Bazooka Review: `நான்தான்டா லியோ தாஸ் - மம்மூட்டியின் இந்த கேமிங் த்ரில்லர் எப்படியிருக்கிறது?

கேரளாவின் கொச்சி பகுதியில் க்ரிமினல்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் அப்பகுதியின் க்ரிமினல் ரேட் எகிறுகிறது. இதனை தடுத்த தேர்ந்த பெஞ்சமின் (மம்மூட்டி) & கோ களத்தில் பரபரப்பாக இறங்கி ஸ்டார் காவல் அதிகாரிகளாக மின்னுகிறார்கள்.

அந்த நேரத்தில் பல பகுதிகளில் `பஸுக்கா என்ற கேம் வடிவில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். இதனைத் தடுக்க தடவியல் நிபுணராக இருந்து ஓய்வு பெற்று மும்பையில் வசித்து வரும் ஜான் சீசரை (மம்மூட்டி) கேரளாவுக்கு அழைத்து வருகிறார் பெஞ்சமின்.

Bazooka Review

கொள்ளையர்கள் கேம் வடிவில் ஒவ்வொரு கொள்ளைகளை நிகழ்த்துகிறார்கள். அதனைத் தடுக்க சில டீகோடிங் விஷயங்களைக் கையாண்டு அவர்களைப் பிடிக்க பின்தொடர்கிறார்கள். சேட்டைகளைச் செய்யும் கொள்ளையர்களை சேட்டன்கள் பிடித்தார்களா? அவர்கள் குறிக்கோள் என்ன ? என்பதுதான் இந்த கேம் த்ரில்லர் திரைப்படமான `பஸுக்கா படத்தின் கதை.

மாஸ் காட்டும் நாயக பிம்பம் கொண்ட காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் வேட்டையாடி விளையாடியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். காவல் அதிகாரியைப் பிடிப்பதற்கு துப்பறியும் வேலைகளிலும் இருக்கும் டென்ஷன்களையும் க்ளவராக அவர்களைப் பிடித்து தூள் நடை போடும் இடத்திலும் பக்குவமாய் நடித்து நல்ல ஆட்டம் காட்டியிருக்கிறார்.

ஜான் சீசர் கதாபாத்திரத்தில் போனி டெயில் வைத்து சாதுவான தோற்றத்தில் களமிறங்கியிருக்கும் மம்மூட்டி, தொடக்கத்தில் தனது வசீகரிக்கும் எக்ஸ்பிரஷன்களால் பார்வையாளர்களை கவர்கிறார். அதே சமயம் `நான்தான்டா லியோ தாஸ் என ஈவில் ஸ்மைல் காட்டும் இடங்களிலும் வில்லனாக பயமுறுத்துகிறார் மம்மூக்கா.

Bazooka Review
Bazooka Review

முக்கியமாக, அத்தனை ஆக்‌ஷன் காட்சிகளிலும் 73 வயது மிக்க இளைஞன் துள்ளல் காட்டியிருக்கிறார். கேம்மராக ஜான் சீசருடன் பயணிக்கும் சன்னி வர்கீஸ் கதாபாத்திரத்தில் துறு துறுவென நடித்திருக்கிறார் ஹக்கீம் ஷா. படம் முழுக்க கதைக்கு பாலம் அமைக்கும் இவருடைய கதாபாத்திரத்திற்கு நடிப்பை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்கவில்லை.

இவரைத் தாண்டி `வரட்டா மாமே டூர் என டெம்ப்ளேட் டிவிஸ்ட் வில்லன்களாக வந்துப் போகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பாபு ஆண்டனியும் ஷைன் டாம் சாக்கோவும் கேமியோ கேமில் பங்கேற்று வெற்று ஆட்டத்தை ஆடி கடந்துச் செல்கிறார்கள்.

த்ரில்லர் பயணத்துக்கு தேவைப்படுகிற பரபர உணர்வை கச்சிதமாக காட்டிய சயீத் அபாஸின் பின்னணி இசை வில்லனிசத்தைக் காட்டுவதற்கும் பக்கபலமாக இருந்திருக்கிறது. அதிலும் ஶ்ரீநாத் பாஸி பாடியிருக்கும் `லோடிங் பஸுக்கா பாடல் வைப் உண்டாக்கி முணுமுணுக்கவும் தாளம் போடவும் வைக்கிறது.

இந்த கேமிங் உலகத்தில் உலா வரும் கதாபாத்திரங்களின் ஆட்டத்தை பின்தொடர்ந்து பக்காவாக படம்பிடித்து புது உலகத்தை கண்முன் நிறுத்துகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ராஜ்.

Bazooka Review
Bazooka Review

படத்தொகுப்புகளில் சில புதுமையான நுட்பங்களைக் கையாண்டிருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் நிசத் யூசப், ப்ரவீன் பிரபாகரன். ஆனால், உலகம் சுற்றும் வாலிபனாக தேவையில்லாத சண்டைக் காட்சிகளுக்கும், உரையாடல் காட்சிகளுக்கும் நீளுவதையெல்லாம் கட் செய்ய தவறியிருக்கிறார்கள்.

இசையிலும், நடிகரின் தொனியிலும் இருந்த மாஸ் தன்மை சண்டைக்காட்சிகளில் இல்லாதது பெரிதாக ஏதும் அனுபவத்தைக் கொடுக்காமல் கடந்துசெல்கிறது.

மம்மூட்டியின் ஃபேன் பாயாக இருந்து மாஸ் கூட்டி சம்பவம் செய்யும் காட்சிகளை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டீனோ டெனிஸ். அதற்கென புதிய கேமிங் த்ரில்லர் என்ற களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் திரைக்கதையின் பெரும்பான்மையான பகுதியில் புதுமை என்ற வார்த்தையைக்கூட காட்டாமல் நகர்த்தியிருக்கிறார்.

முதல் பாதியில் அதே கூலிங் க்ளாஸ் போட்ட போலீஸ், பிரச்னைகளை திருத்தும் ஹீரோ என வழக்கமான விஷயங்களை கையிலெடுத்து `லோ - ஸ்கோர் வாங்குகிறார் திரைக்கதையாசிரியர்.

த்ரில்லர் காட்டுவதற்கு புதிருக்குள் புதிர் சேர்த்து இறுக்கமாக பிண்ண வேண்டிய காட்சிகளிலெல்லாம் பெரியளவிலான மெனக்கெடல் ஏதுமின்றி `இந்தா வச்சுக்கோ என வெறுமையாகவே எழுதியிருக்கிறார்.

Bazooka Review
Bazooka Review

கேமிங் கனெக்ட் வைத்து முடிச்சுகளை அவிழ்க்கும் இடத்திலும் சப்பைக் கட்டும் காட்சிகளை அடுக்கி கதை சொல்கிறார்.

இந்த டிரீட்மென்ட்டையே இரண்டாம் பாதியின் தொடக்கம் வரை பின்பற்றி சோர்ந்து `உச் கொட்ட வைக்கிறார்கள். திடீரென `நீங்கள் கேட்டது இதோ உங்களுக்காக! என பீஸ்ட் மோடை ஆன் செய்து டிவிஸ்ட் கொடுத்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.

டிவிஸ்ட் இதுதானா என முடிவுக்கு வரும்நேரத்தில் `இக்கட சூடு கண்ணா? என அதற்குள் ஒரு டிவிஸ்ட்டை வைத்து சப்ரைஸ் காட்டுகிறார்கள்.

இந்த கேமிங் த்ரில்லரில் சூப்பர் மேரியோ, டெம்பிள் ரன் (பழைய விஷயங்கள்) போன்ற பழமையான கேம்களை தவிர்த்து தற்போதைய கிராபிக்ஸ் மெருகேறிய புதுமையான கேம்களை (புதிய த்ரில்லர் எலமென்ட்ஸ்) சேர்த்திருந்தால் `பஸுக்காவை போர் அடிக்காமல் மீண்டும் மீண்டும் ஆடியிருக்கலாம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.