பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13850 கோடி கடன் மோசடி: பெல்ஜியத்தில் சிக்கிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோரைக் கைது செய்ய சி.பி.ஐ தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. நீரவ் மோடி லண்டனில் இருக்கிறார். ஆனால் மெஹுல் சோக்ஸி இப்போது பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்று அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரை கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. 2018ம் ஆண்டு இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிறகுதான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.13850 கோடி கடன் மோசடி வெளியில் தெரிய வந்தது. வெளிநாட்டில் இருந்து வைரம் இறக்குமதி செய்வதாக கூறி பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளை நம்பவைத்து போலி ஆர்டர்களை காண்பித்து கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
நீரவ் மோடி தொடர்ந்து லண்டனில் வசிக்கும் நிலையில் மெஹுல் சோக்ஸி மட்டும் ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஆண்டிகுவா தீவில் வசித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் டொனிமிகா தீவிற்கு சென்றார். அங்கிருந்து தனது மனைவியோடு பெல்ஜியத்திற்கு சென்று அங்கு குடியுரிமை வாங்கி வசித்து வந்தார். அவர் பெல்ஜியத்தில் இருப்பதாக அந்நாடு கடந்த மாதம் தான் உறுதிபடுத்தியது. தற்போது பெல்ஜியம் போலீஸார் மெஹுல் சோக்ஸியை கைது செய்துள்ளது. இதனை சி.பி.ஐ உறுதிபடுத்தி இருக்கிறது. மும்பை போலீஸார் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில் அவரை கைது செய்யும்படி மத்திய அரசு பெல்ஜியத்திடம் கேட்டுக்கொண்டது. மருத்துவ காரணங்களை காட்டி மெஹுல் சோக்ஸி ஜாமீன் கேட்கும் அபாயம் இருக்கிறது. எனவே அவரை உடனே இந்தியாவிற்கு நாடு கடத்திக்கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய விசாரணை ஏஜென்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. நீரவ் மோடி மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் இருக்கின்றனர். அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


