ஊட்டி போறீங்களா... இதை மிஸ் பண்ணிடாதீங்க! - சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் ஸ்பாட்!

பொதுவாக கோடை கால விடுமுறை என்றாலே ஊட்டி தான் பெரும்பாலானோரின் சாய்ஸ். அங்கு இருக்கும் மலைகள், தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலை இதற்காகவே ஊட்டியை நோக்கி படையெடுப்பார்கள்.

ஊட்டியை போன்றே ஓர் அழகிய மலைவாசஸ்தலம் இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தகிரி, ஊட்டிக்கு நிகரான அழகிய மலைவாசஸ்தல நகரமாக உள்ளது. ஏன் இந்த இடத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கோத்தகிரி, அமைதியான இயற்கை காட்சிகளுடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. ஊட்டி அனைவரும் செல்லும் இடம். ஆனால் அதிக கூட்டம் இல்லாத ஒரு அழகிய இடமாக இந்த கோத்தகிரி உள்ளது.

கோத்தகிரியை தனித்துவமாக்குவதே அதன் காலநிலைதான். ஆண்டு முழுவதும் அதன் அழகான காலநிலை பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலநிலை இங்கு செல்ல சிறந்த நேரம் ஆகும். அப்போதுதான் அதிகமான வெப்பமும் இருக்காது, அதிகமான குளிரும் இருக்காது. கோத்தகிரியில் வேறு எந்தெந்த இடங்களை எல்லாம் பார்க்கலாம்.

லாங்வுட் ஷோலா

கோத்தகிரியில் மலையேற்றம் செய்ய விரும்பும் அனைவரும் ஒரு சூப்பர் இடமாக லாங்வுட் ஷோலா உள்ளது. இது நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது. வனப்பகுதியாக இருக்கும் இந்த இடம் பார்வையாளர்களை பல்வேறு தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளைக் காண அனுமதிக்கிறது.

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி இல்லை என்றால் எப்படி! கோத்தகிரியில் உள்ள மிகவும் பிரமிக்க வைக்கும் சுற்றுலா தலங்களில் ஒன்று கேத்தரின் நீர்வீழ்ச்சி. நீலகிரி மலையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி இது தான், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இது இரண்டு அருவிகளைக் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியாகும்.

ரங்கசாமி சிகரம்

ரங்கசாமி சிகரத்திற்கு சென்றால், நகர வாழ்க்கையை மறந்து, இயற்கை அழகில் மயங்கிவிடுவீர்கள். இந்த அழகிய சிகரம் ஒரு புனிதத் தலமாக அறியப்படுகிறது. அழகுடன் சேர்த்து ஆன்மீகத்தையும் அனுபவித்துவிட்டு வரலாம்.

கோடநாடு காட்சி முனை

கோடநாடு காட்சி முனையம் கோத்தகிரியின் மிகவும் பிரபலமான தலமாகும். இங்கிருந்து நீங்கள் அற்புதமான நீலகிரி மலைகளை ரசிக்கலாம். கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனையத்திற்கு நடைபயணம் மேற்கொள்வதன் மூலம் முழு மலைவாசஸ்தலத்தின் காட்சியைப் பெறலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.