”எந்த கவிதையையும் உடனே மெட்டமைத்துப் பாடக்கூடியவர்” - கரிசல் கிருஷ்ணசாமி குறித்து ச.தமிழ்ச்செல்வன்
விருதுநகர் மாவட்டம், நரிக்குளம் என்னும் கிராமத்தில் 1959-ம் ஆண்டு பிறந்தவர் கிருஷ்ணசாமி.
இதிகாசக்கதைகளைத் தனது தந்தை பாராயணம் செய்ததைப் பார்த்தும், மூத்த சகோதரியும், அண்ணன் மனைவியும் பாடிய வில்லுப்பாட்டுக் கதைகளைக் கேட்டும் இசையின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்த கிருஷ்ணசாமி, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தொடர்பில் தொழிற்சங்கத்திலும் இடதுசாரி அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
1981-ம் ஆண்டு முதன்முதலாகக் கவிஞர் பரிணாமனின் “எட்டையாபுரத்தானுக்கிணையான புலவனை…” என்கிற கவிதைக்கு மெட்டமைத்துப் பாடியதிலிருந்து கிருஷ்ணசாமியின் இசைப்பயணம் தொடங்கியது.
தனது சக ஊழியரான சந்திரசேகரனுடன் இணைந்து பாட, தவில் கலைஞர் சண்முகநாதன் இசையுடன் கரிசல்குயில் என்கிற இசைக்குழுவை உருவாக்கிப் பாடல்களைப் பாடி வந்தார்.
கே.ஏ.குணசேகரன் நடத்திய பயிற்சி முகாமில் பங்கெடுத்ததற்குப் பிறகு பெரும்வீச்சுடன் களமிறங்கி தமுஎகச மற்றும் இடதுசாரி அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
மதுரை சந்திரன், திருவுடையான், கரிசல் கருணாநிதி, மேட்டூர் வசந்தி, உடுமலை துரையரசன், புதுச்சேரி அன்புமணி உள்ளிட்ட பாடகர்கள் பலரும் உருவாவதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
அவரால் அற்புதமாகப் பாடல் எழுதவும் முடியும் என்பதற்கு ‘நீலவானில் உலாவரும் நிலவே...’ என்கிற ஒரு பாடலே போதுமான சான்று.
பாண்டிச்செல்வி, மாகலஷ்மி உள்ளிட்ட எட்டு பெண் கவிஞர்களின் பாடல் தொகுப்பு வெளியாவதற்கு முன்முயற்சியெடுத்த கிருஷ்ணசாமி, பிறகு அவற்றை மெட்டமைத்துப் பாடி பரவலாக்குவதில் கவனம் கொண்டிருந்தார்.
கிருஷ்ணசாமி குறித்து எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனிடம் பேசினோம், “கிருஷ்ணசாமி, எந்த கவிதையை அவரிடம் வாசித்துக் காட்டினாலும் உடனே மெட்டமைத்துப் பாடக்கூடியவர். கலை இரவுகளில் கரிசல்குயிலின் பாடல்களுக்கென்று தனியே நேயர்களுண்டு.
அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் அவரே மெட்டமைத்தவை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிலும் பல கருத்துரிமை பாடல்களைப் பாடினார்.

வாழ்வின் இறுதி மூச்சு வரை பாடிக்கொண்டிருந்தவர். தென் மாவட்டங்களின் பெட்டிக்கடைகள், தேநீர்க் கடைகள், அரசியல் நிகழ்ச்சிகளில் அவரது பாடல்கள் இன்றும் ஒலித்து வருகின்றன.
இவருடைய பாடல்களில் , “மண்ணெண்னெய் விளக்கினில் பாட்டிசைத்து..” என்ற பாடலும், “ஊரடங்கும் சாமத்துல…” என்ற பாடலும் மிகப் பிரபலமானவை.
அவரது அனைத்து பாடல்களும் ஒலிப்பேழைகளிலும் குறுவட்டுகளிலும் இணையதளங்களிலும் எல்லாவற்றுக்கும் மேலாக நம் இதயங்களிலும் நிறைந்துள்ளன. ஆனால் அவர்தான் இன்று நம்மோடில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


