியும் பூப்பெய்தவில்லை என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை மருத்துவரிடம் கூட்டிவரும் அம்மாக்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கு 15 வயதாகியும் கர்ப்பப்பையே இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் அந்தப் பெண் குழந்தைகள்  பூப்பெய்துவதற்கு வாய்ப்பே இருக்காது. இந்தக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் வேறு எப்படிப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை மருத்துவர் அறிவுறுத்துவார். கூடவே, அவர்களது மனப்பதற்றத்தைக் குறைக்கவும் வழிகள் சொல்வார்.

பூப்பெய்திய முதல் ஒன்றிரண்டு வருடங்களுக்கு பீரியட்ஸ் சுழற்சி முறைதவறியே வரும். மூளையின் முதிர்ச்சியின்மையே அதற்கு காரணம். அது குறித்தும் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். பீரியட்ஸ் சுழற்சி எப்படியிருந்தாலும், பெண் குழந்தைகளை வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.