Digital Arrest: ``சிக்கினது நான் இல்லடா... நீ - ஊடகவியலாளரிடம் ஏமாந்த சைபர் கொள்ளையன்!
சமீப காலமாக டிஜிட்டல் கைது, சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறை அதிகாரியையே டிஜிட்டல் கைது செய்ய முயன்ற சம்பவங்கள் எல்லாம் இந்தியாவில் நடந்திருக்கிறது. அப்படி ஒரு முயற்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு நடந்திருக்கிறது. அதை அவர் திறம்பட கையாண்டு, திருடனிடமே ரூ.10,000 வாங்கியிருக்கிறார். இது எப்படி நடந்தது என்பதை உத்தரப்பிரதேச ஊடகவியலாளர் பூபேந்திர சிங் விளக்குகிறார். ``மார்ச் 6, அன்று எனக்கு திருமண நாள். நானும் என் மனைவியும் வெளியே செல்வதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு கால் வந்தது. தொந்தரவு பொறுக்க முடியாமல் அந்த காலை எடுத்துப் பேசினேன். எதிர்புரத்தில் பேசியவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டார்.
மேலும், நான் ஆபசமாக சித்திரித்ததாக 48 மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை எனக்கு அனுப்பி, இந்த விவகாரம் தொடர்பாக நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்றார். சற்று அதிர்ச்சியடைந்து குழம்பினேன். பிறகுதான் எனக்குப் புரிந்தது, இதுபோன்ற வழக்குகளை சிபிஐ விசாரிக்காது. இதை உள்ளூர் காவல்துறை அதிகாரிகள்தான் விசாரிப்பார்கள். எனவே, இது மோசடி அழைப்பு என்பதை உணர்ந்தேன். உடனே கூகுள் லென்ஸ் மூலம் எனக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை சோதித்ததில் நான் சந்தேகப்பட்டது உண்மையானது.
இதற்கிடையில் மீண்டும் அந்த நபர் அழைத்தார். இந்த வழக்கை முடித்து வைக்க ரூ.16,000 செலவாகும். அந்தப் பணத்தைக் கொடுத்தால் விடுவிக்கிறேன் என்றார். நானும், என்னால் அவ்வளவுப் பணத்தை உடனே கொடுக்க முடியாது. நான் ஏழை, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் ரூ.40,000 மதிப்பிலான நகை மட்டுமே இருக்கிறது என்றேன். உடனே அந்த நபர், ``அப்படியானால், அதை விற்று அந்தப் பணத்தை எனக்குக் கொடு" என்றார். சற்று யோசித்தப் பிறகு, ``அந்த நகை என்னிடம் இல்லை... அடகு கடையில் ரூ.3000-க்கு அடகு வைத்திருக்கிறேன்" என என்னுடைய பழைய அடகு சீட்டு ஒன்றைக் காண்பித்தேன். மேலும், "இப்போது அந்த நகையை மீட்கவும் என்னிடம் பணம் இல்லை" என்றேன்.

உடனே அந்த நபர், "சரி நான் உனக்கு அந்தப் பணத்தை அனுப்புகிறேன். நகையை மீட்டு, அதைவிற்று எனக்கு பணத்தைக் கொடு" என்றார். அதுபோலவே என் UPI கணக்குக்கு ரூ.3000 அனுப்பி வைத்தார். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அந்த மோசடி நபர் அழைத்து நகை குறித்து கேட்டார். அப்போது நான், "அடகு கடைக்காரர் என்னுடைய அவசரத்தை புரிந்துகொண்டு மேலும், ரூ.5000 வேண்டும் என்கிறார். என்னிடம் ரூ.5000 இல்லையே" என்றேன். உடனே அவர், "தேவைப்படும் பணத்தையும் அனுப்புகிறேன்" எனக் கூறி மீண்டும் ரூ.4,980 அனுப்பினார்.
மார்ச் 10-ம் தேதி மீண்டும் அந்த நபர் அழைத்தார். அப்போது, நான், "அந்த நகையை மீட்டுவிட்டேன். ஆனால், அதை வைத்து ஒரு நிறுவனத்தில் ரூ.1.10 லட்சம் கடன் கேட்டேன். அவர்கள் புராசஸ் பீஸாக ரூ.3000 கேட்கிறார்கள்" என்று, என் நண்பன் வேலை செய்யும் நிறுவனத்தின் பேப்பரையும் காண்பித்தேன். இப்போதும் அந்த நபர் ரூ.3000 அனுப்பினார். மொத்தம் ரூ.10,980 மோசடி நபரிடமிருந்து பெறப்பட்டது. பணம் வந்தவுடன் நான் அந்த இணைப்பை துண்டித்துவிட்டேன். அவர் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். நான் அந்த அழைப்புகளை துண்டித்துக்கொண்டே இருந்தேன்.
ஒருகட்டத்தில் எனக்கு எந்தப் பணமும் வேண்டாம். நான் அனுப்பிய பணத்தை மட்டுமாவது திருப்பிக் கொடு எனக் கெஞ்சத் தொடங்கினார். அதன் பிறகுதான் எங்களின் உரையாடல் உள்ளிட்டவைகளை ஆதாரமாக வைத்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தேன்." என்றார்.
இது தொடர்பாக கான்பூர் கமிஷனர் அகில் குமார், ``இந்த வழக்கு சைபர் துப்பறியும் நபர்களால் விசாரிக்கப்படுகிறது. புகார்தாரருக்கும் மோசடி செய்பவருக்கும் இடையிலான பரிவர்த்தனைகள், வங்கி விவரங்கள், அவரது தொலைபேசி எண், வீடியோ மற்றும் ஆடியோ தொடர்பு ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட்களை நாங்கள் சேகரித்துள்ளோம். விரைவில், மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர் விரைவில் சிக்குவார். இவர் ஊடகவியலாளர் என்பதால் இந்த சிக்கலை சுதாரிப்புடன் கையாண்டிருக்கிறார். ஆனால், பொதுமக்கள் சற்று கவனமாக இருக்கவும். மேலும் சைபர் குற்றவாளிகளை நேரடியாக எதிர்கொள்வது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்" என எச்சரித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


