அடி உதை, 15 மணிநேர வேலை: மியான்மரில் சைபர் கிரைமில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்கள் - சிக்கிய நடிகர்

மும்பையில் இருந்து அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு மியான்மர் மற்றும் தாய்லாந்து சென்ற 20 இளைஞர்கள் கடந்த மாதம் அங்கிருந்து தப்பித்து வந்தனர். இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களை வெளிநாட்டு கும்பல் சைபர் குற்றத்தில் ஈடுபடவைத்துள்ளது. இந்தியர்களை மிரட்டி டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் சம்பாதிப்பது, ஷேர் வர்த்தக மோசடி போன்ற காரியங்களில் ஈடுபட வைத்தது.

அவர்களிடமிருந்து தப்பித்து வந்தவர்கள் மும்பை போலீஸில் புகார் செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மணீஷ் என்பவர் இது போன்ற காரியத்தில் ஈடுபடுவதில் மூளையாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மும்பை வடாலாவை சேர்ந்த மணீஷ் டிவி நடிகர் ஆவார். பல வெப் சீரியஸ்களில் நடித்திருக்கிறார். இக்கும்பல் மும்பையில் இருந்து 60 பேரை மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு சட்டவிரோதமாக அனுப்பி இருந்தது தெரிய வந்துள்ளது.

மணீஷ்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல சம்பளம் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்து சென்று இருந்தனர். இது தொடர்பாக மணீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மணீஷ்தான் வேலை தேடுபவர்களை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பேசி தாய்லாந்தில் வேலை என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸார் கூறுகையில், மும்பையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை மணீஷும் அவனது ஆட்களும் படகு மூலம் மியான்மருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைத்து சைபர் குற்றத்தில் ஈடுபடும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் அழைத்து செல்லப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மோசடி கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். மியான்மருக்குள் சென்றவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்தல், டிஜிட்டல் கைது போன்ற வேலைகளில் ஈடுபடும்படி கூறி மிரட்டியுள்ளனர். அதில் ஈடுபட மறுத்தவர்களை அடித்து உதைத்து ஈடுபட வைத்துள்ளனர். அதோடு உடல் உறுப்புகளை எடுத்துக்கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர்.

மணீஷுக்கு உதவிய ஆதித்ய ரவிசந்திரன், ரூப்நாராயண் குப்தா, ஜான்சி ராணி, தலாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அழைத்துசெல்லப்பட்டு இணைய குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட 60 பேர் மியான்மரில் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணையோடு மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

தாய்லாந்து, மியான்மர் எல்லைப்பகுதியில் அடைத்து வைத்து தினமும் 15 மணி நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கொத்தடிமைகளைப்போன்று அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை மகாராஷ்டிரா சைபர் பிரிவு போலீஸார் மத்திய அரசின் உதவியோடு மீட்டதாகவும், அவர்கள் இப்போது மும்பை திரும்பி இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் ஹேம்ராஜ் தெரிவித்தார்.

மீட்கப்பட்டவர்கள்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,வேலை கேட்டு வருபவர்களிடம் அமெரிக்க டாலரில் சம்பளம், விமானம், விசா இலவசம் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை முதலில் தாய்லாந்தித்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து மியான்மர் எல்லைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு படகில் ஆற்றை கடந்து மியான்மருக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களிடம் கட்டாய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு இணைய குற்றத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வேலை செய்த 60 பேர் ஒரே இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஆவர்என்றார்.

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு மும்பையில் ரெஸ்டாரன்டில் மேலாளர் வேலையை விட்டு விட்டு சென்ற சதீஷ் என்பவர் இது குறித்து கூறுகையில், ``தாய்லாந்து சென்றவுடன் எங்களை 7 மணி நேர பயணத்திற்கு பிறகு மியான்மர் அழைத்து சென்றனர். அங்கு எங்களது பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டனர். அங்கு சென்றபிறகுதான் எங்களை 5 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.