Big Bear Valley: `எத்தனை புயல்கள் வந்தாலும்..!’ - உலகில் பலரும் நேசிக்கிற ஒரு `கழுகு ஜோடி’யின் கதை!
நீங்கள் எப்போதாவது தன்னம்பிக்கையை இழக்கும்போது, ஜாக்கி, ஷேடோவின் வாழ்க்கைப்பயண வீடியோவை பாருங்கள். வாழ்க்கையின் மீது பெருங்காதலே வந்துவிடும்.
ஜாக்கியும், ஷேடோவும் கலிஃபோர்னியாவில் இருக்கிற பிக் பியர் பள்ளத்தாக்கில் வசித்து வருகிற ஒரு ஜோடி வழுக்கை கழுகுகள். இந்த பள்ளத்தாக்கின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடிகளுக்கும் மேல். கரடிகள், மலை சிங்கங்கள், வழுக்கை கழுகுகள், அரிய வகை தாவரங்கள் என பிக் பியர் பள்ளத்தாக்கு இயற்கையின் செழிப்பான இடங்களில் ஒன்று. சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்ட வழுக்கை கழுகுகளுக்கு, தலையில் வெள்ளை நிறத்தில் முடி இருக்கும். ஆனால், அந்த முடியின் அமைப்பு பார்ப்பதற்கு வழுக்கைபோல இருப்பதால், வழுக்கை கழுகு என்று குறிப்பிடுகிறார்கள். இனி ஜாக்கி, ஷேடோ காதல் கதைக்குள் பயணமாவோம்.
பிக் பியர் பள்ளத்தாக்கு
வழுக்கை கழுகுகள் பிக் பியர் பள்ளத்தாக்குக்கு குளிர்காலங்களில்தான் வரும். ஆனால், முதல்முறையாக ஒரு ஜோடி வழுக்கை கழுகு, பிக் பியர் பள்ளத்தாக்கில் தங்களுக்கென கூடு ஒன்றைக் கட்டியதால், இந்த ஜோடிகளின் வாழ்க்கையை அறிந்துகொள்ள அவற்றை கவனிக்க ஆரம்பித்தார்கள் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி (Friends of Big Bear Valley) என்ற அமைப்பினர். ஆனால், அவர்களால் கூட்டின் வெளிப்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. கூட்டினுள்ளே பார்க்க முடியவில்லை. கூடுக் கட்டிய அந்த கழுகு ஜோடிதான் நம் கதாநாயகி ஜாக்கியின் பெற்றோர்.
இந்த ஜோடிகளின் வாழ்க்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்பிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி அமைப்பினர், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெற்றனர். பிறகு, 12 மாடி அளவு உயர மரத்தில் கேமராவை நிறுவுவதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும், அதை கூட்டில் பொருத்துவதற்கு நிபுணர்களுக்கு பணம் தருவதற்கும் தேவையான டாலரை திரட்ட அந்த அமைப்புக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. அதற்குள், அந்த கழுகு ஜோடி முட்டைகளை இட்டு அவற்றை பாதுகாக்க ஆரம்பித்தன. ஆனால், முட்டையிட்ட சில தினங்கள் கழித்து வீசிய பனிப்புயலில் அந்தக் கூடும், அதிலிருந்த கழுகு ஜோடியும், அதன் முட்டைகளும் என்னவாயின என்று தெரியவில்லை.

அவள்தான் ஜாக்கி
2015-ல் அந்த கழுகு ஜோடி வேறொரு கூடு கட்டி வாழ்ந்துக்கொண்டிருப்பதை கண்டுபிடித்து, அந்தக் கூட்டுக்குள் கேமராவை பொருத்தினர். அந்த கேமரா சூரிய ஒளியால் இயங்கக்கூடியது. இருட்டிலும் அந்த கேமரா தெளிவாக படமெடுக்கும். அதனால், அந்தக் கழுகுகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது என ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கூட்டில் கேமரா பொருத்திய பிறகு, அந்த கழுகு ஜோடியுடன் மூன்று கழுகுக்குஞ்சுகள் அந்தக் கூட்டில் இருப்பதை உலகம் பார்க்க ஆரம்பித்தது. அவற்றில் இரண்டு குஞ்சுகள் வளர்ந்ததும் கூட்டை விட்டுப் பறந்துவிட்டன. அடுத்த சில நாள்களில் அந்தப் பள்ளத்தாக்கில் முதல் முறையாக கூடு கட்டிய அந்தக் கழுகு ஜோடியும் எங்கோ பறந்து சென்றுவிட்டது. கேமரா பொருத்தப்பட்ட அந்தக்கூட்டில் இப்போது ஒரேயொரு பெண் கழுகு மட்டுமே மிச்சம் இருந்தது. அவள்தான் ஜாக்கி.
ஜாக்கியின் தனிமையை போக்க முதலில் வந்தது ஓர் ஆண் கழுகு. அதற்கு ‘Mr. B’ எனப் பேரிட்டனர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி அமைப்பினர். ஆனால், ஒருநாள் இன்னொரு ஆண் கழுகு அங்கே வந்தது. அதற்கு ஷேடோ என பேரிட்டனர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி அமைப்பினர். ‘Mr. B’ ஷேடோவை எதிர்க்க ஆரம்பித்தான். ஆனால், ஷேடோ அங்கிருந்து செல்லாமல் பிடிவாதம் காட்ட, ‘Mr. B’ அங்கிருந்து பறந்தது. ஜாக்கியும், ஷேடோவும் அந்தக்கூட்டில் தங்கள் காதல் வாழ்க்கையை ஆரம்பித்தனர். இதை வீடியோவாக கண்டுகளித்த பலரும், ஒருகட்டத்தில் இந்தக் கழுகு ஜோடியை நேசிக்க ஆரம்பித்தார்கள். இந்தக் கழுகு ஜோடி எப்போது முட்டையிடும் என அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நாள் 2020-ல் வந்தது.

காதலை புதுப்பித்துக்கொண்டே...
2020-ம் ஆண்டு ஜாக்கி முட்டைகள் இட்டாலும், அவை குஞ்சுப் பொரிக்கவில்லை. 2021-ல் இட்ட முட்டைகளோ அழுகி விட்டன. 2022-ல் இட்ட முட்டைகளில் சிலது மலட்டுத்தன்மையுடன் இருந்தன. எஞ்சிய முட்டைகளை காக்கைகள் உண்டு விட்டன. ஆனால், இந்த துன்பங்களெல்லாம், மாறி மாறி தங்கள் முட்டைகளை அடைகாத்த ஜாக்கி, ஷேடோவின் காதலை சிறிதும் பாதிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் கூட்டைப் புதுப்பித்து தங்கள் காதலையும் புதுப்பித்துக்கொண்டே இருந்தனர்.
2023-ம் ஆண்டில் ஓர் அழகான கழுகுக்குஞ்சு பிறந்தது. அதற்கு ஸ்பிரிட் என்று பேரிட்டனர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிக் பியர் வேலி அமைப்பினர். அந்தக் குஞ்சு பறக்கத் தொடங்கிய தருணத்தை நேரடி ஒளிப்பரப்பில் பார்த்த மக்கள், கமென்ட்டில் வாழ்த்து மழை பொழிந்துவிட்டனர். ஸ்பிரிட் கூட்டை விட்டு சென்ற பிறகு, 2024-ல் மீண்டும் முட்டைகளை இட்டாள் ஜாக்கி. ஆனால், ஒரு குஞ்சும் பொரிக்கவில்லை. இந்த வருடம் (2025) ஜனவரியில், ஜாக்கி மூன்று முட்டைகளை இட்டாள். வழக்கம்போல ஜாக்கியும் ஷேடோவும் மாறி மாறி அடைக்காத்தனர். மூன்று முட்டைகளும் பிளந்து கழுகுக்குஞ்சுகள் வெளிவந்த தருணத்தை நேரலையில் பார்த்த மக்கள், இந்த முறையும் வாழ்த்து மழையைப் பொழிந்தனர்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முட்டை பொரிந்து கழுகுக்குஞ்சு வெளிவந்தது. அடுத்த நாள், இரண்டாவது கழுகுக்குஞ்சும் வெற்றிகரமாக முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தது. அதற்கடுத்து மூன்றாவது குஞ்சும் வெளிவந்தது. ஆனால், அதற்கடுத்த நாள்களில் வீசிய பனிக்காற்றில் கழுகுக்குஞ்சுகளின் நிலைமை என்னவானதோ என மக்கள் பதற ஆரம்பித்தனர். அதற்கேற்றார்போல், பனிக்காற்று குறைந்த பிறகு, கூட்டில் இருந்த ஒரு கழுகுக்குஞ்சு காணவில்லை. அது, அம்மா ஜாக்கியின் சிறகுக்குள் இருக்கலாம். அல்லது அப்பா ஷேடோவின் கால்களுக்கிடையே மறைந்துகொண்டிருக்கலாம் என மக்கள் மனதை தேற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு கழுகுக்குஞ்சு அந்தப்பனிக்காற்றில் என்னவானது என்பது யாருக்குமே தெரியவில்லை. அது அந்தக் கூட்டில் இருந்ததற்கான அடையாளமாக அதன் எச்சங்கள் மட்டுமே தற்போது இருக்கிறது.
எத்தனையோ துன்பங்களிலும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜாக்கி, ஷோடோ ஜோடி இந்தத் துன்பத்தையும் கடக்கும் என்று நம்புவோம். இவர்களின் காதல் கதையின் நேரடி ஒளிப்பரப்பை காண வேண்டும் என ஆசைப்பட்டால், Jackie and shadow live என்று தேடிப்பாருங்கள்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


