12,500 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்குத் திரும்பிய Dire Wolf - அழிந்த உயிரினத்தை மீட்டது எப்படி?
12,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் இனம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வெற்றிகரமாக மறு உருவாக்கம் அடைந்த உயிரினம் இதுதான் என்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் செயல்படும், உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் (Colossal Biosciences) Dire Wolf எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய உயிரினத்தை மீண்டும் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது.
Dire என்ற வார்த்தைக்கு `மிக பயங்கரமான என்று பொருள்.
எப்படி உருவாக்கப்பட்டது?
இந்த பனியுக மிருகத்துடன் மிக நெருங்கிய இன்றும் வாழும் உயிரினம் சாம்பல் ஓநாய்கள்.
பண்டைய டயர் ஓநாயின் DNA-வைப் பயன்படுத்தி, குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழிநுட்பத்தின் மூலம் சாம்பல் ஓநாயின் ஜீன்களை மாற்றம் செய்து இதனை உருவாக்கியதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பல் ஓநாயின் செல்களில் மரபணு பகுப்பாய்வு மேற்கொண்டு அதன் மூலம் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் கிட்டத்தட்ட அழிந்துபோன சாம்பல் ஓநாயின் முன்னோரான டயர் ஓநாய் தோற்றத்தில் கலப்பின ஓநாய்கள் பிறந்துள்ளன. மூன்று டயர் ஓநாய்களை உருவாக்கியதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண் ஓநாய்கள் அக்டோபர் 1, 2024ல் உருவாக்கப்பட்டுள்ளன, ஒரு பெண் ஓநாய் ஜனவரி 30, 2025ல் உருவாக்கப்பட்டுள்ளது.
SOUND ON. You’re hearing the first howl of a dire wolf in over 10,000 years. Meet Romulus and Remus—the world’s first de-extinct animals, born on October 1, 2024.
— Colossal Biosciences® (@colossal) April 7, 2025
The dire wolf has been extinct for over 10,000 years. These two wolves were brought back from extinction using… pic.twitter.com/wY4rdOVFRH
Dire Wolf
டயர் ஓநாய்கள் சாம்பல் ஓநாய்களை விட அளவில் பெரியவை, அகலமான தலையுடன் அடர்த்தியான ரோமமும் வலுவான தாடையும் கொண்டிருந்தன.
ஒருகாலத்தில் மிகப் பெரிய வேட்டையாடிகளாக வட அமெரிக்கா முழுவதும் சுற்றி வந்துள்ளன. இப்போதிருக்கும் ஓநாய்களைப் போலல்லாமல் அளவில் பெரிய காட்டெறுமைகள், குதிரைகள் ஏன் மாமூத் யானைகளைக்கூட வேட்டையாடியிருக்கின்றன.
உயிரியல் ரீதியாக மட்டுமல்லாமல் கதைகள் வழியாகவும் இந்த டயர் ஓநாய்கள் மக்களிடம் பேசப்படுபவை. 1854ல் அகழ்வாராய்ச்சிகள் மூலம் இவற்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் இந்த பயங்கர ஓநாய்கள் முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெற்று பேசப்பட்டன.
இப்போது ஆரோக்கியமாக வளர்ந்துவரும் டயர் ஓநாய்கள், எதிர்பார்க்கப்பட்ட குணங்களையே கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதுபோல இன்னும் பல அழிந்த உயிரினங்களை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மாமூத் யானை, டோடோ பறவை மற்றும் டாஸ்மேனிய புலியை மீட்டுருவாக்கம் செய்யும் சோதனைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


