`டிக்கெட் கவுன்ட்டர் உனக்கு; குடிநீர் தொட்டி எனக்கு இரு மாநிலங்களுக்குப் பொதுவான ஒரே ரயில் நிலையம்
இந்தியாவில் பயணம் செய்ய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன என்பது தெரியும், ஆனால் இங்கு ஒரு ரயில் நிலையம் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
நவாபூர் நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் 2 மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. எல்லை என்றவுடன் தூரம் என்று எண்ண வேண்டாம், டிக்கெட் கவுன்ட்டர் மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்தில் அமைந்திருக்கும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா?
இந்த ரயில் நிலையம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்கள் அணுகக்கூடியதாக உள்ளது. நவாபூரில் உள்ள ரயில்வே பிளாட்பாரம் மாநில எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்டு, பயணிகள் ஒரு மாநிலத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து மற்ற மாநிலத்திற்குள் நுழையும் வண்ணம் உள்ளது.
இரண்டு மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது டிக்கெட் கவுண்டர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் தான்.
நவாபூர் ரயில் நிலையத்தின் மற்றொரு அம்சம், அதன் பன்மொழி அணுகுமுறை ஆகும். நிலையத்தில் அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் வரும் பயணிகள் சுமுகமான பயண அனுபவத்தை பெறுகின்றனர். நிலையத்தில் உள்ள தகவல் பலகைகளும் இந்த நான்கு மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.
நவாபூர் நிர்வாக அம்சங்களில் மட்டுமல்ல, அதன் வசதிகளிலும் பிரிக்கப்பட்டுள்ளது. ரயில் காவல் நிலையம் மற்றும் கேட்டரிங் சேவைகள் மகாராஷ்டிரா நந்துர்பார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காத்திருப்பு அறை, தண்ணீர் தொட்டி மற்றும் கழிப்பறைகள் குஜராத் தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மொத்தம் 800 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த ரயில் நிலையம், 300 மீட்டர் மகாராஷ்டிராவிலும், 500 மீட்டர் குஜராத்தின் எல்லையிலும் உள்ளது.
நவாபூர் ரயில் நிலையம் முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஒருங்கிணைந்த மும்பை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது.
பின்னர் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இரு தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மே 1, 1961 அன்று, நவாபூர் ரயில் நிலையம் இந்த இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்தது.
அப்போதிருந்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கலாசார மற்றும் நிர்வாக எல்லைகளை அழகாக இணைக்கும் இடமாக இது ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


