தோழன் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

வீட்டுக்குச் செல்லவே பிடிக்கவில்லை. “மதியம்போல அனுமதி வாங்கிட்டு வீட்டுக்கு வாடி” என்றிருந்தாள் அம்மா. பெண் பார்க்கும் படலம் இன்றும். இது எத்தனையாவது முறை? மறந்துகூட போய்விட்டது. போன் அடிக்கடி வர ஆரம்பித்தது. அம்மாதான். படக்கென்று போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன்.  

“கனிகா மேடம் உங்களை விசாரிச்சுகிட்டு மாதவன்னு ஒருத்தர் ரிசப்சன்ல காத்திருக்கார்” ரிசப்னிஸ்ட் சொன்னாள். எனக்குத் திடுக்கென்றது. மாதவன் என்று யாரையும் தெரியாது. அலுவலகம் தேடி இதுநாள்வரை யாரும் வந்ததில்லை. ரிசப்சனை நெருங்கினேன்.

என்னைக் கண்டதும் ஒரு இளைஞன் கையில் சிறிய பேக்கோடு சட்டென்று எழுந்து நிற்பதைப் பார்த்தேன். “யார் நீங்க?” என்றேன். “உங்ககிட்டே தனியா பேசனுங்க” என்றான். தனியாகச் சென்றோம் “செல்லுங்க யார் நீங்க?”.

“இன்னைக்குப் பெண் பார்க்க உங்க வீட்டுக்குப் போயிருந்தோம்” என்றான். அடப்பாவி வீட்டுக்கு வரலைன்னு தெரிஞ்சதும் ஆபிஸுக்கே பொண்ணு பார்க்க வந்துட்டாம்பா. மனம் கிண்டலடித்தது.

“எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைங்க” என்றேன் படீரென்று. மென்மையாகச் சிரித்தான். எனக்குக் கடுப்பாக இருந்தது. “கோபமா பாக்காதீங்க” கைப்பையைத் திறந்து ஒரு புக்லெட்டை எடுத்தான். “இதுல சில கேள்விகளை எழுதியிருக்கேன். உங்களுக்குத் தெரிஞ்ச பதிலுங்களை டிக் அடிக்கவும் சுருக்கமாக எழுதவும் செஞ்சா போதுங்க” என்றபடி நீட்டினான்.

சித்தரிப்புப் படம்

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் வாங்காமல் முறைத்தேன்.

 “நான் உங்களை நிறைய தடவை பாத்திருக்கேன்”

ரோட்ல போனா பல பேர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கதான் செய்வாங்க. சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை.

“பிடிச்சுப் போய்தான் பொண்ணுக் கேட்டு வீட்டுக்கு வந்தேன். நீங்க வரலை. ஜாதகம் பார்த்துப் பண்றதைவிட ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டுப் பண்ற கல்யாணம் நல்லாருக்கும் இல்லீங்களா?” என்றவனிடம் இருந்து என்னையும் அறியாமல் புக்லெட்டை வாங்கினேன். முதலில் இவனை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வித்யா  கையிலிருந்தப் புக்லெட்டைப் பிடுங்கினாள். ‘பெயர் மாதவன் ஊர் முசிறி. உங்களிடம் சில கேள்விகள்’ என்று படித்தவள், “ட்டீ உன்னைப் பொண்ணு பார்க்க வந்தவரா ரிசப்சன்ல காத்திருந்தார்” என்றாள்.

“உனக்கு எல்லாம் கொழுப்புடி. வீட்ல பொண்ணுப் பார்க்க வைக்கிற வைபோகம் காலங்காலமா நடக்கிறதுதானே? எனக்கெல்லாம் முப்பத்தியொன்னாவது முறைதான் ஆச்சு” என்று பாட்டி கணக்காகச் சொல்லிவிட்டுப் புக்லெட்டைப் புரட்டினாள். “யேய் இங்க பாரேன். கோபம் வந்தா என்ன பண்ணுவீங்கன்னு ஒரு கேள்வி” 

திடுக் என்றுதான் இருந்தது. “ம்ம்.. கிணத்துல வுழுந்துடுவேன்”  கடுகடுத்தேன்.

“உனக்கு ஆனாலும் இந்த மதப்பு ஆகாதுடிம்மா. எவ்வளவு தன்மையா எக்கசக்கமா கேட்டுருக்காருடி. பாரேன் உனக்குப் பிடிச்ச எழுத்தாளர்... பிடிச்ச பத்திரிகை... எந்த ஓடிடி பிடிக்கும்... பேஸ்புக்ல இருக்கீங்களா... அடேங்கப்பா கனிகா விட்றாதடி” என்றாள்.

சித்தரிப்புப் படம்

இவள் என்ன கிறுக்கியாக இருக்கிறாள். எத்தனை முறை ஏதேதோ காரணங்கள் சொல்லி எத்தனை பேர் நிராகரித்து இருக்கின்றனர். பொண்ணு ரொம்ப கறுப்புங்க. ரொம்ப படிச்ச பொண்ணா இருக்கே. இவ்வளவுதான் போடுவீங்களா. எல்லாம் உங்கப் பொண்ணுக்குதானே போடப்போறீங்க. எப்படியெப்படியான காரணங்கள். போங்கடா போய் கோலார் தங்கவயலை பையனுக்கு கட்டி வைங்கடா..

“என்னடி முணுமுணுக்கிறே?” என்றாள் வித்யா. புக்லெட்டை என் கைப்பையில் வைத்தாள். பையிலிருந்த புத்தகத்தை வெளியே எடுத்தாள். “வானம் நிலவு அருகில்’...” புத்தகத் தலைப்பைப் படித்துவிட்டு, “என்னடி உனக்குப் பிடிச்சக் கவிதைப் புத்தகமா... படிச்சிட்டீயா?” என்றாள்.

அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. இரண்டு மணிநேரம் பர்மிசன் கேட்டுவிட்டுக் கிளம்பி பூங்காவுக்கு வந்தேன். ஒரே டென்சனாக இருந்தது. கைப்பையைத் திறந்தேன். புக்லெட் கண்ணில் பட்டது. கைப்பையை எரிச்சலோடு மூடினேன். கவிதைப் புத்தகத்தைப் படிக்கவும் சிந்தனை வரவில்லை. தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ள புக்லெட் கேள்விகளோடு வந்திருக்கிறான். இதற்கெல்லாம் வேறு ஆளைப் பாருங்கப்பா. கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே எனக்குக் கிடையாது.

வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா முகத்தை விலுக்கென்று திருப்பிக்கொண்டாள். அப்பா மௌனமாகப் பார்த்துவிட்டு செல்போனிற்குள் மூழ்கினார். 

“எங்களுக்கும் வயசாச்சுல்லே. உனக்கு ஒரு....” அம்மா சொல்லி முடிப்பதற்குள் சீறினேன். “எத்தனை பேர் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. நான் அப்படி ஒருத்தரைப் பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதா?”

“அப்படியில்லேம்மா... நல்லமாதிரி தெரிஞ்சார். உன் ஆபிஸ் பத்திகூட சொல்லியிருந்தேனே” என்று அப்பா என்னைப் பார்த்தார்.

“ஓ... உங்க வேலைதானாப்பா. வந்தார் பிடிக்கலைன்னு சொல்லி அனுப்பிட்டேன்” என்றேன் வெடுக்கென்று.

அடுத்த நாள் வேலை மும்முரத்தில் இருந்தேன். “கனிகா மேடம் நேத்து வந்தவர் இன்னைக்கும் வந்துருக்கார்” எனக்குக் கோபம் தலைக்கேறியது. வேகமாக எழுந்தேன்.

“என்னைப் பார்த்ததும் உங்களுக்குக் கோபம் வரும். வேற வழி இல்லீங்க” என்று சிரித்தபடி தனது பேக்கினைத் திறந்து ஒரு புக்லெட்டை எடுத்தான்.

“மறுபடியுமா?” என்று என்னையும் அறியாமல் சொன்னேன்.

“இதுல உங்கக்கிட்டே கேட்டிருந்த கேள்விகளுக்கான என்னைப் பத்தின பதிலுங்க இருக்கு. நீங்க உங்க பதிலை எழுதியிருப்பீங்கன்னு நம்பறேன். என் பதிலுங்களையும் உங்க பதிலுங்களையும் ஒப்பிட்டுப் பாருங்க” என்றபடி நீட்டினான்.

 “ஒப்பிட்டு ஒத்துவரலைன்னா” என்றபடி தன்னிச்சையாக புக்லெட்டை வாங்கிவிட்டேன். 

 “ஒத்துவரலைன்னா விலகிக்கலாங்க” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. நேற்று கொடுத்த புக்லெட்டை எடுத்து நிரப்ப ஆரம்பித்தேன். உங்களுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம் என்றிருந்ததில், ‘வானம் நிலவு அருகில்’ என்று எழுதினேன். சட்டென்று அவன் என்ன பதில் எழுதி இருக்கிறான் என்று தெரிந்துக்கொள்ள இன்று தந்த புக்லெட்டைப் புரட்ட ஆரம்பித்தேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.