``கட்சி கொடி கம்பங்களை அகற்ற அவசரம் ஏன்? திமுக மேல்முறையீடு செய்ய வேண்டும் - சிபிஎம்., சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 தேதி வரை மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கருத்தரங்கு மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், "கடந்த ஜனவரி 27 அன்று சென்னை உயர் நீதிமன்ற கிளை, பொது இடத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

சிபிஎம்., சண்முகம்

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தும் வகையில் திமுக கொடி கம்பங்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு கணக்கு கொடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். துரைமுருகனின் இந்த அறிவிப்பு எங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்திருக்கலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து இதை ஏற்பதா நிகாரிப்பதாக அல்லது மாற்றுவழி என்ன என்பது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் தன்னிச்சையாக கொடி கம்பங்களையெல்லாம் நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என அறிவிக்கிறார்கள்.

தேனியில் நடந்த கூட்டம்

இதையெல்லாம் கேட்கும் துரைமுருகன் என் கட்சிக்காரங்களுக்கு தானே உத்தரவு போட்டேன் என நக்கல் நய்யாண்டியாக கேட்கக்கூடிய தலைவர் தான். நீதிமன்றத்தின் உத்தரவில் 12 வாரங்களில் கொடிகம்பங்களை அகற்றவில்லை என்றால், போலீஸார் அகற்ற வேண்டும் அதற்குரிய கட்டணத்தை அந்தந்த கட்சிகளிடம் வசூல் செய்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் மீது நீதிபதிகளுக்கு என்ன காண்டு எனத் தெரியவில்லை சமீபகாலமாகவே ரொம்ப எல்லை மீறி செல்கின்றனர்.

திமுகவிற்கான சொந்தப் பிரச்சனையா இது? எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. எங்களுக்கு 10 என்றால் உங்களுக்கு 150 கொடி கம்பங்கள் இருக்கு. திமுக, அஇஅதிமுகவினர் தான் மிகப்பெரிய கிரேன் மூலம் ஏற்றி இருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை ஏற்கிறோம்.

ஏறத்தாழ எஸ்.சி எஸ்.டி கான பணியினை நிரப்பச் சொல்லி 10 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. அதை செய்ய முடியவில்லை. ஏன் கொடி மரத்தை எடுக்க பார்க்கிறீர்கள். இது மாதிரி எத்தனையே உத்தரவினை அமல் படுத்தாத ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக கருத்து வெளியிட்டிருப்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

கூட்டத்தில் பேசிய சண்முகம்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு கேட்டு அனுமதி கேட்டால் பணிக்கு வரக்கூடிய காவல்துறைக்கு அரசியல் கட்சிகள் கட்டணம் வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளிப்பது என்ன நியாயம். திமுக கூட்டம் என்றால் குறைந்த 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் டிஜிபி முதல் காவலர் வரை வருகிறார்கள். நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் திமுக அமல்படுத்தினால் எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே இது குறித்து அனைத்து கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.