UP : 12வது படிக்கும் மாணவனுடன் காதல் - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண், மதம் மாறி திருமணம்
உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 8 அன்று அலிகர் என்ற இடத்தில் மகள் திருமணம் செய்ய வேண்டிய வாலிபரைக் கூட்டிக்கொண்டு பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அலிகரில் 10 நாட்களில் மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மருமகனுடன் மாமியார் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் 3.5 லட்சம் பணம் மற்றும் நகைகள் என மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் அப்பெண் எடுத்துச்சென்றுவிட்டார்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாள் அதே உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 12வது வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. சப்னம் என்ற அப்பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதலில் மீரட் நகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு தபீக் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் 2021ம் ஆண்டு நடந்த விபத்தில் தபீக் மாற்று திறனாளி ஆனார். இரண்டு திருமணங்கள் மூலம் சப்னத்திற்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவதாக 12வது வகுப்பு படிக்கும் 18 வயது மாணவனுடன் சப்னத்திற்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து இஸ்லாமிய பெண்ணான சப்னம், இந்து மதத்திற்கு மாறி தனது பெயரை சிவானி என்று மாற்றிக்கொண்டு 18 வயது மாணவனை திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில் சப்னம் இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட மாணவனின் தந்தை தனது மகனின் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். தம்பதி மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். இருவரும் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


