PM Modi: 74 வயதிலும் நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவைதாம் காரணங்கள் - பிரதமர் மோடி

சமீப காலமாக பிரதமர் மோடி மக்களிடையே பாட்காஸ்டில் பேசி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! அந்த வகையில் சமீபத்தில் லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டில், பேசிய பிரதமர் மோடி தனது 74 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க விரதம் இருப்பதாகவும், வெந்நீர் மட்டுமே குடிப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தப் பழக்கத்தை கிட்டத்தட்ட 50 முதல் 55 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Modi PM

இந்து மதம் என்பது சடங்குகள் அல்லது வழிபாட்டு முறைகளை பற்றியது மட்டுமல்ல. அது நம் வாழ்க்கையை வழிநடத்தும் ஒரு தத்துவம். அவற்றில் உண்ணாவிரதமும் ஒன்று. விரதம் என்பது ஒரு சுய ஒழுக்கம். விரதம் இருப்பது நம் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் நம் சிந்தனை மற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும், விரதத்தின்போது நம் புலன்களின் உணர்திறன் கூர்மை ஆகிறது என்கிற பிரதமர், விரதம் தொடங்குவதற்கு முன்னால் உடலை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு அதிகமான தண்ணீர் அருந்துவதாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மழைக்காலங்களில் உணவு செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், இந்தியாவில் பலரும் அந்த காலகட்டத்தில் 24 மணி நேரத்தில் ஒருமுறை மட்டுமே உணவு உண்கிறார்கள். தானும் ஜூன் மாதத்தின் இடையில் ஆரம்பித்து நவம்பர் மாத இறுதிவரை இதையே பின்பற்றுவதாகவும்... செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தொடங்கக்கூடிய நவராத்திரி விழா காலங்களில் முற்றிலும் உணவை தவிர்த்து வெந்நீரை மட்டுமே குடிப்பதாகவும்... மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிற சைத்ர நவராத்திரி (Chaitra Navratri) காலங்களான 9 நாட்களுமே ஒரு நாளைக்கு ஒருமுறை பப்பாளிப்பழத்தைத் தவிர வேறு எந்த உணவையும் உண்பதில்லை. இதுபோன்று, ஆண்டு முழுவதும் நான் பின்பற்றக்கூடிய விரதங்கள் ஏராளம். இவற்றை 50 முதல் 55 ஆண்டுகளாக பின்பற்றி வருவதால்தான் 74 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று அந்த பாட்காஸ்ட்டில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Hot water

மும்பை மருத்துவமனை ஒன்றில் (ஜினோவா ஷால்பி - Zynova Shalby Hospital) டயட்டீஷியனாக பணிபுரியும் ஜினல் படேல் (Jinal Patel), போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நீரேற்றத்துடன் இருப்பது நன்மை பயக்கும் என்று கருதப்பட்டாலும், நீண்ட நேரம் வெந்நீரை மட்டுமே குடிப்பது பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒரு நாளுக்கு மேல் போதுமான உணவை உண்ணாமல் உண்ணாவிரதம் இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுகள், சோர்வு, குமட்டல் மற்றும் தசையிழப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சுடு நீர் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. எனவே, உடல்நல பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இதை தவிர்க்க வேண்டும். உங்கள் உணவியல் முறையில் ஏதேனும் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு அவரவர் குடும்ப உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது என்றிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.