கேரளா தெருநாய்களை தமிழ்நாட்டில் விட்டுச் செல்லும் ஏஜெண்டுகள்... மடக்கிப் பிடித்த மக்கள்!

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் சுற்றிதிரியும் தெருநாய்கள் கடிப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுத்துவந்தாலும் தெருநாய்களின் எண்ணிக்கையும் தொல்லையும்அதிகரித்து வருகிறது.

இதே நிலைதான் கேரளாவிலும் உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேரளாவில் எதிர்கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சில ஏஜெண்டுகள் கேரளா தெருநாய்களை பிடித்துவந்து தமிழக எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் விட்டுச்செல்வது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்களை விட்டுச் சென்றது சம்பந்தமாக போலீஸ் விசாரணை

குமரியில் விடப்பட்ட கேரளா தெருநாய்கள்

கேரளா எல்லையில் உள்ள களியல் அருகே கட்டச்சல் பகுதியில் கேரளா பதிவு கொண்ட டெம்போ டிராவலர் வாகனத்தில் இருந்து தெருநாய்களை இறக்கி விடுவதை நேற்று அப்பகுதி மக்கள் பார்த்தனர். என்னவென்று விசாரிக்க மக்கள் அந்த பகுதிக்குச் சென்றபோது அந்த வாகனம் திடீரென புறப்பட்டுச் சென்றது.

அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து, ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும்,  அந்த டெம்போ டிராவலர் வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மற்றொருநபர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அங்குசென்று விசாரணை நடத்தினர்.

சோதனைச்சாவடி கண்காணிப்பு..?

போலீஸ் விசாரணையில் பைக்கில் வந்தவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த அபு எனவும், வன்னியூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும் தெரியவந்தது. டெம்போ டிராவலர் வாகனத்தில் வடமாநில தொழிலாலர்கள் இருவர் இருந்தனர். அபு கேரளாவில் இருந்து நாய்களை எடுத்துவந்து தமிழ்நாட்டில் விட்டுச் செல்லும் ஏஜெண்டுகளில் ஒருவர் எனவும் தெரியவந்தது. அதே சமயம், களியல் பகுதியில் வீட்டுச்சென்ற நாய்களை திருப்பி பிடித்துச் செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் கேரளாவில் இருந்து கொண்டுவந்து விடப்பட்ட 8 நாய்களை பிடித்து மீண்டும் டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனம் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

மீண்டும் பிடிக்கப்பட்ட தெரு நாய்கள்

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நாய்களை அனுப்பிவைத்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோல்டன் பாலஸ் நிறுவனத்தினருக்கு கடையால் பஞ்சாயத்து செயல் அலுவலர் கந்தசாமி 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். தெருநாய்களுடன் வந்த வாகனம் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள நெட்டா சோதனைச்சாவடி வழியாக தான் தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதை தடுக்க சோதனைச் சாவடிகளில் தீவிர காண்காணிப்பு மேற்கொண்டுவரப்படுகிறது. அதே சமயம் சோதனைச்சாவடியில் இருந்த போலீஸாரின் கண்காணிப்பை தாண்டி நாய்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.