வேர்க்கடலை குழம்பு செய்முறை

வீட்டில் இருக்கக் கூடிய காய்கறிகளை பயன்படுத்தி என்ன குழம்பு வைப்பது என்றுதான் நம்மில் பலரும் யோசிப்போம். காய்கறிகளே இல்லாத சமயத்தில் சத்து மிகுந்த வேர்க்கடலையை வைத்தும் நாம் குழம்பு செய்யலாம். வேர்க்கடலையில் புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, விட்டமின்கள் போன்ற பலவிதமான உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. பொதுவாக வேர்க்கடலையை அவித்தோ வருத்தோ சாப்பிடுவோம். அப்படி செய்யாமல் பச்சை வேர்கடலையை வைத்து சூப்பரான முறையில் குழம்பு செய்யலாம். அந்த குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1/4 கிலோ
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1/4 மூடி

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம் மூன்றையும் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து, வெந்தயம் சிவந்த பிறகு நீளவாக்கில் நறுக்கிய பூண்டு பற்களை அதில் போட வேண்டும். பிறகு வெங்காயத்தை அப்படியே போட்டு கருவேப்பிலையையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி அதில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இதில் 2 தக்காளியை சேர்த்து இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து தக்காளி நன்றாக குழையும் வரை வதக்க வேண்டும். தக்காளி குலைந்த பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போன்றவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாடை போன பிறகு இதில் வேர்க்கடலையை போட்டு நன்றாக பெரட்டி விட வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து புளியை கரைத்து அதில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு பத்து நிமிடம் வேர்க்கடலை வேகம் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். வேர்கடலை நன்றாக வெந்த பிறகு கால் மூடி தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து, அரைத்த அந்த தேங்காய் விழுதை குழம்பில் ஊற்றி விட வேண்டும். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். சுவையான வேர்க்கடலை குழம்பு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கம்பு பால் பாயாசம் செய்முறை

தானிய வகைகளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும். அதே போல் தான் பருப்பு வகைகளையும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வேர்க்கடலையை வைத்து இப்படி ஒரு முறை குழம்பு வைத்து பாருங்கள். குழம்பு எப்படி காலியானது என்று தெரியாமல் போய்விடும்.

The post வேர்க்கடலை குழம்பு செய்முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.